• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லறைக் கதவுகள் திறக்கும் காணிக்கைத் திருநாள்- புதுவை ரத்தினத்துரை

By Staff
|

சாமம் பேயுலவும் சவக்காலை

என்ற பழிச்சொல்

போய் மறையலானது.

வீரர் துயிலுகின்ற இல்லம்

என்ற புனிதச் சொல்

வாய் நிறையலானது.

கார்த்திகை மாதத்திலேன் கனத்தமழை?

ஏனிந்தப் பச்சைவிரிப்பு?

நிலமேன் நெருக்குருகிக் கிடக்கின்றது?

காற்றேன் ஓவென்றிரைகிறது?

சூரியனேன் சுட்டெரிப்பதில்லை?

அயர்ந்துறங்கும் ஆலகண்டருக்கு

இயற்கையின் இந்தமாத அஞ்சலியிது.

ஓவென்றிரையும் ஊதற்காற்றே!

வேகம் குறைத்து வீசு.

தேவகுமாரர்கள் இங்கே தூங்குகின்றனர்.

துயில் கலைத்துத் தொலைக்காதே.

கல்லெறியும் பொல்லாக் கனத்தமழையே!

மெல்லப் பூவெறிதல் போலப் பொழிக.

இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்.

தொட்டெழுப்பித் தொலைக்காதே.

நிலமே! மழை நீரைக் குடிக்காதே

உள்ளே சில்லிட்டுப் போகும் அவர்தேகம்.

அதிர நடப்பவரே கவனம்

பிள்ளைகளின் அனந்தசயனம் கலையக்கூடும்.

பூக்களெனினும் மெதுவாகப் போடுங்கள்

தூக்கம் கலைந்து போகலாம்.

காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள்

கால் நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகின்றனர்.

வாழ்வின் வசந்தம் யாவையும்

தாயக வேள்வியில் தர்ப்பணம் செய்தவர்கள்

நீள்துயிலிற் கிடக்கின்றனர்

ஏன் எழுப்ப வேண்டும் அவர்களை?

கார்த்திகை இருபத்தேழு

எம் காவற்தெய்வங்களுக்கான காணிக்கைப் பெருநாள்.

துயிலுமில்லத்தின் தூமணிக் கபாடங்கள்

அன்று அகலத்திறந்திருக்கும்.

ஊர்கூடி விதைத்த வயல்தேடி வந்திருக்கும்

சிறகெடுத்த பறவைகளின் உறவங்கு திரண்டிருக்கும்.

தனித்த குரலில் ஒரு தாய்ப்பறவை கதறியழும்.

"மகனே!

பால்தந்த பாவி பூக்கொண்டு வந்துள்ளேன்

கால்கொண்டுதைத்து நிலம் கிழித்து

வாமகனே வெளியே.

என் கையணைப்பில் உன்னை நொடிப்பொழுதாயினும்

ஆரத்தழுவ அனுமதிப்பாய் என் மகனே"

உயிர் பிழிந்து கசியும் உதிரம்.

திக்குற்றுப் போகும் திரண்டிருக்கும் உறவுகள்

பக்கத்து குழியருகும் பாடும் துயர்ப்பாட்டொன்று

விக்கலுடன் எழும்.

அங்குமொரு தாய்ப்பறவை அழும்

"அம்மாவென அழைத்த அமுதவாய் திறந்தின்று

இன்னோர் முறையென்னை எழுந்தணக்க மாட்டாயோ?

கனவிற் தினம் வந்து கட்டியெனை அழைக்கின்ற

மகளே! ஒரு தடவை மார்பணைக்க வாராயோ?"

சொல்லியழும் குரலில் கல்லும் கசிந்துருகும்.

கேட்கும் செவியெல்லாம் கிறுகிறுத்துப் போகும்.

உள்ளே நரம்பெல்லாம் தீ மூண்டு நடுங்கும்.

ஆறாத துயர் வெள்ளம் அணையுடைத்துப்பாயும்.

அப்போதுதான் கல்லறையின் கதவுகள் திறப்பதாய்

ஒரு காட்சி விரியும்.

உள்ளே முகம் தெரியும்

விழிகள் திறந்து பேசத்துடிப்பதாய் வாயசையும்.

மெல்லச் சிரிப்பொலியும் கேட்கும்.

" அம்மா!

என்னை இழந்ததாய் ஏன் புலம்புகின்றாய்

எனக்கா சாவு வரும்?

உள்ளே உயிர்கொண்டே உறங்குகின்றேன்.

தமிழீழம் வரும் வரை எனக்குச் சாவில்லை.

அதன் பின்பும் எனக்கு அழிவில்லை

இது பீஷ்மரின் படுக்கை

காத்திருக்கும் கண்ணுறக்கம்.

என்றோர் அசரீரி எல்லாச் செவிகளிலும் கேட்கும்.

கோயில் மணிகள் அசையக் குழிவிழிகள் மூடிவிடும்

கல்லறைக் கதவுகளில் பூட்டு விழும்

காணிக்கைத் திருநாளுக்கான பூசைமணியசைய

சுற்றுப்பிரகாரம் சூடு பெறும்.

நெய்விளக்குகள் நிமிர்ந்து சுடர்பிடித்தெரியும்.

திருப்பலிப்பாடல் தொடங்கும்.

" மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை

முடிசூடும் தமிழ்மீது உறுதி

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதிலும் உறுதி."

பாடல் தொடங்கவே நெஞ்சு பாரம் சுமக்கும்.

விழிநீர் சொரியச் சொரியப் பாடும் போது

நெஞ்சுக்குள்ளே கிளரும் உணர்வில் நெருப்பு மூளும்

கல்லறையில் விழும் கண்ணீர்த்துளிகளால்

வெள்ளையடித்த சுண்ணாம்பு கரைந்தொழுகும்.

இது வீரவழிபாடு

பழைய மரபொன்றின் புதிய வடிவம்

வீரர்களைத் தெய்வங்களாக்கும் விதிமுறை

ஈமத்தாழி

நடுகல்

வெறியாட்டு

இதுவே முதுதமிழர் காலத்து வழித்தடம்

தீயிடும் ஆரிய மரபழித்து

மீண்டும் வேரிலிருந்து பூக்கிறது வீரப்பூ

மாவீரர் நாள்

செத்தபிணங்களுக்கு சாப்பிணங்கள் கதறுவதாய்

சித்தர்கள் பழித்துரைத்த திருநாளல்ல.

வல்லமையை எமக்கு வழங்குங்கள் என்று

கல்லறைக்கு முன்னே கைகூப்பும் நாளாகும்.

உங்கள் பணிமுடிக்க உள்ளோம் நாம்

எனச் சொல்லி

பொங்கும் மனத்திடத்தைப் பெறுகின்ற நாளாகும்

மாறாமனத்தை அருள்வீர்

நீர் பெற்ற

மானத்துக்கான மரணத்தை எமக்களிப்பீர்

என்றோர் வரம் கேட்க எழுகின்ற நாளாகும்.

இது அருச்சுனன் தபசு

காண்டகப நாதத்துக்கான கடும் தவம்

கார்த்திகை மாதம் கூத்திடும் காலம்

ஊழிக்கூத்துக்கான ஒத்திகை.

உமக்கருகில் எமக்குமொரு குழி என

போருக்குப் போகின்ற புனித நாள்

அடியே! கொற்றவைக் கிழவி!

ஆயிரம் யானைகளின் பலமளிப்பாய்.

எதிர் வரும் பகைரதங்கள் யாவும்

எம் மூச்சுப்பட்டழியும் வரமளிப்பாய்.

துயிலுமில்லக் கதவுகளே! திறந்தேயிருப்பீர்

வெற்றிபெற்றுவந்து கல்லறைக்கு மாலையிடுவோம்.

இல்லையேல்

வித்துடலாய் வந்து உனக்குள்ளே காலைவிடுவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X