• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சங்கர மடத்தை ஏன் காப்பாற்ற வேண்டும்?

By Staff
|

காஞ்சி சங்கர மடாதிபதி ஜயேந்திரரைக் கைது செய்ததால் இந்து மதத்துக்கு ஆபத்து என்று பி.ஜே.பி தலைவர்கள் சொல்வது சரியா ?

முதலில் இந்த வழக்கும் கைதும் ஜயேந்திரர் இந்து மதத் துறவி என்பதற்காகப் போடப்படவில்லை. அவர் ஒரு கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்பதேகுற்றச்சாட்டு. அவருடைய மதக் கருத்துக்கள் எதற்காகவும் அவர் மீது வழக்கு போடவில்லை.

ஒரு இந்து மடாதிபதியை கைது செய்வது இந்து மதத்துக்கு விரோதமானது இல்லையா ?

இல்லை. அந்த மடாதிபதி சட்டப்படி குற்றம் செய்திருந்தால், அதை மூடி மறைப்பதுதான் மதத்துக்கு எதிரானது. தவிர கொலை செய்யப்பட்ட காஞ்சிவரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகி சங்கர் ராமனும் இந்துதான். ஜயேந்திரரைப் போலவே பிராமண அய்யர் வகுப்பில் பிறந்தவர்தான். பட்டப்பகலில்அவரை கோவிலுக்குள்ளேயே வெட்டி சாய்த்தபோது ஏன் பி.ஜே.பிகாரர்கள் இந்து மதத்துக்கு ஆபத்து என்று குரல் எழுப்பவில்லை ?

ஏன் அவர் கொலை செய்யப்பட்டார் ?

தனிப்பட்ட சொத்து தகராறோ குடும்பத் கராறோ அல்ல. சங்கர்ராமன் தொடர்ந்து சங்கர மடத்தையும் ஜயேந்திரரையும் சின்னவர் விஜயேந்திரரையும்அவர் தம்பி ரகுவையும் விமர்சித்து கடிதங்கள் எழுதி வந்தார். மடத்தின் ஒழுக்கங்களுக்கு விரோதமாக இவர்கள் செயல்பட்டதாகவும் நிதி முறைகேடுகள்இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வழக்கு தொடுக்கப் போவதாகவும் எச்சரித்தார். அப்படி எச்சரித்து கடிதம் எழுதிய சில நாட்களில்கொல்லப்பட்டார்.

ஜயேந்திரர் கைதுக்கு வடக்கே சாதுக்களும் பி.ஜேபி தலைவர்களும் எதிர்ப்பு காட்டும் அளவுக்கு ஏன் தமிழ் நாட்டில் இல்லை ?

ஜயேந்திரர் தமிழக மக்கள் எல்லாராலும் ஏற்கப்பட்ட ஆன்மிக வழிகாட்டி அல்ல. எல்லா இந்துக்களுக்கும் தலைவர் அல்ல. பிராமணர்களிலும்வைணவர்களுக்கு அவர் குரு அல்ல. அய்யர்களிலும் அவரை ஏற்காமல் சிருங்கேரி சஙக்ராச்சாரியை பின்பற்றுவோர் அதிகம் உண்டு. எனவே காஞ்சி மடம்பிராமணர்களில் ஒரு சிறு பிரிவினரின் ஆதரவைப் பெற்ற மடம் மட்டுமேயாகும். அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பக்தர்களாக இருந்ததால்மீடியாவில் அந்த மடத்துக்கு அதிக விளம்பரம் கிடைத்து பிரபலப்படுத்தப்பட்டது. மக்கள் செல்வாக்கு எதுவும் இல்லை. கலைஞர் கருணாநிதியைக் கைதுசெய்தால் தி.மு.கவினரும் ஜெயலலிதாவைக் கைது செய்தால் அ.இ.அ.தி.முகவினரும் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார்களோ அதே போல தங்கள் ஆள் கைதுசெய்யப்பட்டதற்காக ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார் வகையறாக்கள் வடக்கே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு ரவுடி சாமியாருக்காக இதர ரவுடிசாமியார்கள் எதிர்ப்பு காட்டுகிறார்கள். மசூதியை இடிப்பதும், விமர்சனம் செய்யும் பக்தரைக் கொலை செய்வதும் மெய்யான ஆன்மிகவாதிகள் செய்யும்காரியங்கள் அல்ல.

Jayendrarஜயேந்திரர் தலித்துகளை அரவணைத்ததால்தான் பழமை விரும்பிகள் அவருக்கு எதிராக திரண்டு, இப்போது மடத்தை விஜயேந்திரர் வசம் ஒப்படைத்துவிட சதிசெய்வதாக கூறப்படுவது உண்மையா ?

சங்கர மடம் எந்த நாளிலும் தலித் ஆதரவு மடம் அல்ல. ஜயேந்திரரின் குருவாக இருந்த காலஞ்சென்ற பெரியவர் பரமாச்சாரியார் எனப்படும் சந்திரசேகரேந்திரர் ஹரிஜனங்களை ஆலயத்தில் நுழைய அனுமதிக்கும் போராட்டத்தை எதிர்த்தார். காந்திஜி கேட்டுக் கொண்டும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.இதை எப்படி எழுத்தாளர் கல்கி அப்போது ஆனந்தவிக்டனில் தலையங்கம் எழுதிக் கண்டித்திருக்கிறார் என்பதை முன்பே சுட்டிக் காட்டியிருக்கிறேன்.அண்மையில் எழுத்தாளர் உஷா சுப்பிரமணியன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்த ஒரு தகவல் இது. அவர்கள் குடும்பம் மரபாக சங்கர மடத்தின்பக்தர்களாக பெரும் நன்கொடையாளர்களாக இருந்தவர்கள். காலஞ்சென்ற சந்திரசேகரேந்திரர் சென்னை வரும்போது அவர்கள் வீட்டில் தங்குவதுவழக்கம். சிறுமியாக இருந்தபோது உஷா சுப்பிரமணியன் கண்ட காட்சி இது : காமராஜரின் அமைச்சரவையில் இருந்த தலித் அமைச்சர் கக்கன்சங்கராச்சாரியாரைப் பார்க்க வந்தார். அவரை வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. தீண்டத்தகாதவனை சாஸ்திரப்படி நேரில் பார்த்தால் தீட்டுஎன்பதால் வெளியே திறந்த வெளி மைதானம் ஒன்றில் நடுவே மாட்டைக் கட்டி வைத்து தண்ணீர் தொட்டி வைத்து ஒரு பக்கம் கக்கனை உட்காரவைத்துவிட்டு மறுபக்கம் உட்கார்ந்துதான் சங்கராச்சாரி சந்தித்தார். விதவையானதால் இந்திரா காந்தியையும் அப்படி கிணற்றுக்கருகில்தான் சந்தித்தார். ( ஆறு,குளம் போன்ற நீர் நிலைகளின் மறு கரையில் இருந்தோ மாட்டுத்தொழுவத்திலோதான் தலித்துகள், விதவைகளை சந்திக்கலாமாம். இடையில் தண்னீர்இருப்பது தீட்டுக்கு பரிகாரமாம்).

அப்படியானால் ஜயேந்திரர் தலித் சேரிகளுக்கெல்லாம் சென்றதும் அவர்களுக்குக் கோவில் கட்டிக் கொடுத்ததும் பெரியவரை விட இந்த விஷயத்தில்அவர் முற்போக்கானவர் என்பதைத்தானே காட்டுகிறது ?

ஜயேந்திரர் சேரிகளுக்குச் சென்றது தலித்துகளை திரட்டி முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான். சேரிக்கு தேர்வராததற்குக் காரணம் தலித்துகள் குளிக்காமல் இருப்பது தான் என்று சொன்னவர் அவர். ஏற்கனவே உள்ள கோவில்களில் தலித்துகளுக்கு உரிமைதராமல் மறுக்க சாமர்த்தியமாக அவர்களை தனிக் கோவில்கள் கட்டிக் கொள்ளச் சொன்னார். தவிர அவர்கள் ஏற்கனவே வழிபடும் கிராமக்கடவுள்களை சமஸ்கிருதப்படுத்தும் வேலையிலும் அவரும் ஆர்.எஸ்.எஸ்சும் ஈடுபட்டார்கள். அதே சமயம் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் , ஒடுக்குமுறைகள் பற்றியோ , பாப்பாப்பட்டி, கீரிப் பட்டி தேர்தல் பிரச்சினைகளிலோ கருத்து சொல்வதைத் தவிர்த்தவர். ஆனால் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பில்தலையிட்டு ராமர் கோவில் கட்ட வழி தேடியவர். தலித்துகள் முஸ்லிம்களாகவோ கிறித்துவர்களாகவோ மதம் மாறிவிடக்கூடாது என்பது மட்டுமே

அவர் கவலை. பிராமணர் வீட்டில் வளர்ந்து வேதம் படித்த ஒரு தலித் பையன் சங்கராச்சாரியால் அடுத்த மடாதிபதியாக வாரிசுப் பட்டம் சூட்டப்படுவதாக பிராமணஎழுத்தாளர் மாலி எழுதிய நாடகத்தைக் கண்டித்தார். அந்த நாடகத்தை இனி நடத்தக்கூடாது என்று தடுத்து அவரையே நேரில் அழைத்து மிரட்டினார்.

தலித்துகள் மீது அக்கறை உள்ளவரானால், சங்கர மடத்தில், படித்த, தினம் குளிக்கிற பத்து தலித்துகளுக்கு வேலை போட்டாவது கொடுத்திருக்கலாமே.மடத்தின் சிறீகாரியம் நீலகண்ட அய்யர். மேலாளர் சுந்தரேசன் அய்யர். உதவியாளர் நெய்வேலி கிருஷ்ணமுர்த்தி அய்யர். கணக்காளர் விசுவநாதன் அய்யர். எழுத்தர்சேதுராமன் அய்யர். காமாட்சிசத்திர மேலாளர் விசுவநாத அய்யர். ஒரு தலித் குமாஸ்தா கூடவா அவருக்குக் கிடைக்கவில்லை ? தலித்துகளுடன் ஜயேந்திரர்நண்பர் வேடம் போட்டது ஆர்.எஸ்.எஸ்சின் திட்டத்தின் ஒரு பகுதிதான். குஜராத், மத்தியப்பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் தலித்துகளை பழங்குடிகளைமுஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருகிறது. இங்கேயும் அதைச் செய்ய சங்கராச்சாரியைக் கொண்டுமுயற்சிக்கிறார்கள்.

ஒரு துறவி இப்படி கொலை செய்திருப்பாரா என்ற கேள்வி பலர் மனதிலும் இருக்கிறது. இதை நம்ப முடியவில்லையே என்று பலரும் சொல்லுகிறார்களே ?

அப்படிப்பட்ட அப்பாவி பக்தர்களை நம்பித்தான் இப்படிப்பட்ட போலி ஆன்மிகவாதிகள் பிழைத்து வருகிறார்கள். பல சமயங்களில் ஒருவர் இன்ன காரியம்செய்திருப்பாரா மாட்டாரா என்பதை ( வேரு ஆதாரம் கிடைக்கும்வரையில்) எந்த அடிப்படையில் மதிப்பிடுகிறோம் ? அவர்களுடைய கடந்த காலநடத்தையிலிருந்துதானே. ஒருவர் கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும், அதைத் திருத்திக் கொண்டு விட்ட அடையாளம் தெரிந்தால், அவரை பற்றியமதிப்பீடு மாறலாம். ஜயேந்திரர் வகையறாக்களின் கடந்த கால நடத்தை எப்படிப்பட்டது ?

சன்யாசி என்பவர் சன்யாசம் வாங்கும்போதே மண், பொன், பெண் ஆசைகளிலிருந்தும் குடும்ப பந்தங்களிலிருந்தும் தன்னை துண்டித்துக் கொள்ள வேண்டும்.

சங்கராச்சாரி கையில் வைத்திருக்கும் தண்டம் என்பது என்ன ? கோவணம்தான். அதாவது ஒரு கோவணத்தை அணிந்திருப்பதும் மாற்றுக் கோவணமாகதன்னிடம் உள்ள ஒன்றே ஒன்றைத் துவைத்து குச்சியில் கட்டி உலர்த்தி அடுத்த வேளை கட்டிக் கொள்வதும்தான் சன்யாச தர்மம். இவர்களோ சொத்துக்களைக்குவிக்கும் வேலையில்தான் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பெரியவர் காலத்தில் மடம் வறுமையில் இருந்தது. நான்தான் அதற்கு சொத்து சேர்த்தேன் என்றுஜயேந்திரரே சொல்லியிருக்கிறார். அந்த சொத்துக்களை நிர்வாகம் செய்து வருவது யார் ? சாதிக்காரர்களும் குடும்பத்தினரும்தான்.

பூணூலை அகற்றி தான் எந்த சாதிக்காரனும் அல்ல என்று உணர்த்தும் சடங்கும், உயிரோடிருக்கும் தன் உறவினர்களுக்கெல்லாம் அப்போதே இறுதிச்சடங்குசெய்து அவர்களுடனான பந்தத்தை துண்டித்துக் கொள்ளும் சடங்கும் சன்யாசம் ஏற்பவர்கள் செய்யும் சடங்குகளில் உண்டு. ஆனால் சங்கர மடத்தில் இந்தசன்யாசிகளின் பூர்வாசிரம சகோதரர்கள்தானே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். துறவின் அடிப்படையான பால பாடத்தையே பின்பற்றாதசாமியார்கள் இன்னும் என்னதான் செய்ய மாட்டார்கள் என்று நாம்தான் சிந்திக்க வேண்டும்.

இந்த வழக்கில் இப்போது பெண்கள் சம்பந்தப்படிருப்பதாகச் சொல்லுவது வேண்டுமென்றே மடத்தை இந்த நேரத்தைப் பயன்படுத்தி இழிவுபடுத்த நடக்கும்முயற்சி என்று சொல்லலாம் அல்லவா ?

இந்த இதழ் அச்சுக்குப் போகும் வேளையில் கொலை வழக்கில் ஜயேந்திரருக்கு நெருக்கமான ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸ் நீதி மன்றத்தில்தெரிவித்திருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. விஜயேந்திரரின் தம்பி தொடர்பாகத்தான் அதிகமான பெண் விவகாரங்கள் பத்திரிகைகளில் இதுவரைவந்துள்ளன. ஆனால் 1987ல் ஜயேந்திரர் திடீரென மடத்தை விட்டு தண்டத்தைக் கைவிட்டுவிட்டு சில நாட்கள் காணாமல் போனபோது, அவர் அப்போதுசாதாரண மனிதர்கள் போல உடை மாற்றிக் கொண்டு நேபாளப் பெண்ணுடன் சென்றதாகத்தான் முதலில் செய்திகள் வெளியாகின. பழைய பெரியவருடன்சமரசம் ஏற்பட்ட பிறகு அந்தச் செய்திகள் அமுக்கப்பட்டன. காணாமல் போன நாட்களில் அவர் எங்கெல்லாம் இருந்தார், என்ன செய்தார் என்பதுபற்றி பெரியவரும் வெளியே பேசியது இல்லை. இன்று வரை அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை. 1993ல் தன்னிடம் ஜயேந்திரர்முறைகேடாக நடந்து கொண்டது பற்றி எழுத்தாளர் அனுராதா ரமணன் இப்போது பகிரங்கமாக சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை சில ஆண்டுகள்முன்பே, ஜயேந்திரர் மீது எந்த கொலை வழக்கும் இல்லாத காலத்தில், தினமலர் ஏட்டில் அனுராதா ரமணன் எழுதத் தொடங்கியபோது எழுத விடாமல்அவர் தடுக்கப்பட்டார்.

இளமையில் துறவு என்பது மிகவும் செயற்கையானது. இயற்கைக்கு விரோதமானது. ஆண் பெண் உறவு, விழைவு இயற்கையானது. (ஆண்--ஆண்,பெண்--பெண் விழைவும் இயற்கையானதுதான்.) இதை மறுத்து இளமையிலிருந்தே பாலுணர்வை அடக்கி வைத்து சாமியாராக, மடாதிபதியாக ஒருவரைஇருக்கச் சொல்லும் அமைப்பு முறையே மனித விரோதமானது. பத்து வயதிலும் பதினான்கு வயதிலும் சாமியாராக்கப்படும் ஒருவர் இயல்பானபாலுணர்வுகளுக்கு வடிகால் இல்லாமல் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவது வருத்தத்துக்குரியது. தாம்பத்யம் லெளகீகம், பற்றி எந்த அறிவும் இல்லாமல்மழலையிலிருந்தே நெய் சாதம், ஸ்லோகம் சூழலில் வளர்ந்த ஒருவரிடம் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு வழி காட்டும்படி மக்கள் போவது அதை விடவேதனைக்குரியது.

பணமும் அதிகாரமும் கிட்டும்போது இந்த சாமியார்கள் தங்கள் பாலுணர்வுகளுக்கு வடிகால்கள் அமைத்துக் கொள்கிறார்கள். இந்த வாழ்க்கைமுறைக்கு உதவி செய்யவும், அந்த ரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் தொடர்ந்து அவர்களை மாஃபியாக்களின் கூட்டாளிகளாகவும் அவர்களையேமாஃபியாக்களாகவும் மாற்றிவிடுகிறது. ப்ரும்மச்சரியத்தை கட்டாயப்படுத்தும் சைவ, ஸ்மார்த்த, கத்தோலிக்க மடங்களில் நடக்கும் பாலியல்குற்றங்கள் அளவுக்கு துறவுக்கோ, ஆன்மிகப்பணிக்கோ ப்ரும்மச்சரியத்தை ஒரு நிபந்தனையாக வலியுறுத்தாத பிராட்டஸ்டண்ட், வைணவ ஜீயர் மடங்களில்நடப்பதில்லை. பி.ஜே.பியின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ்சில் ப்ரும்மச்சரியம் வலியுறுத்தப்படுவதால்தான், உமாபாரதி-- கோவிந்தாச்சாரியா பிரச்சினைகள்எழுகின்றன. உண்மையில் பழம் இந்திய ஆன்மிக மரபு குடும்ப வாழ்க்கைக்குப் பிறகே துறவு நிலையை உபதேசித்திருக்கிறது. குடும்ப அமைப்புதான் ஒருமனிதனை என் வீடு என் குடும்பம், என் குழந்தை என்று சுய நலமியாக ஆக்குகிறது என்று சுட்டிக்காட்டிய பெரியார் கூட அதற்குத் தீர்வாகபிரும்மச்சரியத்தையோ துறவையோ சொல்லவில்லை. குழந்தை வளர்ப்பை அரசுக் கடமையாக ஆக்குவதையும் தனியுடைமையை ஒழிப்பதையும்தான் தீர்வாகசொன்னார்.

கொலை, பெண்கள் விஷயத்தில் ஒழுக்கக் கேடு, நிதி நிர்வாக முறைகேடுகள் என்று எத்தனை குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இன்னமும் அவர் ஒருசாமியார் என்பதால் ஜயேந்திரரை சிறையில் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறதே ?

கைது செய்யப்படும் எல்லா மனிதர்களும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று கோருவதுதான் நியாயம். நக்சல்பாரிப் பெண் கைதிகளுக்குமாதவிலக்கின்போது தங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளக்கூட வசதிகள் தரப்படவில்லை என்று பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. ஈரோடுமாவட்டம் அலங்கியம் கிரமத்தில் மாரியப்பன் என்றொருவர். அவர் வயது 80 என்று ஒரு ஏடும் 100 என்று இன்னொரு ஏடும் சொல்லுகின்றன.

மாரியப்பன் மகளைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது என்பதால் அவரைக் காண தீபாவளி சமயத்தில் மருமகன் வீட்டுக்குச் சென்றார். மகள் அங்கில்லை.மகள் உயிருக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்ற பதைப்பில் மாரியப்பன் வாக்குவாதம் செய்தார். மருமகன் அவரைப் பிடித்து தள்ளியதும் கீழே விழுந்தார்.எழுந்து மருமகன் சட்டையைப் பிடித்து சண்டையிட்டார். இதற்காக அவர் மீது ஊர் பஞ்சாயத்தில் மருமகன் புகார் செய்தார். முதியவர் மாரியப்பனை 100 ரூபாய்அபராதம் கட்டிவிட்டு தங்கள் காலில் 100 முறை விழுந்து வணங்கும்படி ஊர் பஞ்சாயத்து தீர்ப்புஅளித்தது. இதனால் மாரியப்பன் உடல் நிலைபாதிக்கப்பட்டது. போலீசுக்குச் சொன்னால் குடும்பமே ஒதுக்கி வைக்கப்படும் என்ற மிரட்டலை மீறி இப்போது புகார் கொடுத்திருக்கிறார்.

மாரியப்பனை தண்டித்த ஊர் பஞ்சாயத்து சாதி பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகற்பக விநாயகம் வேறொரு வழக்கில் சில மாதங்கள் முன்பு கருத்து தெரிவித்திருந்தார். அதையடுத்து தமிழக அரசு ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்தது.

அந்த சட்டத்தை எதிர்த்து, ஊர் பஞ்சாயத்துகள், சாதி பஞ்சாயத்துகளை ஊக்குவிக்க வேண்டுமென்று துக்ளக் இதழில் எழுதினார் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்தி. அவரும் அவரது சகாவான முரளி மனோகர் ஜோஷி வகையறாக்களும்தான் இப்போது ஜயேந்திரருக்கு மட்டும் கண்ணியம் காப்பாற்றப்படவேண்டும் என்று பேசுகிறார்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜயேந்திரரை போலீஸ் விமானத்தில் ஹைதராபாதிலிருந்து சென்னைக்கும்க்வாலிஸ் காரில் சென்னையிலிருந்து காஞ்சிக்கும் அழைத்துச் சென்றது. ஆனாலும் அவர் கண்ணியமாக நடத்தப்பட வில்லை என்று புலம்பிக் கொண்டேஇருக்கிறார்கள். மாரியப்பன் ஊர் பஞ்சாயத்தின் முன் எப்படி தரதரவென்று இழுத்து வரப்பட்டிருப்பார் என்பதை கற்பனை செய்யுங்கள்.

சங்கராச்சாரிக்கோ அவரது ஜாமீன் மனு விசாரணைக்காக விடுமுறை நாளான சனிக்கிழமையன்று விசேடமாக நீதிமன்றம் கூட்டப்படுகிறது. இதே விசேடஅணுகுமுறை சாதாரண முனியன்களோ, மாரியப்பன்களோ, மாரியம்மாக்களோ முத்துசாமிகளோ ஜாமீன் கோரும்போது கிடையாது என்பது நாடறிந்த நிலை.

வீரப்பனுக்கெல்லாம் தனி பங்களா சிறை தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஜயேந்திரரை குறைந்தபட்சம் ஒரு பங்களாவில் சிறை வைத்திருக்கலாம்என்கிறார்களே ?

வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம் என்று சென்னை புத்தக கண்காட்சியில் தீம்தரிகிட நடத்திய மக்கள் கருத்தெடுப்பில் சதவிகிதம் பேர்வாக்களித்திருந்தார்கள். ஜயேந்திரருக்கு எத்தனை சதவிகிதம் ஆதரவு கிட்டும் என்று இப்போது சொல்வதற்கில்லை. பங்களா சிறையை அனுபவிக்கும்வாய்ப்பு வீரப்பனுக்குத் தரப்படவில்லை. (உண்மையில் ஒரு காட்டுவாசிக்கு பங்களா வசதியானது அல்ல. சிறையாகவே தோன்றும்.) அத்வானி, லாலு பிரசாத்யாதவ், போன்ற அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்ட போது இப்படி பங்களா காவலில் வைக்கப்பட்டதைக் காட்டி இந்த வாதம் பேசப்படுகிறது.அவர்களை பங்களாவில் வைத்தது தவறு என்றுதான் சொல்ல முடியுமே தவிர, அதே தவறைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கோருவது சரியல்ல.இப்போது ஜயேந்திரர் மிக கண்ணியமாகவே நடத்தப்படுகிறார் என்பதை டி.வி செய்திப் படங்களிலேயே தெரிந்துகொள்ள முடியும்.

சதுர்வேதி சாமியாரை முதுகில் கை வைத்து போலீஸ் தள்ளுகிறது. அவர் ஓடு ஓடென்று ஓடுகிறார். ஜயேந்திரர் வழக்கிலேயே கைதாகியிருக்கும் கதிரவன்முதலானோர் போலீசால் நெருக்கியடித்து நீதி மன்றத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். ஜயேந்திரர் மீது உடன் வரும் காவலர்களின் விரல் கூடப் படுவதில்லை.தொட்டால் தங்களுக்கு தீட்டாகி விடும் என்று பயப்படுகிறார்களோ என்னவோ. சிறைக்குள் ஜயேந்திரருக்கு சமைத்துப் போட ஜாதி அடிப்படையில்பிராமண கைதியும் பிராமண ஏட்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ( ஒரு தலித் குளித்து விட்டு சுத்தமாக சமைத்துப் போட்டால் போதும் என்று இப்போதுகூட ஜயேந்திரருக்கு சொல்லத் தோன்றவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.) பூஜைகள் செய்ய பூக்களும் ( எதன் மீது அவற்றை அர்ச்சிப்பார் ?எனவே ) விக்கிரகங்களும், தட்டு, கிண்ணி, சொம்பு, உத்தரணி போன்ற சிறு பாத்திரங்களும் அவருக்குத் தரப்படுகின்றன என்று கருதலாம்.கொல்லப்பட்ட சங்கர் ராமனைப் போன்ற ஒரு கோவில் பிராமண ஊழியர் ஏதோ ஒரு வழக்கில் கைதாகியிருந்தால் அவருக்கு தினமும் சந்தியாவந்தனம்செய்ய வசதிகள் செய்து தந்திருப்பார்களா என்ன ? ஜயேந்திரர் வேறு எந்தக் கைதியையும் விட சிறப்பாக நடத்தப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

அப்படியானால் ஏன் பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுத வேண்டும் ?

எழுதியிருக்கக் கூடாது. அது தவறுதான். காஞ்சி மடத்துக்கு இன்னமும் இருந்து வரும் அரசியல் செல்வாக்கின் அடையாளங்களில் இதுவும் ஒன்று. காங்கிரஸ்கட்சிக்குள்ளேயும் மடத்தின் ஆதரவாளர்கள் பலர் நீண்ட காலமாக இருந்து வருகிறார்கள். ஜயேந்திரர் ஆர்.எஸ்.எஸ் பக்கம் போய்விட்டதால் அவர்களில்பலர் சற்று ஒதுங்கி நிற்கிறார்கள் என்று சொல்லலாம். தவிர வட மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஜயேந்திரர் கைதைப் பயன்படுத்தபி.ஜே.பி தீவிரமாக் இருக்கிறது. அதை மனதில் கொண்டும் மன்மோகன் சிங் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்க அரசியல் காரணமிருக்கிறது.

ஜெயலலிதா வேறு உள் நோக்கத்துடன்தான் இந்தக் கைதை செய்திருக்கிறார் என்று கலைஞர் கருணாநிதி பேச ஆரம்பித்திருக்கிறாரே ?

நோக்கம் எதுவானாலும் கைது தவறானது ஆகிவிடாது. கொலைக் குற்றம் இருந்தால் சங்கராச்சாரியானாலும் சட்டப்படி கைது செய்யப்படலாம் என்றமுன்னுதாரணத்தை ஏற்படுத்தியது பாராட்டத்தக்கது. முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்கு என்று பி.ஜே.பியினர் சொல்லுவது முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாகும்.இந்து சாமியார் மீது நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொல்லுவதே கேவலமானதாகும். முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில்தங்கள் மீது ஒடுக்குதல் கூடாது என்பதில் மட்டுமே அவர்களுக்கு கவலை உண்டே தவிர, மற்ற மதத்தினர் ஒடுக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்சைப்போல நினைக்கிறவர்கள் அல்ல.

ஜெயலலிதாவுக்கும் சங்கர மடத்துக்கும் இடையே தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன என்பதைத்தான் பத்திரிகைச் செய்திகள் எழுப்பும் சந்தேகம்என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சொல்லுகிறார் கருணாநிதி. தான் ஒரு போதும் செய்யும் வாய்ப்பே இல்லாத ஒரு செயலைச் செய்து ஜெயலலிதா மக்கள்ஆதரவை பெற்றுவிட்டது கருணாநிதிக்கு அடுத்த தேர்தல் கவலையை ஏற்படுத்தி விட்டது. அதனால் இப்படி குழப்பமான அறிக்கைகள் வெளியிடத்தொடங்கிவிட்டார். கொடுக்கல் வாங்கல்கள் இருந்திருந்தால் அவை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டு அதற்கு தனி நடவடிக்கை வேண்டும் என்றுகோரலாம்.

ஒரு வாதத்துக்காக ஜெ--ஜ இருவருக்கும் பணத் தகராறுதான் பின்னணி என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால், இப்படி ஒரு கொலை வழக்கில்ஜயேந்திரரும் சம்பந்தப்பட்டிருப்பது ஜெயலலிதாவுக்குத் தெரியவந்ததும், உடனடியாக அவரை அழைத்து இன்னும் மிரட்டி பிளாக் மெயில் செய்திருக்கலாமே.பழைய பாக்கியையும் கொடுத்துவிடு. இந்தக் கொலை விவகாரம் வெளியில் வராமல் இருக்க் இன்னும் சேர்த்துக் கொடு என்று பேரம்பேசியிருக்கலாமே. அவரும் சந்தோஷமாகக் கொடுத்துவிட்டு வந்திருப்பாரே. அரசு அதிகாரம் கையில் இருப்பதால் வழக்கை ஜயேந்திரர் சம்பந்தமேஇல்லாமல் சுலபமாக மூடிவிட்டுப் போகலாமே. அப்படி எதுவும் செய்யாமல், பகிரங்கமாக கைதுக்கு உத்தரவிட்டு, கைதின் மூலம், சங்கர மடம்பற்றி இருந்த பொய்யான பிம்பத்தை உடைக்க உதவியிருப்பதற்காக நிச்சயம் ஜெயலலிதாவைப் பாராட்டத்தான் வேண்டும். (ஜெயலலிதாவைத் தவிர நம்பாராட்டுக்குரியவர்கள் புலனாய்வு செய்த நக்கீரன் இதழும், காவல் அதிகாரிகளுமாவர்.)

ஜயேந்திரர் கொடுக்கல் வாங்கலில் வழுக்கியிருந்தால், அவரை மிரட்ட பொய் வழக்கும் போடப்பட்டிருக்கலாம் அல்லவா ? ஒப்புதல் வாக்குமூலம்அளித்த இருவர் பல்டி அடித்திருப்பதால், அவர்கலின் வாக்குமூல அடிப்படையில் ஜயேந்திரர் மீது வைத்த குற்றச்சாட்டே செல்லாததாகி விட்டது இல்லையா ?

இல்லை. திரை மறைவு பேரத்தில் ஒருவர் சிக்கியிருந்தால் அவரிடமிருந்து அதிகம் கறக்க வாய்ப்பு கிடைக்கும்போது அதை நழுவ விடுவார்களா என்ன ?பகிரங்கமாக அவரை இழிவுபடுத்துவதை விட அது அதிக லாபமானது. எனவே இந்த வழக்கு வேறு நோக்கங்களுக்க்காக பொய்யாக போடப்பட்டதுஎன்பதற்கு ஆதாரம் இல்லை. வேறு தகராறு இருந்ததால், இதை மூடி மறைக்க உதவி செய்யவில்லை என்று வேண்டுமானால் அதிக பட்சமாகசொல்லலாம். எனினும் இவை எல்லாம் வெற்று யூகங்களே. கதிரவன் வாக்குமூலம் தர 24 மணி நேர அவகாசம் தரப்பட்டு அதன் பிறகு போலீஸ்இல்லாமல் தனியே நடுவரிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்தபோதே தன்னை போலீஸ் துன்புறுத்தியதாக சொல்லியிருக்க முடியும். சொல்லவில்லை.பின்னர் சொல்லுவதுதான் உள் நோக்கமுடையது என்றும் நீதி மன்றம் கருதலாம். தவிர ஒரு வழக்கில் வாக்குமூலங்கள் மட்டுமே சாட்சியங்கள் அல்ல.வேறு ஆதாரங்களும் உண்டு. அவை வழக்கு விசாரணையின்போதுதான் ஏற்கத்தக்கவையா அல்லவா என்று தீர்மானிக்கப்படும்.

கூலிப்படையினரின் தலைவன் என்று சொல்லப்படும் அப்பு தி.மு.க பிரமுகருக்கு நெருக்கமானவர். சங்கர் ராமனுக்கும் ஜயேந்திரருக்கும் உள்ள விரோதத்தைப்பயன்படுத்தி வேறு யாரோ ஏன் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டு, சங்கர மடத்தை இதன் மூலம் இழிவுபடுத்தி ஒழித்துக் கட்ட முயற்சித்திருக்கக் கூடாது? கதிரவனின் பல்டி ஜயேந்திரர் மீது பொய்க் குற்ரம் சுமத்தப்பட்டதைக் காட்டி விட்டதே என்றெல்லாம் குரூமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரசில்எழுதியுள்ளாரே ?

ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவிகளின் குதர்க்கம் இது. அவ்வளவுதான். ஜயேந்திரர் சொல்லியதன் பேரில் சங்கர் ராமனைக் கொல்ல என் தலைவர் அப்பு என்னைபணித்தார் என்பது கதிரவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். இது கட்டாயப்படுத்தப்பட்டது என்றால், முழுவதும் தவறாகிவிடுமல்லவா. ஆனால்குருமூர்த்தி தனக்கு வசதியாக அதில் ஜயேந்திரர் பற்றியது மட்டும் கட்டாயப்படுத்தப்பட்டது என்று எடுத்துக் கொள்கிறார். அதே சமயம் அப்பு சொல்லிகதிரவன்தான் கொலை செய்தது என்பதை மட்டும் போலீஸ் கட்டாயத்தில் கதிரவன் சொன்னதாக குருமூர்த்தி கருதவில்லை. அதெப்படி முடியும் ? தாங்கள்கொலை செய்துவிட்டு அதற்கு இன்னொருவர் மீது பழி போடுவது என்பது மத வெறியர்களுக்கு புதியதல்ல. ஸ்டேன்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்டாலும்,குஜராத்தில் முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டாலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டாலும் எதுவுமே தங்கள் அமைப்பு திட்டமிட்டு நிறைவேற்றியவை என்றுஅவர்கள் எப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் ? எல்லாமே மக்கள் தன்னெழுச்சியாக உணர்ச்சிவசப்பட்டு செய்தது என்றுதானே சொல்லி வந்தார்கள்?

இந்தக் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுமா ? நீதி கிடைக்குமா ?

கைது சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்பதை காட்டியிருக்கிறது. நீதித்துறையும் அதை நிரூபிக்க வேண்டும். கடந்த காலத்தில் சங்கர மடத்துக்கு சென்றுதொழுத எந்த உயர் நீதி மன்ற நீதிபதியோ, உச்ச நீதி மன்ற நீதிபதியோ (எல்லாரும் செல்லவில்லை) இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. ஜயேந்திரர்மட்டும் தனியாக மடத்தில் எவர் உதவியும் இல்லாமல் இந்தக் கொலைக்கு ஏற்பாடு செய்தார் என்று வழக்கு நடத்தினால் அது பலவீனமாகிவிடும்.அது நம்பத் தகுந்ததும் அல்ல. அவருக்கு இதில் ஒத்துழைத்த இதர மட நிர்வாகிகள், ஊழியர்கள் என்று பலர் இருக்க முடியும். அது யாராயிருந்தாலும்விஜயேந்திரர் ஆனாலும் அவர் தம்பி ஆனாலும், கடை நிலை ஊழியர்

ஆனாலும் கைது செய்தால்தான் நீதி முழுமையாகும்.

கொலையாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை கூலி பேசப்பட்டு கணிசமான பனம் தரப்பட்டதாக்வும் வழக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப் பெரும்தொகையை கணக்கில் காட்ட முடியாத விஷயத்துக்கெல்லாம் செலவு செய்யும் நிலையில் அந்த மடம் இருந்தால், அதன் நிதி நிர்வாகங்கள் பற்றியும்விசாரித்தாக வேண்டிய சட்டத் தேவை இருக்கிறது. மடத்துக்கு இந்து அற நிலையத் துறையிலிருந்து ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து, மடத்தின் கடந்த கால நிதிவிவகாரங்களை விசாரிப்பதும் அவசியமாகும்.

இந்த விவகாரத்தினால் ஒரு விதத்தில் சங்கர மடம் முழுக்க அமபலமாகிவிட்டது என்று கருதலாமா ?

இன்னும் முழுமையாக கவில்லை. அதற்குக் காரணம் அதைக் காப்பாற்றும் வேலையில் இன்னமும் பல செல்வாக்கான புள்ளிகள் வேலை செய்து கொண்டேஇருப்பதுதான். ஒரு விதத்தில் அவர்களெல்லாரும் அம்பலமாகிறார்கள் என்று சொல்லலாம்.

ஆர்.வெங்கடராமன் போலவா ?

அவர் புதிதாக அம்பலமாகவில்லை. அவர் சங்கர மடத்தின் அரசுத் துறை தரகர்களில் ஒருவர் என்பது பல காலமாக மீடியாவினர் அறிந்ததுதான். இப்போதுஅவரை ஒரு தேசிய அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் அவர் செல்லுமிடமெல்லாம் அவருக்கு கறுப்புக் கொடிகாட்ட வேண்டும். வாழ்க்கையில் சுமார் அறுபது எழுபது ஆண்டுகள் காங்கிரசில் பல விதமான பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இப்போதுசங்கராச்சாரிக்காக, காங்கிரசின் பிரதான எதிரி பி.ஜே.பி நடத்திய டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் குடியரசுத்தலைவராகஇருந்தபோது ஓட்டு போடுவதில்லை. ஜனாதிபதி எந்த சார்பும் அற்றவராக இருக்க வேண்டும் என்பதாலாம். முன்னாள் ஜனாதிபதியானதும் இவருடையஉண்மையான சார்பு எதனுடன் என்று காட்டியிருக்கிறார். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் மத வெறியாட்டம் இவை எதுவும் இவர் மனதை உலுக்கிதெருவுக்கு வரவழைத்ததில்லை. ஜயேந்திரர் கைதுக்காக தெருவுக்கு வந்திருக்கிறார்.

இன்னும் அம்பலமாகிறவர்கள் யார் யார் ?

வழக்கம் போல கலைஞர் கருணாநிதியின் போலி பகுத்தறிவு இன்னும் ஒரு முறை அம்பலமாகியிருக்கிறது. மாலுமி சரியில்லை என்றால் மாலுமியை மாற்றவேண்டும். கப்பலைக் கைவிடக் கூடாது. காஞ்சி மடம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார். எதற்காக அந்தக் கப்பலைக் காப்பாற்ற வேண்டும் ?அது ஒரு போர்க்கப்பல். சாதி வெறி பிடித்தவர்களின் சார்பாக, சாதாரண மக்கள் மீது, தலித்துகள் மீது, பெண்கள் மீது வர்ணாசிரமத்தை திணிக்கும்போர்க்கப்பல். இந்த யுத்தத்தில் அதன் தளபதி பலவீனமடைந்திருக்கும்போது கப்பலை அழிப்பதுதான் யுத்த தர்மம். எதிரியின் கப்பல் மீது இவருக்கு ஏன் நேசம் .மடத்தின் நிதி நிர்வாகம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் தீர்த்துக்கட்டியிருப்பதும் தி.மு.கதான்.

ஜயேந்திரர் கைதான மறு நாள் மடத்தில் மத்திய வருமான வரி அதிகாரிகள் சோதனை என்று ஒரு செய்தி வெளியாயிற்று. உடனடியாக அதை மறுத்துடெல்லியிலிருந்து அறிக்கை விடுத்தது அங்குள்ள அந்தத் துறையின் தி.மு.க அமைச்சர்தான். கூலிப்படைக்கு பெரும் தொகையை மடம் ஏற்பாடு செய்ததாகவழக்கு இருக்கும் போது, வருமான வரித்துறை சோதணையிடுவதுதானே நியாயம் ? ஜெயலலிதாவுக்கும் ஜயேந்திரருக்கும் பண பேரங்கள் இருந்ததாகபத்திரிகை செய்திகள் வந்ததை சுட்டிக் காட்டி உள் நோக்கம் இருக்கலாம் என்று அறிக்கை விடும் கலைஞர், அந்த பண பேரம் என்ன என்று மடத்தின் நிதிவிவகாரங்களை சோதனையிட ஏன் தன் அமைச்சரைக் கேட்க வில்லை ? சோதனை இல்லை என்றுதானே அறிவிக்கிறார்கள்.

வருமான வரி சோதனை இல்லை என்று தி.மு.க மத்திய அமைச்சர் அறிவித்ததில், கலைஞர் கருணாநிதிக்கும் ஏதோ உள் நோக்கம் இருக்கிறதா ?

இருக்கலாமே. உள் நோக்கம் என்று வந்துவிட்டால், எல்லாருக்குமே இருக்கலாமே. கூலிப்படையின் தலைவன் தி.மு.க பிரமுகர்களுடன் தொடர்புடையவர்என்று செய்திகள் வரும்போது, தங்கள் பிரமுகர்கள், தொடர்புகளைக் காப்பாற்றுவதற்காக தேவைப்பட்டால் சேர்த்து ஜயேந்திரரையும் கூடக் காப்பாற்றமுயற்சிக்கலாமே. எனவே ஒவ்வொருவருடைய அறிவிப்புகள், பேச்சுக்கள், செயல்கள் எல்லாவற்றையும் சங்கராச்சாரி விஷயத்தில் நுணுக்கமாககவனிக்க வேண்டியிருக்கிறது.

இது பத்திரிகைகளுக்கும் பொருந்துமல்லவா ?

நிச்சயம் பொருந்தும். வழக்கு விவகாரங்களை இப்போது பரபரப்பான க்ரைம் செய்திகளாக எல்லா புலனாய்வு பத்திரிகைகளும் வெளியிட்டாலும் (பாதியூகம், பாதி போலீஸ் தரப்பில் கசிந்தவை) ஒட்டு மொத்தமாக காஞ்சி மடத்தின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற தொனி தூக்கலாகி வருகிறது.ஜயேந்திரர் கைதை துக்ளக் விமர்சிப்பதோ, பெரியாரிய, இடதுசாரி இதழ்களும் வரவேற்பதோ எதிர்பார்க்கக்கூடியதுதான். ஆனால் சங்கர மடம் என்றஅடிப்படை அமைப்பைப் பற்றி இப்போது யார் என்ன கருத்தைச் சொல்லுகிறார்கள் என்பது தனியே கவனிக்கப்பட வேண்டியதாகும். அதைக் காப்பாற்றவேண்டும் என்ற குரல் எங்கிருந்தெல்லாம் வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இடதுசாரியான ராம் ஆசிரியராக உள்ள ஹிந்து கூட அப்படிதானே சொல்லுகிறது ?

.ஹிந்து வைணவக் குடும்பத்தினரால் நடத்தப்பட்டாலும் அது சங்கர மடத்தையும் போற்றுதலுக்குரிய அமைப்பாகவே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.(கடத்தல், மோசடி வழக்கில் கைதாகியிருக்கும் சதுர்வேதி சாமியாரின் வேத அறிவையும், அறிவியலையும் வேதத்தையும் இணைத்து பேசும் பேச்சாற்றலையும்ஓகோவென்று புகழ்ந்து ஹிந்து நிருபர் மைதிலி ரங்கராஜன், சாமியாரின் கைதுக்கு சில நாட்கள் முன்புதான் ஹிந்துவில் எழுதியிருந்தார்.). ராம் பார்ப்பன சாதிவிஸ்வாசத்திலோ, பக்தியினாலோ காஞ்சி மடத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று சொல்ல முடியாது.

அவர் சாதி மறுப்பு திருமணங்கள் செய்தவர். நாத்திகர். இடது சாரி இயக்க ஆதரவாளர் என்பதெல்லாம் மறுக்க முடியாதவை. ஒரு செய்தியாளராகசங்கராச்சாரிகளை சந்திப்பதையோ, தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையோ கூட தவறு சொல்ல முடியாது. ஆனால் ஜயேந்திரர் கைதுக்குப் பின்ஆந்திரத்திலிருந்து காஞ்சிக்கு வரும் விஜயேந்திரரை தமிழக எல்லையில் சென்று வரவேற்று தன் காரில் அழைத்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஹிந்து நிர்வாகிகள் மூவர் உட்பட இன்னும் வேறு யார் யார் எல்லையில் வரவேற்றார்கள் என்று தினத்தந்தி பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால்,ஹிந்து ஏட்டில் எல்லையில் ஆச்சாரியாருக்கு வரவேற்பு தரப்பட்டது என்று மட்டும் சொல்லப்பட்டு பெயர்கள் தவிர்க்கப்பட்டன. மற்றபடி ராம்கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகள் எல்லாம் புகைப்படங்களுடன் ஹிந்துவில் வெளியாகின்றன.

அடுத்த சில வாரங்களாக ஹிந்துவில் வரும் செய்திகளில் விஜயேந்திரர் சார்பும், அவரைக் கொண்டு மடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற தொனியும்வெளிப்படுகின்றன. மடத்தை இனி எப்படி நடத்திச் செல்ல வேண்டும், கார்ப்பரேட் கம்பெனி போல எப்படி ப்ரொபஷனல்களைக் கொண்டு நிர்வகிக்கவேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகள் எழுதப்படுகின்றன. சங்கர மடத்தின் ஆர்.எஸ்.எஸ். சார்பை ஜயேந்திரருடன் முடித்துக் கொண்டு, விஜயேந்திரர்காலத்தில் அதை மார்க்சிஸ்ட் சார்புள்ள மடமாக மாற்ற ராம் அரசியல்ரீதியான ஊடுருவல் உத்தி எதையாவது பின்பற்றுகிறாரா என்பது நம் அறிவுக்குஎட்டவில்லை. ஹிந்து ஏட்டை நடத்தும் குடும்பத்தின் வர்க்க நலனில் காஞ்சி மடத்தின் செல்வாக்கைக் காப்பாற்றுவதும் அடங்கியிருக்கலாம் என்றுவேண்டுமானால் சொல்லலாம். ஹிந்துவுக்கெதிராக ஜெயலலிதா அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்த போது ஹிந்து நிர்வாகம் ராம் வசம் மாற்றப்பட்டு,அதன் பின் அரசு- ஹிந்து உறவின் கடுமைகள் தணிக்கப்பட்டதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.

சங்கர மடம் அழிய வேண்டாம் என்று கலைஞரோ, ராமோ கருதுவதில் என்ன தவறு ? ஒரு மடாதிபதியின் தவறுக்காக சங்கர மடத்தை ஏன் அழிய விடவேண்டும் ?

மடத்தின் ஏராளமான சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும். அதன் மருத்துவமனைகள் இப்போது பணக்காரர்களுக்கானவையாக இருக்கின்றன.அவற்றை ஏழைகளுக்கானாதாக்க வேண்டும். வேத பாடசாலை போன்ற விஷயங்களை இந்து அற நிலையத்துறையே பார்த்துக் கொள்ளலாம். எனவேமடமே தேவையில்லை. தொடர்ந்து அதன் சொத்துக்களை விஜயேந்திரரும் அவர் தம்பி, மச்சினர் போன்ற குடும்பத்தினரும் முறைகேடு செய்ய விடாமல்நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி காப்பாற்றுவதற்கு மடத்தின் பாரம்பரியம் என்று என்ன இருக்கிறது ? வர்ணாசிரமும் உயர் சாதி அபிமானமும்,திரை மறைவு பேரங்களும் மட்டும்தானே.

நமது சமுகத்துக்கு சங்கர மடம் மட்டும்தான் தேவையில்லை என்று நினைக்கிறீர்களா ?

பார்ப்பன, ஷத்ரிய, வைசிய, சூத்திர, பள்ளர் மள்ளர், சைவ, அசைவ எந்த மடமானலும் சரி, கிறித்துவ, இஸ்லாமிய மத அமைப்புகளானாலும் சரி, அவற்றால்விளையும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பகுத்தறிவாளன் என்ற முறையில் இவை எல்லாமேமக்கள் நலனுக்கு எதிரானவை என்பதுதான் என் கருத்து. விதி விலக்காகவே இவற்றுக்குள்ளிருந்து ஒரு வள்ளலாரோ, நாராயண குருவோ, சூஃபிக்களோ,லத்தீன் அமெரிக்க பாதிரிகளோ குன்றக்குடி அடிகளோ தோன்றலாம். அப்படிப்பட்ட முயற்சிகளையும் மத அமைப்புகள் அழித்துவிடும் வல்லமையுடையவை.

அதே சமயம், கடவுள் நம்பிக்கையையும், வழிபாட்டையும் தனி நபர் விஷயமாக வீட்டுக்குள் அறைக்குள் வைத்துக் கொள்ளும் எந்த பக்தருடனும்நமக்கு விரோதமில்லை. அவர்கள் வெறியர்களாக மாற மாட்டார்கள். ஒரு பக்குவமான நிலையில் நம்முடன் வரக்கூடியவர்களாகவும் மாறலாம். அந்தபக்தர்களின் நலனுக்குக் கூட இன்று இந்த மட, மத அமைப்புகள் விரோதமானவை. பக்தருக்கும் கடவுளுக்கும் இடையில் தரகராக வரும் எவரும், எந்தஅமைப்பும் பக்தருக்கும் கடவுளுக்கும் விரோதமானவர்களாகவே மாறுவார்கள் என்பதை பக்தர்களும் உணர்ந்துவிட்டால், இந்த துறையில்பகுத்தறிவாளர்களுக்கு வேலைப் பளு குறைந்துவிடும்.

தீம்தரிகிட- டிசம்பர் 1-15-2004

- ஞாநி(dheemtharikida@hotmail.com)

இவரது முந்தைய படைப்பு:

1. சபாஷ் ஜெ!

2. சங்கராச்சாரி-யார்?

ஞாநியை ஆசிரியராகக் கொண்ட தீம்தரிகிட இப்போது மாதமிருமுறையாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள்பின்வரும் முகவரியில் முயலலாம்.

ஞானபாநு பதிப்பகம், 22, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை - 600 041. தொலைபேசி: 91-44-24512446.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X