போர் முடிந்ததால் இலங்கைக்கு மீண்டும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வரத்து

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்ததை விட இந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
இதுகுரித்து இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணையத்தின் இயக்குநர் கலைச்செல்வம் கூறுகையில், இலங்கையில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த ஆண்டு கிடைத்த வருவாயை விட இந்த ஆண்டு கூடுதலாக பெற முடியும் என்று நம்புகிறோம். 2016ம் ஆண்டு வாக்கில் இலங்கைக்கு சுற்றுலா மூலம் 2.5 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும், 20.5 லட்சம் பேர் வருவார்கள் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.
இலங்கையின் முக்கிய வருவாய் ஆதாரமே சுற்றுலாதான். இலங்கையில் உள்ள ஏழு இடங்களை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய வருகைப் பகுதிகளாக உள்ளன. இவை தவிர இலங்கையின் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல், கடற்கரைகள் ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருகின்றன.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இனப் போர், சுனாமி தாக்குதல் உள்ளிட்டவற்றால் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் அடியோடு பாதிக்கப்பட்டது.
தற்போது போர் முடிவடைந்து விட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழர்களின் தாயகமான வட பகுதிகளுக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதேசமயம், கொழும்பில் இன்னும் தற்கொலைப் படைத் தாக்குதல் பீதி குறையவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் இன்னும் பெருமளவில் இலங்கையில் குவியாமல் உள்ளனர்.
அதேசமயம், கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகமாக கொழும்புக்கு வடக்கே 100 மைல் தொலைவில் உள்ள கல்பிட்டியா என்ற இடத்தில் 4000 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா மையம் ஒன்றை நிறுவவுள்ளது இலங்கை அரசு.
இப்படி தனது நாட்டை மறு சீரமைப்பதிலும், வருவாயைப் பெருக்கிக் கொள்வதிலும்தான் இலங்கை அரசு தீவிரமாக இருக்கிறது. அதேசமயம், முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளி கொட்டடிகளில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு இடம் பெயர வைக்காமல் அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசின் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்தவண்ணம்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications