குமரி அனந்தன் பிறந்தநாள் விழா... 18 புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!
சென்னை: குமரி அனந்தன் பிறந்தநாளையொட்டி, அவர் எழுதிய 18 புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்தினார் துணை முதல்வர் முக ஸ்டாலின்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 77வது பிறந்தநாள் விழா, பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவுக்கு மணி மண்டபம் அறிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி அறிவிப்பு விழா, குமரி ஆனந்தன் எழுதிய 18 புத்தகங்கள் வெளியீட்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக சென்னை காமராஜர் அரங்கில் கொண்டாடினர்.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோருடன் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் ஸ்டாலின் பேசுகையில், "குமரிஅனந்தன் 18வது வயதில் காங்கிரசில் இணைந்துள்ளார். அதை நினைவு கூறும் வகையில் இன்று அவர் எழுதிய 18 நூல்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவுக்கு மணிமண்டபம் கட்ட ரூ.40 லட்சம் ஒதுக்கியதற்காக முதலமைச்சர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதாக குமரி அனந்தன் கூறினார்.
குமரிஅனந்தன் 4 முறை எம்எல்ஏ, ஒரு முறை எம்பியாகவும், கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்திருந்தாலும் எந்நாளும் காங்கிரஸ் தொண்டராக இருந்து தனது கடமைகளை நிறைவேற்றி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கியவர். மணியார்டர் படிவம், காசோலை ஆகியற்றில் தமிழை இடம் பெற செய்தவர்.
டெல்லியில் ஒரு சாலைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டக் காரணமாக விளங்கியவர். 18 வயது நிரம்பியவர்களும் வாக்களிப்பதற்கு காரணமாக இருந்தவர்.
இன்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல சேவைகளை செய்து வருகிறார். தொடர்ந்து அவர் எங்களைப் போன்றோருக்கு வழிகாட்ட வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications