For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராம வளர்ச்சி- டாக்டர் வெ.ராதாகிருஷ்ணன்

By Staff
Google Oneindia Tamil News


- டாக்டர் வெ.ராதாகிருஷ்ணன்

செந்தாமரைக்குளத்திற்கு பொடிநடையாக வந்து சேர்ந்தான் சீராளன். எந்த ஒரு வாகன வசதியும் இல்லாத ஊர் அது. தரிசாக கிடக்கும் நிலங்களையும், சற்று காய்ந்து வற்றிக் கொண்டிருந்த கண்மாய்களையும் கடந்து வந்தான். ஊருக்கு வரும் வழியில் ஒருத்தரையும் அவன் கண்டிருக்கவில்லை. ஊருக்குள் வந்தவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஊரெல்லாம் ஒரே அமைதியாக இருந்தது.

ஒவ்வொரு வீடாகத் தட்டிக்கொண்டே வந்தான் சீராளன். எந்த ஒரு வீட்டுக்கதவும் திறக்கப்படவே இல்லை. மொத்தமே 40 வீடுகள் தான் இருந்தது. அனைத்து வீட்டுக்கதவையும் தட்டிப்பார்த்துவிட்டு அந்த ஊருக்கென இருந்த ஒரு கோவிலின் வாசலில் வந்து அமர்ந்தான்.

புதிதாக ஊருக்குள் வந்த ஒருவனைக் கண்டு குரைக்க நாய்கள் கூட இல்லை. ஆடுகள், மாடுகள், கோழிகள் என எதுவும் தெருக்களில் சுற்றித் திரியாமல் வெறிச்சோடிக் கிடந்தது. சீராளனுக்கு மிகவும் பயமாக இருந்தது.

கோவில் வாசலை திறந்தான். உள்ளே சென்று சுற்றிப் பார்த்தான். பின்னர் சாமியை வணங்கியவன் வெளியே வந்தான். நான்கு திசைப்பக்கமும் நடந்து பார்த்துவிட்டு வந்தான். பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. தான் இறங்கி வந்த ஊர்தான் பெரிய ஊர் என நினைத்துக் கொண்டான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. ஊரின் இடுகாட்டிற்கும் பக்கத்திலிருக்கும், சுடுகாட்டிற்கும் செல்வதென முடிவெடுத்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மிக அருகில் அங்கே சென்றான்.

அங்கே புதிதாக எதுவும் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் விளங்கவில்லை. தன்னுடன் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து போனது. தெருவோரம் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து குடித்துப் பார்த்தான். நன்றாகத்தான் இருந்தது. திரும்பிச் செல்ல மனமின்றி அங்கேயே தங்கினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் மனிதர்கள் பேசும் சப்தம் கேட்டது. ஒரு நாய் இவனைப் பார்த்து குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. அரண்டு போனான். அருகில் வந்த நாய் வாலை ஆட்டியது.

"யாரு தம்பி நீ, ஊருக்குப் புதுசா கோட்டு சூட்டு எல்லாம் போட்டிருக்க" என்றார் ஒருவர்.

"ஆமாங்க, இந்த ஊருக்கு டாக்டரா வேலைப் பார்க்க வந்துருக்கேன்" என்றான் சீராளன்.

"விருப்பப்பட்டு வந்தியா, நாமளும் ஒரு கிராமத்தில வேலை பார்த்தோம்னு சொல்லிக்கிட்டு டாக்டர் சர்டிபிகேட்டு வாங்கனும்னு இங்க வந்தியா" என்றார் அவர். சீராளன் ஆச்சரியப்பட்டான்.

"விருப்பப்பட்டுதான் இந்த ஊருக்கு வந்தேங்க" என்றான் சீராளன். அனைவரும் சீராளனை வளைத்து நின்று கொண்டார்கள். சீராளன் தான் படித்த கல்லூரி, தான் ஊர் பற்றிய விவரங்கள் எல்லாம் சொல்லி தங்குவதற்கு சில வசதிகள் செய்யுமாறு கேட்டுக்" கொண்டான்.

"இங்கே தங்கி எங்களுக்கு தனியாளா என்ன செய்யப் போற, காய்ச்சல் வந்தா ஊசிப் போடுவ. லொக்கு லொக்குனு இருமினா ஒரு மருந்தை கொடுப்ப. ஊரை காலி பண்ணுற வியாதி வந்தா என்ன பண்ணுவ" என்றார் அவர். சீராளன் திருதிருவென விழித்தான். "இன்னைக்கு ஒருத்தரை ஊரே கொண்டு போய் ஆஸ்பத்திரில விட்டுட்டு வந்துருக்கோம்" என்றார் மேலும்.

"டாக்டர் மட்டும் போதாது. டாக்டர்க தொழில் பார்க்கற அளவுக்கு வசதியும் இருக்க ஆஸ்பத்திரக வேணும். நீ எவ்வளவு பணம் கொடுத்த படிச்சியோ, எவ்வளவு பணம் சம்பாரிக்க நினைச்சியோ. நீ இப்படியே இந்த கிராமத்தில இருந்திட்டா எப்படி முன்னேறுவ சொல்லு" என்றார் அவர்.

சீராளன் எதுவும் பேசாமல் அன்றே இரவே தனது ஊருக்கு கிளம்பிச் சென்றான். தனது ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு மேடை பேச்சாளர் உரக்க பேசிக் கொண்டிருந்தார். 'இந்தியாவில் கிராமங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு படித்தவர்களே காரணம்' என்னும் வாசகம் சீராளனின் ஒரு காதில் விழுந்து மறுகாதின் வழியே வெளியேறிச் சென்றது.

- டாக்டர் வெ.ராதாகிருஷ்ணன்([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X