For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதை

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திமுகவில் இருந்தபோது, எனது பதவிக்கு குறி வைத்தார் அந்தத் தம்பி. அதேபோல நான் நீண்ட காலம் உயிரோடு இருந்தால் தலைவர் பதவியை அடைய முடியாதே என்றும் கவலைப்பட்டார் என்று கவிதை எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

கருணாநிதியின் அந்த கவிதை:

(முன்னுரை:- கழகக் குடும்பத்தின் உடன்பிறப்புகள் -பாசமிகு தம்பிமார்கள் எல்.ஜி., செஞ்சி - அவர்களைத் தொடர்ந்து தம்பிகள் மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், டி.கே.சுப்பு ஆகியோர் ஆயிரக்கணக்கான கட்சி மாமணிகளுடன் தாய்க் கழகத்திற்கு வந்து இணைந்த போது அந்த ஐவருடனும் தனித்து உரையாடிய நேரத்தில் எழுந்த நினைவலைகளே இந்தக் கடிதம்)

உடன்பிறப்பே,

குமரி முனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில்
குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தேனாம்;
அந்த நள்ளிரவில் அப்போது நமது தம்பிமார்கள்-
ஆற்காட்டார்-துரைமுருகன் - இன்னொருவர் இப்போது நான்,
பெயர் சொல்ல விரும்பாதவர்; இவர்கள் மூவரும்
மாடித் தாழ்வாரத்தில்-தேடக் கிடைக்காத திரவியமாய்த்
திராவிடர்க்குக் கிடைத்த தி.மு.கழகத்தின் வளர்ச்சி,
வலிமை, வற்றாத பாச உணர்வு-இவை பற்றியும்-அதன்
வருங்காலம் பற்றியும் வானம் வெளுக்கும் வரையில்
உரையாடினார்களாம்.

அப்போது, அந்தத் தம்பி-நான் பேர் சொல்லாப் பெருமகன்;
என் தம்பிகள் ஆற்காட்டாரையும், துரைமுருகனையும் பார்த்து;
"சரி, கலைஞருக்கு அடுத்து கழகத்தின் தலைவர்-
ஸ்டாலின் தானா?''என வெகுண்டெழுந்து
கேட்டாராம்-
எப்படி அதைச் சொல்கிறாய் என அந்தத் தம்பியர்
கேட்டவுடன்; "பேராசிரியர், கூட்டங்கள்-மாநாடுகளில்
கூறுகின்ற புகழுரைகள் ஸ்டாலினைப் பற்றி
மழையாகப் பொழிகிறதே
என ஆயாசப்பட்டாராம்; அந்த அருமைத் தம்பி!
உடன்; ஆற்காட்டாரும், துரைமுருகனும்; "அன்பழகனார்
அப்படிப் பேசுவதில் என்ன தவறு? அந்தப் பிள்ளையாண்டான்
செய்துள்ள தியாகம்-இளைஞர் அணியை வளர்க்கும்
இணையற்ற ஆற்றல்-இவற்றைப் பேராசிரியர் பாராட்டுவதில்
என்ன குறை - யாரையும் எடை போட்டுத் தான் -
பேராசிரியர் ஏற்றுக் கொள்வார்-
கலைஞரையே உறைத்துப் பார்த்து உண்மைத்திறனை உணர்ந்த
பிறகு தான் ஒப்புக் கொண்டார்; தனக்கே தலைவராக!
எனவே இப்போது கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான்
என்ற பேச்சுக்கு என்ன அவசரம்? நீர் ஏன் நெருப்பைத்
தொட்டது போல் துடிக்க வேண்டும்? கலைஞரே இப்போது
உம்மைத்தானே "போர்வாள்'' என்று புகழ்கிறார்-போற்றுகிறார்-
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல
வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்;
கவலைப்படாமல் இருந்திடுக! கலைஞர்; தனக்குப் பிறகு
உம்மைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு'' என்று நம்பிக்கை
தெரிவித்து அந்த நள்ளிரவிலும் நமது பேர் சொல்ல விரும்பாத
பெருமை மிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச்
செய்திருக்கிறார்கள்.

புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில்
புதியதோர் சிந்தனை-அது ஒரு கேள்வியாகவும் மாறியது!
"ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது
கலைஞர், பெரியார் போல-ராஜாஜி போல-தொண்ணூறு
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு
எத்தனை வருடம் காத்திருப்பது?''
இதைக் கேள்வியாகக் கருதாமல்; மற்ற இரு தம்பியரும்
தேள் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி-
இருவரும் ரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்களாம் -
இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம்
எப்போதும் சொல்வதில்லையென்று !

ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!

குறளின் அமுத மொழியாம்;
"செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி''

(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்கமாட்டார்கள்)

உடன்பிறப்பே,

குறளோவியம் நூல் தொகுப்பில் நான்
குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா;
இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே;
அந்த நினைவுக்கு ஒரு நன்றி!.

முதல்வர் கருணாநிதி இந்தக் கவிதையில் குறிப்படும் 'தம்பி' யார் என்று புரிகிறதா..?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X