குஜராத் விபச்சார கிராமத்தின் 15 பெண்களுக்கு திருமணம்
அகமதாபாத்: குஜராத்தில் ஆண்டாண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வாதியா கிராமத்தில் முதன்முறையாக 15 பெண்களுக்கு வரும் மார்ச் மாதம் 11ம் தேதி திருமணம் நடக்கவிருக்கின்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வாதியா கிராமம் விபச்சாரத்திற்கு பெயர் போனது. குஜராத்தின் விபச்சார கிராமம் என்று அழைக்கப்படும் அக்கிராமத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுகளில் முதன் முறையாக பல பெண்களுக்கு திருமணம் நடக்கவிருக்கின்றது. வரும் மார்ச் மாதம் 11ம் தேதி அக்கிராமத்தைச் சேர்ந்த 15 பெண்களுக்கு திருமணம் நடக்கவிருக்கின்றது. இதற்காக பலருக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆனால் இந்த திருமண நிகழ்ச்சி வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படி இளம்பெண்கள் திருமணம் செய்து கொண்டு போனால் தங்களுக்கு யார் இன்பம் அளிப்பார்கள் என்பது அவர்கள் கவலை. அதனால் திருமண ஏற்பாட்டாளர்களை வாடிக்கையாளர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வரும் சாரதா என்பவர் தாடார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த கிராமத்து இளம்பெண்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வில் நல்லபடியாக இருப்பதை வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர்களை திருமணம் செய்துகொள்ள அனுமதித்தால் விபச்சாரத் தொழில் அழிந்துவிடுமோ என்று அவர்கள் நினைக்கின்றனர் என்று திருமண ஒருங்கிணைப்பாளர் மிட்டல் பட்டேல் தெரிவித்தார்.
இந்த கிராமத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களில் பலர் ராஜஸ்தான் மற்றும் சௌராஸ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் சரானியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு தொண்டு நிறுவனம் அதே சமூகத்தைச் சேர்ந்த ஆடவர்களிடம் பேசி அந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைத்துள்ளது. வாதியாவில் 750 பேர் வசிக்கின்றனர். அதில் 100க்கும் அதிகமான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications