• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது ஆட்டம்- ஆதவன் தீட்சண்யா

By Staff
|

நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே

எந்த அரசியலும் இல்லை

தீண்டுவது வெறுமனே சரீரம் சம்பந்தப்பட்டதல்ல

உங்களை விலக்கி வைக்கும் இத்தருணம் மிக முக்கியமானது

எனது குற்றச்சாட்டுகளைப் போலவே

குமிந்து ஊரையே நாறடிக்கும் இந்நரகலெல்லாம்

நேற்றிரவு நீங்கள் தின்றவைதான் தெரியுமா

நீங்கள் எத்தனை அழுக்கானவர்கள் என்பதை

பாழ்பட்டிருக்கும் நீர்நிலைகளைப் பார்த்தறியுங்கள்

சுத்தபத்தமாக இல்லாதாரோடு சுமூகமாய் பழகமுடியாது என்னால்

புராண இதிகாச காலந்தொட்டு

அரசாங்கத்தின் தத்துப்பிள்ளைகளாகவே வளர்ந்திருக்கிறீர்கள்

அடுத்தோரை அண்டிப்பிழைக்கும் கையாலாகாதவர்களோடு

உழைத்து வாழும் என்னால் ஒத்துப்போக முடியுமா?

காலங்காலமாக நீங்கள் இப்படியே கிடந்து பழகியதற்கு

யாரையும் குற்றம் சுமத்தாதீர்கள்

எல்லாக்காலத்திலும் உங்களைத் தூக்கிச் சுமக்க யாராலாகும்?

இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்

சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது

இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை

ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது

பெண்டு பிள்ளை ஒண்டிப் பிழைக்க கொட்டாய் போடத் தெரியாது

வக்கணையாய் பொங்கித் திங்க ஒரு சொப்பு வனையத் தெரியாது

நாலு சுள்ளியொடித்து அடுப்பெரிக்கத் தெரியாது

மமூட்டி பிடித்து ஒருவயலுக்கு மடை திருப்பத் தெரியாது

லட்சணமாய் தோய்த்து உடுத்தத் தெரியாது

காடாய் வளர்ந்து காட்டுமிராண்டி போலானாலும்

மழித்துக் கொள்ள வராது

வீட்டிலே இழவென்றால் ஒருமுழக்குழி வெட்டி புதைக்கவும் தெரியாது

நாய் கூட தன் உணவைத் தானே தேடித் தின்கையில்

உங்களுக்கு ஒவ்வொன்றையும் நானே ஊட்டித்தர வேண்டியுள்ளது

வாழத்தேவையான எதையும் கற்றிராத நீங்கள்

அறிவிலும் அந்தஸ்திலும் தகுதியிலும் திறமையிலும்

பிறப்பிலேயே என்னை விட ஒசத்தி எந்தவகையிலென்று

இப்போது நிரூபியுங்கள்

-அதுவரை

எனக்கு சமதையற்ற உங்களைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே

எந்த அரசியலும் இல்லை

தீண்டுவது வெறுமனே சரீரம் சம்பந்தப்பட்டதல்ல.

- ஆதவன் தீட்சண்யா(visaiaadhavan@yahoo.co.in)

இவரது முந்தைய படைப்பு:

1. கடவுளின் கண்கள்

2. வேறு மழை

3. அதிர வருவதோர் நோய்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X