For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் பார்த்த மோசமான படங்கள்

By Staff
Google Oneindia Tamil News

தான் பார்த்த சிறந்த படங்களைப் பற்றி எழுதி அனைவரும் தூள் கிளப்புகிறார்கள். நானும் அதையே எழுதி பிரயோசனமில்லை.அப்படி எழுதினாலும் பல நல்ல படங்கள் அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்கும். மோசமான படங்களை பற்றி எழுதுவதுபிற்காலத்தில் தப்பி தவறி கூட நீங்கள் பார்த்து விடக் கூடாது அல்லது பார்த்து "நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்"என்ற நல்லெண்ணத்தில்தான்.

1.நினைக்கத் தெரிந்த மனமே:

ரஜினி ரசிகனாய் இருந்து முன்பும் சரி, தற்பொழுதும் சரி நான் பட்ட/படுகின்ற சிரமங்கள் சொல்லி மாளாது. மனிதன் படத்தில்ரஜினிக்கு ஜோடியா ரூபினி நடிச்சா என்ன? ரூபினி எப்படி இருக்கான்னு பார்க்க இந்த படத்துக்கா போனும். "மனிதன்"க்கு முன்பாகவந்த,மணியன் கதையில் உருவான படம். முதல் நாள், முதல் காட்சி. காரைக்குடி சிவம் தியேட்டரில் கூட்டமே இல்லை.அப்பாதெல்லாம் இது போன்ற உருப்படியில்லாத படங்களுக்கு சிறப்பாக இசையமைக்க வேண்டும் என்பதை இளையராஜாகொள்கையாய் வச்சிருந்தார்." எங்கெங்கு நீ சென்ற போதும்" மற்றும் " கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்" போன்றஇனிமையான பாடல்கள். மற்றபடி நாடகத்தை காட்டிலும் கேவலம். அடுத்த வாரம் கல்கி விமர்சனத்தில் ஆடியோ காசட்வாங்குவதோடு திருப்தி பட்டு கொள்ளுங்கள்"என்று எழுதியிருந்தார்கள். என் தலைவிதி. முதல் நாளே பார்த்து விட்டேன்.

2. இன்ஸ்பெக்டர் ரஜினி

ரஜினியால் பட்ட இன்னொரு வேதனை. 1977/78 ல் தலைவர் சூப்பர் ஸ்டார் ஆன உடனே,அவர் நடிச்ச கன்னடம் - தெலுங்குபடங்களை டப் செய்து வெளியிட்டார்கள். இப்படி வந்த ஒரு படத்தை 82 ல ஹவுஸ்புல்லா சனிக்கிழமை, அருணாச்சலா தியேட்டரில்பார்த்தேன். ரஜினி படத்துல செகண்ட் ஹீரோ, விஷ்ணுவர்தனும், கவிதாவும் நடித்த கன்னடப் பட டப்பிங். ரஜினிக்கு யாரோ டப்பிங்.அப்பப்ப செந்தமிழ் வசனம். அருணாச்சலா தியேட்டர் மூட்டை பூச்சி கடித்தது இப்பவும் வலிக்கிறது. படம் அதை விட..

3. நாட்டுக்கொரு நல்லவன்

ரஜினி வாழ்கையில் பண்ண பெரிய பாவம் எந்த படத்துக்கும் தரமா இந்த படத்துக்கு 75 நாள் தொடர்ச்சியா கால்ஷீட் கொடுத்துநடிச்சது. நான் பண்ண பெரிய பாவம் காலேஜ் கட் அடிச்சு இந்த படத்துக்கு போனது. வழக்கம் போல முதல் காட்சி, ரவிச்சந்திரன்எடுத்த கதாகாலச்சேபம். ரஜினி வசனம் பேசாம பாட்டா பாடுறாரு ( படுத்துனாரு). தளபதிக்கு அடுத்து இப்படி ஒரு சொதப்பல்படம். கொஞ்ச நாளைக்கு கமல் ரசிகர்கள் முன்னாடி தலை காட்ட முடியலே. அப்புறம் அவர்களே அனுதாபப்பட்டு பாவம்டா.உன்னை ஒன்னும் பண்ணல னு உட்டாங்க. அப்புறம் " மன்னன்" வந்து என்னை காப்பத்துச்சு. இப்பவும் நாட்டுக்கொரு நல்லவன்படத்தை விஜய் டிவில அடிக்கடி போட்டு தொல்லை பண்றாங்க.

4. அந்த ஒரு நிமிடம்

அப்பப்ப தன்னால மசாலப் படமும் நடிக்க முடியும்னு தேவையில்லாம முயற்சி பண்ணுவார் கமல். மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில்செய்ததுதான் வினை. படம் சூப்பர் பிளாப். முன்னாடி சொன்ன மாதிரி இளையராஜா சிறப்பாக இசையமைத்த இன்னொரு உருப்படி இல்லாதபடம். "இனிய பறவை சிறகை விரிக்க" இப்போதும் விரும்பி கேட்கும் இனிமையான பாடல். பெரிய டிராகனுடன் கமல் ஆடும்" பச்சோந்தியே கேளடா" வும் "இனிய பறவை" பாட்டில் கமல் நடக்கும் ராஜ நடையும் காமெடியான விசயம்.

5. தர்மராஜா

சின்ன வயசுல பார்த்த சிவாஜி தாத்தா படம். இந்த படத்தை எடுத்த சின்ன அண்ணாமலை அவர்கள் தனது அறுபதாவது கல்யாணவிழாவில் தண்ணீர் ஊற்றும் போது இறந்து போய்விட்டார். கதையைப் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். மகமாயி சிலையைவில்லன் பாலாஜி ஜப்பானுக்கு கடத்தி விட , சிவாஜி கே. ஆர் .விஜயாவுடன் ஜப்பான் சென்று, கராத்தே வீரர்களுடன் சண்டையிட்டு,குறிப்பாக இந்திய ஜப்பான் கராத்தே மேட்சில் வென்று இந்தியாவிற்கு பதக்கம் வாங்கி..., 50 வயசு சிவாஜி இப்படி நடிச்சாஎப்படி இருக்கும்.

தேசிய அளவில் அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவைப் படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அனுப்பாமல் விட்டு விட்டார்கள்.சிவாஜியின் கராத்தே சண்டை, பாராசூட்டில் பறந்து கொண்டு சிவாஜியும் பாலாஜியும் தொந்திகள் மோதி போடும் சண்டை என பலநகைச்சுவைக் காட்சிகள். மற்ற படங்களை போலன்றி இந்த படத்தை டிவியில் போட்டால் பாருங்கள். 100% நகைச்சுவைக்கு நான்உறுதி.

6.அன்புள்ள அப்பா

இந்த படத்தையும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். வேற வேலை வெட்டி இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.காரைக்குடி பற்றி தெரிந்தவர்களுக்கு இது ஆச்சரியமான விசயமல்ல.சுலபமாக டிக்கெட் கிடைக்கும். ஏவியெம் தயாரிப்பில்,ரொம்ப காலம் கழித்து திருலோகச்ச்ந்தர் இயக்கத்தில் வந்த சிவாஜி படம். படம் செண்டிமெண்டோ செண்டிமெண்ட். சிவாஜியும்,நதியாவும் அழுது கொண்டேயிருந்தார்கள். படம் முடிந்த பின்பும் நான் அழுது கொண்டேயிருந்தேன்.ஏண்டா போனோமென்று?

இன்னும் லிஸ்டில் இருக்கிறது. இப்போதைக்கு போதும்.

- ராஜ்குமார்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1.பொறிகலங்கிப் போன பொறியியல் கல்வி
2.மற்றுமொரு நிஜம்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X