பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக் கிளை அறிமுகம்
சிறுமி வஃபாவின் 'கிரா-அத்" தோடு துவங்கிய நிகழ்ச்சியில் தாவூத் குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிப் பாடிய பாடலும் அதனைத் தொடர்ந்து 'தீனிசை வேந்தர்" தாஜூதீன் அவர்களின் இஸ்லாமியப் பாடல்களும் இடம் பிடித்தன. அதனைத் தொடர்ந்து 'இஸ்லாமும் இலக்கியமும்" என்ற தலைப்பில் இர்ஃபானா உரையாற்றினார்.
மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின் தொடர்ந்த நிகழ்வில் அமைப்பின் இணைச் செயலாளர் அதிரை ஷர்புத்தீன் வரவேற்புரை வழங்க விருந்தினர்களை மேடைக்கழைத்து கௌரவித்தார் அமைப்பின் தலைவர் அப்துல் கதீம். தனது தலைமையுரையில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தேவையைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அமைப்பின் செயலாளர் ஆசிப் மீரான் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக் கிளையின் நோக்கங்களைத் தெளிவாக விளக்கியதோடு, கழக்த்தில் இணைந்து பயன்பெற வருமாறு படைப்பாளிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
'காவியத்திலகம்" ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் எழுதி விரைவில் வர இருக்கும் 'திப்பு சுல்தான்" வாழ்க்கை வரலாற்றுக் காவியம் குறித்த அறிமுகத்தை விழாக்குழு தலைவர் கலையன்பன் ரஃபீக் அவர்கள் வழங்க, அரபி-தமிழ் அகராதி குறித்த அறிமுகவுரையை துணைச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் நிகழ்த்தினார்.
இலங்கையைச் சேர்ந்த காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் எழுதிய "திருநபி காவியம்" குறித்த அறிமுகத்தை அபுல் கலாம் ஆசாத் எளிமையாக விளக்கிய பின்னர் 'திருநபி காவியம்" மின்னூலாக வெளியிடப்பட்டது. முனைவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மின்னூலை வெளியிட ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செய்யது எம். சலாஹூதீன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய சலாஹூதீன் சமூக ஏற்றத்தாழவுகளை எவ்வாறு தமது சிறுவயதில் தாம் உணர நேர்ந்தது என்பதனையும் ஆகவே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கெதிரான சமுதாயம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்ந்ததையும் சுட்டிக் காட்டினார்.
ஏற்புரை வழங்க வந்த ஜின்னாஹ் ஷரீபுத்தீன் மிகக் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான விழாவை நிகழ்த்திய பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக நிர்வாகிகளைப் பாராட்டினார். இந்த அமைப்பு மேலும் தொடர்ந்து உற்சாகத்துடன் இயங்க வேண்டுமென்று அவர் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார். வரும் டிசம்பர் மாதம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மாநாடு ஒன்று துபையில் நடக்கவேண்டும் எனவும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அமைப்பின் உபதலைவர் அஷ்ரஃப் அலி புரவலர்களைக் கௌரவித்தார் முன்னிலை வகித்த ப்ளூ ஸ்கை இக்பால், ஆலியா தாவூத் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த முனைவர் அப்துல்லாஹ் தனது உரையில் உளவியல் ரீதியாக மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகளைச் சுட்டிக்காட்டினார். எத்தகைய மன அழுத்தங்கள் மனிதர்களுக்கு நேர்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் அந்த மன அழுத்தங்களிலிருந்து விடுபடுதலுக்கான வழிகாட்டுதல் புனித திருக்குர்ஆனில் இருப்பதை உணர்ந்த காரணத்தினாலேயே தாம் இஸ்லாத்தை தனது மார்க்கமாகத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
ஒரு விஞ்ஞானியாக இஸ்லாம் கூறும் பல குறிப்புகள் தன்னை வியக்க வைத்ததாகவும் தனது பத்தாண்டு கால குர்ஆன் வாசிப்பின் காரணமாக இஸ்லாம்தான் முழுமையான மார்க்கம் என்பதனை உணர்ந்ததாலேயே உறவினர்களிடம் கூடத் தெரிவிக்காமல் தாம் இஸ்லாத்தைத் தழுவியதாகக் குறிப்பிட்ட அவர் மனித ஜனனம் குறித்த விளக்கங்களை விஞ்ஞானம் கண்டறியும் முன்னரே திருக்குர்ஆன் அது குறித்த தெளிவைக் காட்டியிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
நீண்ட ஒரு மணி நேர பேச்சின்போது உளவியல், சமூகம், இஸ்லாம் தொடர்பாகப் பல்வேறு விசயங்களையும் தெள்ளத் தெளிவாகப்பேசிய முனைவர் அப்துல்லாஹ்வின் உரை பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அமைப்பின் சார்பில் விழாக்குழு செயலாளர் கீழை ராஸா நன்றி கூறினார். விழாவை அமைப்பின் மகளிர் அணித்தலைவி ஜெஸிலா ரியாஸ் தொகுத்து வழங்கினார்
தகவல்: ஆசிப் மீரான்













Click it and Unblock the Notifications