For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''இனங்காக்கும் போருக்கு இவர்தான் தளகர்த்தர்''

By Staff
Google Oneindia Tamil News

Anbalagan with karunanidhi,Satalin, Dayanidhi maran
சென்னை: தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளரும், சட்டசபை முன்னவருமான பேராசிரியர் அன்பழகனின் 87வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், திமுக தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அவரை திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். சால்வைகள், மாலைகள் அவருக்கு அணிவிக்கப்பட்டன. பூங்கொத்துகள், புத்தகங்கள் பரிசாகத் தரப்பட்டன.

முதல்வர் கருணாநிதி அன்பழகனை நேரில் வந்து வாழ்த்தினார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர்.

சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, பரிதி இளம்வழுதி, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், தா.மோ.அன்பரசன், கே.பி.பி.சாமி, செல்வராஜ்,
மதிவாணன், கா.ராமச்சந்திரன் உட்பட அமைச்சர்கள் பலர் வந்து அவரை வாழ்த்தினார்கள்.

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், தி.க. தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட பலரும் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதி கவிதை:

பிறந்த நாளையொட்டி அன்பழகனை வாழ்த்தி முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

அருமருந்தே; அன்பழக உடன்பிறப்பே என்று
அறுபதாம் ஆண்டு - நின் மணிவிழாவின்போது
அன்பு ததும்ப வாழ்த்திய நானேதான் இன்றுநீ
எண்பது கடந்து இன்னும் இருபதும் கடந்து வாழ்க என்று,
வாழ்த்துகின்றேன்; வாஞ்சை மிகக்கொண்டு நம்குடும்பம்;
பெரியாரின் பிள்ளைகளையும் - பேரறிஞர் அண்ணாவின்
பிரியமிகு தம்பிகளையும் பெற்றுள்ளபூங்கா!
அறியார் இதனை சிலபேர்கள் என்பதாலே
அரக்கு மாளிகையென எரித்துவிட ஆயத்தமாகி;
உருக்கிரும்புக் கோட்டையென உணர்ந்தெங்கோடிப்போனார்; அந்தத் தருக்கர்தம் தலைகவிழச் செய்த பெருமை;
தம்பி- அண்ணன் எனும்
தகைசால் உறவுக்கே உண்டு எனப் பகைவரும் பாராட்டுகின்றார்
என்றால்
வகையறிந்து கருத்துக்களை வரிசைப்படுத்தும் வல்லமையைப்
பேராசிரியர் பெற்றிருப்பதால்தான்!

நகைமுக அண்ணாவுக்கு அடுத்து அவரை நாம் அண்ணனாக கொண்டாடுகின்றோம்!
அவர்நடக்கும் திசையறிந்து இளைஞர்கூட்டம்;
அலை அலையாய் அயராமல் நடப்பதாலே,
அண்ணாவின் படையில் ஓர் அணிவகுப்பு;
ஆவிதரவும் தயார், அன்னைத்தமிழ் காத்திட - என்று
தாவிப்பாய்ந்து வருகின்றார் என்றால், அவர்க்குத்
தளபதியாகத் திகழ்ந்து; மொழிப்போரில்,
தமிழ்காத்தமைக்குத் தண்டனையாகத் தன்பதவி பறிக்கப்பட்ட போதும்,
தன்மானம் போற்றி, பதறாமல், சிதறாமல் - தமிழ் மகனாய் நின்றார்!
இனங்காக்கும் போருக்கு இவர்தான்
இணையில்லா தளகர்த்தர் என்று
எந்நாளும் புகழ்ந்துரைப்போம்! - அவர்பிறந்த
இந்நாளில் இனிய வாழ்த்துரைப்போம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X