தேர்தலால் கலையிழந்த திருவிழாக்கள்

நெல்லை: தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி விதிமுறைகளால், தென் மாவட்டங்களில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாக்கள் கலை இழந்து, உற்சாகமின்றி காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வரும் 13ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த ஆணையின்படி செயல்பட்டே தீரவேண்டிய கட்டாயத்தி்ல் அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
மேலும் டிஜிட்டல் போர்டுகள், வால்போஸ்டர்கள், கட்அவுட்கள், கொடி தோரணங்கள், சுவர் விளம்பரங்கள் போன்றவை வைக்க கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பிரசார வாகனங்களுக்கும் இதேநிலைதான்.
இது மக்களிடம் வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு சரியான கட்டுபாடுதான் என்று பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை வரவேற்கின்றனர்.
ஆனால், அதே சமயத்தில் மக்கள் கொண்டாடும் கோவில் திருவிழாவிலும் தேர்தல் ஆணையத்தின் தலையீடு இருப்பதால் தங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொன்றுதொட்டு வரும் தெய்வ நம்பிக்கையினால் குக்கிராமங்கள் முதல் வளர்ச்சியடைந்த நகரங்கள் வரை ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களில் வருமானம் வரக்கூடியவைகளில் இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது போக மீதம் மேலும் பல ஆயிரக்கணக்காண கோயில்கள் உள்ளன.
இந்த ஆலயங்கள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான சமூக மக்கள் உருவாக்கியவை. இந்த ஆலயங்களில் பரவலாக பள்ளி, கல்லூரி விடுமுறை காலங்களில் திருவிழாக்கள் அச்சமூக மக்களின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம்.
மேலும் பங்குனி, சித்திரை, வைகாசி போன்ற தமிழ்மாதங்களில்தான் மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இசக்கியம்மன், முப்புடாதி, வடக்குத்தியம்மன், சுடலைமாடன் உள்ளிட்ட பல்வேறு பெயர்கலில் உள்ள கோவில்களில் ஒரு வாரம் வரை திருவிழா மேளதாளம், கரகாட்டம், ஓயிலாட்டம், முளைப்பாரி ஊர்வலம், பால்குடம், தீர்த்தம் எடுத்து வருதல் கலக்கலான ஆடல்பாடல் என பல்வேறு விதமான நாட்டு புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
மேலும் வேலை காரணமாக வெளியூறுக்கு இடம் பெயர்ந்த சொந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடி வந்து மகிழ்ச்சியோடு கலந்து கொள்வார்கள்.
தற்போது தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டதால் குறிப்பிட்ட சமூக மக்கள் தங்களது தெய்வமாக மதித்து வரும் மறைந்த தியாகிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரது உருவ படங்களில் ஆன டிஜி்ட்டல் போர்டு, கட்அவுட்டுகள் போன்றவை வைப்பது தேர்தல் ஆணைய விதிமுறைப்படி தண்டனைக்குரியது, அவைகளை வைக்க கூடாது என்றும் அப்படி வைத்தவைகளை காலவரையின்றி அப்புறப்படுத்த வருவாய்துறைக்கும், காவல் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் கோவில் திருவிழாவில் போலீசார் படைசூழ பார்வையிட்டு வருகின்றனர்.
ஆடல் பாடலுக்கு அனுமதி மறுப்பு...
இதனால் கோவில் திருவிழாக்களை நடத்துபவர்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். தென்மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆடல்பாடல், கரகாட்டம், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் திருவிழாவினால் ஆண்டுக்கு ஒருமுறை துன்பங்களையும், துயரங்களையும் மறந்து குதூகலத்தோடும், உறவினர்களோடும் கொண்டாடும் கோயில் திருவிழா கலை இழந்துள்ளது. பல லட்ச ரூபாய் வசூல் செய்து கொண்டாடப்படும் திருவிழாக்கள் பாதியில் நின்ற சம்பவங்களும் அதிகம்.
நெல்லை மாவட்டத்தில் பிரபலமான பண்பொழி திருமலைகுமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவின் போது ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திடீரென வந்த காவல்துறை அந்நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. இதனால் கோபம் கொண்ட பொதுமக்கள் சப்பரத்தி்ல் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியினை அப்படியே நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.
பின்னர் மறுநாள் பேச்சுவார்த்தை பின்பே சப்பர வீதிஉலா நடந்தது. அதேபோல செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் ஒரு கோவில் திருவிழாவின்போது டிஜிட்டல் பேனர்களை போலீசார் அப்புறப்படுத்த உடனே திரண்டு வந்த பொதுமக்கள் இன்ஸ்பெக்டரையும், போலீசாரையும் முற்றுகையிட்டு, பஸ் மறியல் செய்தனர்.
பின்னர் போலீசார் சுமார் 250 பேர் மீது வழக்கு பதிவு செய்ய ஊரை திரண்டு குடும்ப அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம், வழக்கை வாபஸ் வாங்கவும், இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்தல் புறக்கணிப்பு நடத்த முடிவு செய்ததும், மதம் மாறுவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதே போல் தென்மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் பொதுமக்கள்-போலீசார் பகைவர்களாகும் நிலை உருவாகி வருகிறது. தேர்தல் கமிஷன் என்பது மக்களுக்காக செயல்படுவதுதான். ஆனால் அந்த ஜானநாயக பேரியக்கம் மக்கள் மீதே வலிமையான ஆயுதத்தை கொண்டு தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்தோ, திருட்டோ நடந்தால் மெதுவாக செல்லும் நமது காவல்துறை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டால் புயலாக புறப்பட்டு விடுகிறார்கள் என்ற கருத்தும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவு ஒருபுறம் மக்களின் மத நம்பிக்கையில் புகுந்து அவப்பெயரை பெறும் நிலை ஒருபுறம்... மொத்தத்தில் சிக்கலான உத்தரவுகளால் காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications