For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்! உற்சாக கொண்டாட்டம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Varalakshmi Vratham Pooja Day
வரலட்சுமி விரத நாளான இன்று சுமங்கலிப் பெண்கள் வீடுகளை அலங்கரித்து அம்மனுக்கு படையலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

செல்வ வளம் தரும் வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.

வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் நிறைய உண்டு. சௌராஷ்டிர நாட்டின் ராணியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு அன்னை லட்சுமியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வாடினாள். ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதம் பற்றி அறிந்தாள். அதுமுதல் அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் இந்த விரதத்தால் மகிழ்ந்த அன்னை லட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள். தன் மகளின் நிலையைப் பார்த்து, அவள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றாள் சுசந்திரா. அவள் வாழ்வு மீண்டும் வளம் நிறைந்ததாக ஆனது என்கிறது புராணகதை.

சென்னை நகரில் இந்த விரதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதத்தை ஒட்டி வியாழக்கிழமை மாலையே அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் மஞ்சளில் முகம் உருவாக்கி வைத்திருந்தனர். அம்மனுக்கு நகைகள், பூமாலைகள் அணிவித்து பிரமாண்டமாக அலங்காரம் செய்து வைத்திருந்தனர். அம்மனுக்கு பிடித்தமான பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை நிவேதனமாக படைத்திருந்தனர். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை உள்ளிட்ட நிவேதனப் பொருள்களை கலசத்துக்கு முன்னர் வைத்து வழிபட்டனர். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜையில் இருக்கும் அம்மன் அலங்காரம் சனிக்கிழமை காலையில் வடக்கு திசையில் சற்று நகர்த்தி வைக்கப்படும். இரவில் அம்மன் முகத்தை எடுத்து அரிசி பானையில் வைத்து விட்டு அலங்காரத்தை கலைப்பார்கள்.

வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது வடஇந்தியமக்களும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

English summary
The Hindu festival going by the name 'Vara Lakshmi Vratha' is celebrated on the Friday before the full moon in the Tamil Month 'Aadi' which corresponds to the English months of July-August. It is a festival to propitiate the goddess Lakshmi, the consort of Vishnu, one of the Hindu Trinity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X