For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடை கட்டுப்பாடு-தொடரும் சர்ச்சைகள்: குவியும் வழக்குகள்!

By Staff
Google Oneindia Tamil News

College girls
சென்னை: கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கான உடைக் கட்டுப்பாடு சமீப நாட்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. சேலை அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்று கோரி சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி கல்லூரி மாணவி போட்டுள்ள வழக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்தான் முதன் முதலில் இந்த சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழி போட்டு வைத்தது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செல்போன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அது போட்ட உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அப்போதைய துணைவேந்தர் விஸ்வநாதன் இதை கடுமையாக அமல்படுத்தினார்.

அதன் பின்னர் பல்வேறு கல்லூரிகளிலும் இதேபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட ஆரம்பித்தது. பின்னர் உடைக் கட்டுப்பாடும் அமலுக்கு வந்தது. மாணவர்கள் பேஷன் டிரஸ்களில் வரக் கூடாது, மாணவிகள் ஆபாசமான உடையி்ல, கவர்ச்சிகரமாக வரக் கூடாது என்று தொடர்ந்து பல்வேறு விதமான தடைகள், கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

தாடி வைக்கக் கூடாது, கண் புருவத்தை சீர்திருத்தக் கூடாது உள்ளிட்ட தடைகளும் கூட சில கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டன.

இந்த நிலையில்தான் சேலை மட்டுமே அணிய வேண்டும், சுடிதார், சல்வார் கமீஸ் போட்டு வரக் கூடாது என சென்னை போரூர் வெங்கடேஸ்வரா ஹோமியோபதி கல்லூரி திடீர் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து அந்தக் கல்லூரியின் ஹவுஸ் சர்ஜன் மாணவியான கமலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப் போகிறது. இந்த தீர்ப்பை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

சேலை கட்டாமல் வந்தால் அவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என்பது கமலத்தின் கல்லூரி போட்டுள்ள உத்தரவாகும். ஆனால் தான் வாழ்க்கையில் இதுவரை சேலையே கட்டியதில்லை, எனக்கு சுடிதார்தான் சவுகரியமானது என்பது கமலத்தின் வாதம்.

இதுபோன்ற வழக்குகளை கோர்ட் நிறைய பார்த்து விட்டது. ஆனாலும் இதுவரை டிரஸ் கோட் என்பது குறித்து இறுதியான, உறுதியான, தீர்க்கமான தீர்ப்பை இதுவரை எந்த கோர்ட்டும் தந்ததில்லை. இதனால்தான் இந்த சர்ச்சைகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டுள்ளன.

2004ம் ஆண்டு தி.நகரைச் சேர்ந்த ஒரு பள்ளியில், ஆசிரியைகள் கண்டிப்பாக சேலையில்தான் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதேபோல ஆசிரியர்கள் பேன்ட் மற்றும் முழுக் கை சட்டை அணிந்துதான் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்க முடியாமல் நான்கு ஆங்கிலோ இந்திய ஆசிரியர்கள் தடுமாறினர். தங்களது ஆட்சேபத்தைத் தெரிவிக்கும் வகையில் வேட்டி, சட்டை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து வேட்டி, சட்டை அணிந்து வந்தால் தினசரி ரூ. 25 அபராதம் தர வேண்டும் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அபராதம் விதித்தது.

2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இதுதொடர்பாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அது ஆசிரியர்களுக்கு பாதகமாக இருந்தது.

தனியார் பள்ளிகள், தங்களது ஆசிரியர்களுக்கு உடைக் கட்டுப்பாட்டை விதிக்க முழு உரிமை உண்டு. ஆசிரியர்கள், பாடம் எடுப்பது மட்டும் அவர்களது கடமை அல்ல. மாறாக மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தையும் அவர்கள் போதிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒழுக்கத்தை கொண்டு வரும் வகையில்தான் உடைக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என அந்தத் தீர்ப்பு கூறியது.

ஆனால் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே உயர்நீதிமன்றம் வேறு மாதிரியான ஒரு தீர்ப்பை வழங்கியது - வேறு ஒரு வழக்கில்.

சென்னை விமான நிலைய ஆணையகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் கதர் உடையில் வந்ததால் அவரை தண்டித்தது விமான நிலைய ஆணையகம்.

இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். அதற்குப் பதிலளித்த விமான நிலைய ஆணையகம், நாங்கள் தரும் பாலியஸ்டர் மற்றும் சிந்தெடிக் ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்பது ஆணையகத்தின் விதி என்றனர்.

அதை விசாரித்த நீதிபதி சந்துரு, விமான நிலைய ஆணையகத்தின் உத்தரவு மிகவும் மோசமானது, சர்வாதிகாரமானது.

சுதந்திர இந்தியாவில் கதர் ஆடை அணிவது குற்றம் என்று கூறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

சம்பந்தப்பட்ட பெண் ஊழியரை விமான நிலைய ஆணையகம் தேவையில்லாமல் துண்புறுத்தியுள்ளது. அவரை வேட்டையாடியுள்ளது. ஆணையகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பளித்தார்.

இதேபோல சுப்ரீம் கோர்ட்டில், மத்தியப் பிரதேசத்தசைச் சேர்ந்த முகம்மது சலீம் என்பவர் ஒரு வழக்கு போட்டார். தான் நீண்ட தாடி வளர்க்க விரும்புவதாகவும், ஆனால் கல்லூரி நிர்வாகம் அதை அனுமதிக்க மறுப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, மாணவரின் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மாணவர்கள் முகச் சவரம் செய்து நீட் ஆக வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதில் என்ன தவறு. இந்த நாட்டில் தலிபான்கள் உலவுவதை நாம் அனுமதிக்க முடியாது.

நாளையே ஒரு மாணவி வந்து, நான் பர்க்கா அணிய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டால் அனுமதித்து விட முடியுமா. உரிமைகளுக்கும், தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் இடையே சம தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதுபோல கோரக் கூடாது என்றார்.

சில வாரங்களுக்கு முன்பு கூட பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை அளித்தது. ஷிரோமாணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டிக்கு சொந்தமான கல்லூரியில் படிக்கும் மாணவி, கண் புருவத்தை சீர்திருத்தியும், லிப்ஸ்டிக் பூசியும் கல்லூரிக்கு வந்ததால் அவரை கல்லூரியை விட்டு நீக்க முடிவு செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த மாணவி தொடர்ந்த வழக்கில், கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம்.

தற்போது வக்கீல்களுக்கு உடைக் கட்டுப்பாடு உள்ளது. அதை மீறினால் தண்டனை உண்டு. ஆனால் இந்த உடைக் கட்டுப்பாடு படு தெளிவாக உள்ளதால், எந்தவிதக் குழப்பமும் இல்லை. உடைக் கட்டுப்பாட்டை யாரும் மீறுவதும் இல்லை.

ஆனால் கல்வி நிறுவனங்களில் எந்த உடை அணிந்து வரலாம், எதை அணியக் கூடாது, எது ஆபாசம், எது சட்டவிரோதம் என எந்த தெளிவான விதிகளும், வழிகாட்டிகளும் இல்லை.

இதுகுறித்து ஒரு மூத்த நீதிபதி கூறுகையில், முதலில் சட்டமே இல்லை என்கிறபோது, சட்டவிரோதம் என்று நாம் எப்படிக் கூற முடியும் என்கிறார்.

உடைக் கட்டுப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் கலாச்சாரம், கல்வி நிறுவனங்களின் சூழ்நிலை, மாணவ, மாணவிகளின் சவுகரியம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, மாணவ, மாணவிகள் மீதான கட்டுப்பாட்டை அறிவிப்பதற்கு முன்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளைப் பெற்று அவற்றை அமல்படுத்துவதே குழப்பங்கள் எழாமல் இருக்க ஒரே வழி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X