ஈழ தமிழர்களின் துயர்நீக்கும் விடிவு விநாயக சதுர்த்தி-அர்ஜூன் சம்பத்
சென்னை: ராஜதந்திரம் என்ற பெயரில் நாடகமாடிய கருணாநிதியை ஈழத்தில் மண்ணாகி போன அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்காது. இந்த ஆண்டு விநாயக சதூர்த்தி ஈழ விடிவு சதுர்த்தியாக கொண்டாடப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி...
தமிழக முதல்வர் கருணாநிதி, ஈழத்தில் பிஞ்சு குழந்தைகள் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தைக்கூட கண்டு கொள்ளாமல், பதவி நாற்காலியை பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவர். இதை நன்றாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அரசு ஈழத்தையே எழவு காடாக்கிவிட்டது.
கருணாநிதி தமிழகத்தின் தலைமகனாக இருந்தும் இந்திய அரசின் ஆயுத உதவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், இலங்கையின் மனிதத் தன்மையற்ற வெறித்தனத்தை தட்டிக் கேட்க தைரியமில்லாமல் இருந்ததால்தான், இன்றைக்கு ஈழத் தமிழர்கள் நாதியற்றுப் போய்விட்டனர்.
ஆனால், அதற்காகத் தமிழகத்திலிருந்து ஒலிக்கத் தொடங்கி இருக்கும் ஒப்பாரிக் குரல்களைக்கூட நசுக்குவது போல், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறு என திடீரென தமிழக அரசு மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே பலமுறை சொல்லி இருக்கிறது. அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், 1968-ம் ஆண்டு சட்டத்தை நினைவூட்டி தமிழக அரசு மிரட்டுகிறது.
விடுதலைப் புலிகளை அடியோடு நசுக்கி அழித்துவிட்ட பிறகும், எதற்காக இந்த அரசு பயப்பட வேண்டும்?
அரசு எத்தகைய மிரட்டலை அறிவித்தாலும், இந்த வருட சதுர்த்தியை இரத்தமும் கண்ணீருமாகச் செத்தழிந்து கிடக்கும் ஈழத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஈழ விடிவு சதுர்த்தியாகவே வழிபடுவோம். பிரபாகரனையோ புலிகளையோ நாங்கள் துதி பாடவில்லை.
ஆனாலும், ஈழத்தின் பெயரால் நாங்கள் ஏற்பாடு செய்யும் சதுர்த்தி விழாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தமிழகம் முழுக்க எழும் தமிழ் ஈழம் என்கிற பெயரில் கட்-அவுட்களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார். திசையெங்கும் சிறுத்தைக் கொடியும் புலிக் கொடியும் பறக்கிறது.
பிரபாகரனும் திருமாவளவனும் ஒருசேர போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிறது. ஆனால், இதெல்லாம் கருணாநிதிக்கு தெரியாது.
நெடுமாறன், சீமானை மிரட்டவா?
நெடுமாறன், அமீர், சீமான் போன்றவர்களை மிரட்டத்தான் அரசின் அறிவிப்பா? திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரை பொறுமை காத்து அதன்பிறகு தமிழக அரசு திடீர் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
சமீபத்தில்கூட விடுதலைச் சிறுத்தைகள் எழும் தமிழ் ஈழம் என்ற பெயரில் பாடல் சிடிக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் எழும் தமிழினம் என்கிற உணர்ச்சிப் பாடலை திருமாவளவனே எழுதி இருக்கிறார். கருணாநிதிக்கு இது கவனத்தில் படவில்லையா?
ஆரம்பம் தொட்டே அடக்குமுறை நடவடிக்கைகளாக வைகோ, அமீர், சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்டோரை எல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த கருணாநிதி, திருமாவளவன் விவகாரத்தில் மட்டும் இன்றுவரை வாய்மூடிய மௌனியாக இருப்பது ஏன்? இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளின் பின்னணிகள் யாருக்கும் புரியாமல் இல்லை.
ஈழத்துக்கான எழுச்சியை ஒரேயடியாக நீர்த்துப் போகச் செய்ய இருவரும் திட்டம் போட்டுச் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரால் ஈழ விவகாரம் பெரிதாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திருமாவளவனை தூண்டிவிட்டு ஒப்புக்குச்சப்பாக பிரசாரம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
திருமாவளவனுக்கும் அருகதை இல்லை...
திருமாவளவன் என்றைக்கு காங்கிரசுடன் கைகோத்தாரோ, அன்றைக்கே ஈழத்தைப் பற்றிப் பேசும் அருகதை அவருக்கு இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தை ஏமாற்றவும், காங்கிரஸை மிரட்டவும் திருமாவளவன் என்கிற அஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
குடும்பத்தை மேம்படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ராஜதந்திரம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் நாடகமாடும் கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்கவே மன்னிக்காது என்றார் அர்ஜூன் சம்பத்.