மிருகவதைக்கு எதிராக போராடி வரும் கசாப்புக் கடைக் காரருக்கு மகாவீரர் விருது
சென்னை: குடும்பம் நிறைய கசாப்புக் கடைக்காரரர்கள். ஆனாலும், தானேவைச் சேர்ந்த முகம்மது அப்ரார் குரேஷி மட்டும் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, விலங்குகளை வெட்டக் கூடாது, விலங்குகளிடம் அன்பு காட்ட வேண்டும் என்று இயக்கம் அமைத்துப் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு சென்னையைச் சேர்ந்த பகவான் மகாவீரர் பவுண்டேஷன் வழங்கும் மகா வீரர் விருது கிடைத்துள்ளது.
பீப்பிள் ஹூ கேர் பார் அனிமல்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் குரேஷி. இவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக கசாப்புக் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். ஆனால் குரேஷி மட்டும் அதில் ஈடுபடவில்லை.
மாறாக கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப்டும், ஆடு, மாடுகளை மீட்பதே இவரது முக்கிய வேலையாகும். மேலும், தானே மற்றும் சுற்றுப் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் கசாப்புக் கூடங்களுக்கு இவர் ஒரு போரே நடத்தி வருகிறார். பல ஆயிரக்கணக்கான கால்நடைகளை காப்பாற்றியும் உள்ளார்.
கால்நடைகளைக் காக்க நடந்த போரில் ஒருமுறை இவரைக் கொல்ல முயற்சி நடந்ததாம். இன்னொரு முறை இரு கால்களையும் அடித்து உடைத்தனராம். ஆனாலும் விடாமல் போராடி வருகிறார் குரேஷி.
52 வயதான குரேஷியின் இந்த சேவையைப் பாராட்டி அவருக்கு சென்னையைச் சேர்ந்த பகவான் மகாவீரர் பவுண்டேஷன், இந்த ஆண்டுக்கான 13வது மகாவீரர் விருதினை அறிவித்துள்ளது.
ரூ. 5 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவை அடங்கிய இந்த விருது ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குரேஷிக்கு வழங்கப்படும்.
குரேஷி தவிர, தர்மபுரி பழங்குடியினர் சுகாதார அமைப்பு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகார்னி நகர் விஸாக் சமிதி, கர்நாடகத்தைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா ஒருங்கிணைந்த ஊரக சுகாதார மையம் ஆகியவற்றுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications