For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''மனித வணக்கம்''

By Staff
Google Oneindia Tamil News

- கமல்ஹாசன்

சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக, கவிஞர் புவியரசுவுக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், கலைஞானி கமல்ஹாசன் எழுதி வாசித்த கவிதை ...

Kamal with Puviarasu and his wifeமனித வணக்கம்.

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம்தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சமங்கள் புரியும் வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறு பிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல ..
எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ துவைத்த துணிக் கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நான் உன் வரியில் நான் தெரிவேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X