Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலிங்கம் காண்போம் - பகுதி 48 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

எந்நகரத்தையும் அதிகாலையிலிருந்து பார்க்கத் தொடங்கினால் அதன் அன்றாடத்தின் வளர்ச்சியை எளிதில் உணர்ந்துவிடலாம். அதனால் விடிகாலையிலேயே எழுந்து புவனேசுவரத் தெருக்களில் ஒரு சுற்று போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன்.

நல்லுறக்கத்தின்பின் எழுந்ததும் உடற்சோர்வு நீங்கியிருந்தது. காற்செருப்பை மாட்டிக்கொண்டு விடுதி அறையைவிட்டு வெளியே வந்தேன். விடிகாலைப் புவனேசுவரம் கேரளத்து நகரங்களை நினைவூட்டியது. நெடுஞ்சாலைகளில் வளைவுகள் குறைவாக இருந்தாலே அந்நகரத்தின் போக்குவரத்தில் ஓர் ஒழுங்கு வந்துவிடும்.

Exploring Odissa Kalingam

புவனேசுவரத்துச் சாலைகள் வளைவுகள் குறைந்த நேர்ச்சாலைகள். சாலையோரத்தில் மணற்பாங்கான மண் இறைந்து கிடக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் அவற்றை அகற்றுவதில்லை என்று நினைக்கிறேன். ஈரப்பாங்கான காற்றில் ஊறியிருப்பதால் புழுதியாய்ப் பறப்பதில்லை. நிலத்திலுள்ள மண்ணில் சற்றே மணற்பாங்கு உண்டு. கற்கள் யாவும் இரும்புத் தாதுள்ள கனிமங்களாக இருக்கின்றன. அதனால்தான் அப்பகுதியின் குன்றுகளும் பாறைகளும் கன்னங்கரேல் என்றோ செக்கச்செவேல் என்றோ இருக்கின்றன. கொனாரக் சூரியக் கோவில் கறுப்பாகவும், புவனேசுவரத்தின் கோவில்கள் சிவப்பாகவும் இருக்கின்றன. உதயகிரிக் குகைகளையும் குன்றங்களையும் பார்க்கையில் இக்கருத்தை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம். இரும்புத் தாது இல்லாத பாறைகளில் சுண்ணாம்புச் சத்து மிக்கிருக்கிறது.

நிலத்தின் மணற்பாங்கான தன்மையைக் கணக்கிட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியெங்கும் மகாநதித் தண்ணீர் பரவிப் பாய்ந்து சென்றிருக்க வேண்டும். அல்லது கடல் ஏறி இறங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. நீர்ச்செல்வாக்கு மிக்கிருந்து நிலமாக மீண்ட நிலப்பகுதிதான் புவனேசுவரம்.

நிலமெங்கும் ஒரு குளிர்ச்சி பரவியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கட்டாக் சாலையின் முன்னும் பின்னுமாக நடந்து பார்த்ததில் ஒரு நடைப்பயிற்சி முடிந்தது. ஏதோ முன்பே பழகிய நகரத்திற்குள் நடைபயின்றதைப் போலவே உணர்ந்தேன். சில ஊர்களுக்குச் சென்றால் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும் ஊர்மிரட்சி இங்கே அறவே இல்லை. நாம் காண்கின்ற மக்களும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளும் நம்மைப்போலன்றி மாற்றாக இருந்தால் நான் கூறிய ஊர்மிரட்சி தோன்றிவிடும். அங்குள்ள மக்களும் நம்மைப்போலவே நிறத்தில் உயரத்தில் உடையில் நடையில் பேச்சில் பழக்கத்தில் ஒன்றுபட்டவர்களாக இருந்தால் நமக்கு உறவுணர்ச்சியே ஏற்படும். அந்த இணக்கம்தான் புவனேசுவரத்தில் எனக்கு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். என்னுடைய புவனேசுவரப் புகழ்ச்சியைப் பார்த்த என் நண்பர் “ஏதேது… மகுடேசுவரன் புவனேசுவரன் ஆகிவிட்டாரா…” என்று நகையாய்க் கேட்டார்.

Exploring Odissa Kalingam

நடையின் முடிவில் ஒரு கடையில் தேநீர் பருகினேன். கடைத்தேநீருக்கு மட்டும் எல்லா ஊர்களிலும் ஒரே சுவை. புகழ்ந்து சொல்ல முடியாது என்றாலும் தாழ்த்திச் சொல்வதற்கில்லை. பொதுவாக எல்லாத் தேநீரையும் குளம்பியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றே தோன்றுகிறது. பருகுவது சூடாக இருந்தால் போதும் என்கின்ற நினைப்பில் இருக்கிறேனா… என்னிடமே பலர் கூறியிருக்கிறார்கள். “ஒரு நல்ல காபி எப்படி இருக்கும் தெரியுமா… நான் வாங்கித் தரேன் வாங்க…” என்று அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு அவர்கள் வாங்கித் தருவதும் ஒரே மாதிரியான சுவையில்தான் இருந்திருக்கிறது. அடர்த்தியில் வேறுபாடு இருந்திருக்கலாம்.

இப்போது சாலையில் போக்குவரத்து கூடியிருந்தது. வந்த வழியே அறைக்குத் திரும்பி வந்தேன். நன்றாக உடற்சூடு தணியும்வரை தண்ணீர்க் குளிர்ப்பிப்பு. மகாநதித் தண்ணீராயிற்றே… உடலெங்கும் குளிராய்ப்பட்டு இறங்கியது. குளிர்ப்பு முடிந்து உடனே கிளம்பினோம். இன்றைய நாளுக்கு இரண்டு திட்டங்கள் இருக்கின்றன. ஒன்று இரண்டாயிரத்து இருநூற்றாண்டுகள் பழைய உதயகிரிக் குகைகளைக் காணச் செல்வது. அதைக் கண்டுவிட்டு புவனேசுவரத்திற்குத் திரும்பி வந்து கட்டாக்குக்குச் செல்வது. கட்டாக்கின் வெளி விளிம்பில் ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி ஆற்றில் மணிக்கணக்கில் நீராடுவது. மகாநதியின் தண்ணீரைக் குடித்து நீராடும் அந்நொடியில் நம் கலிங்கப் பயணம் முழுமை அடையும். அவ்விடத்திலிருந்து நாம் வடகிழக்காக ஏறிய பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்த்திக்கில் திரும்பி வரும்வழியில் உள்ள காணிடங்களைக் கண்டபடி ஊர்வர வேண்டியதுதான்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+