• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1

By Staff
|

கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

இரு விளிம்புகள்

பாவண்ணன்

ஒரு ஞாயிறு மாலைநேரத்தில் நூலகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையைக் கடக்கமுடியாத அளவுக்கு ஏகப்பட்ட வாகனங்கள். நான்குசாலைகளுக்கு நடுவில் நின்றபடி போக்குவரத்துக் காவலர் அவற்றை ஒழுங்குபடுத்தி அனுப்புவதில் மும்முரமாக இருந்தார். எனினும், வாகனங்களைஅவரால் தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. அவர் ஒரு திசையில் ஒழுங்குசெய்தபடி இருக்கும்போது வேறொரு திசையில்நிற்கமறுக்கும் பொறுமையின்மையோடு தப்பிக்கும் அவசரத்தில் வாகனங்கள் வேகவேகமாகக் கிளம்பி ஓடின. அவருடைய கோபம் பெரிய அளவில்எழுச்சிகொள்வதைப் பார்க்கமுடிந்தது. மீறிச்செல்லும் அவ்வாகன ஓட்டிகளின் திசையைப் பார்த்து சத்தமுடன் வசைவார்த்தைகளை உதிர்த்தார் அவர்.உடுத்தியிருக்கும் சீருடைக்குச் சற்றும் பொருத்தமற்ற வசைகள். திரும்பத்திரும்ப வசைவார்த்தைகளை உதிர்த்துஉதிர்த்து, அப்பழக்கத்தின் காரணமாகசாதாரணமாக பேசத் தொடங்குகிற ஒரு வாக்கியத்தைக்கூட ஒரு வசைவார்த்தையின் முன்னொட்டோடுதான் பேசடியும் என்கிற அளவுக்கு அவர் மொழிபழகியிருந்ததைக் கேட்டோம்.

திடீரென பழைய சென்னைச் சாலையிலிருந்து சரக்குகளின் சுமையோடு நகருக்குள் ஏமாற்றி நுழையப் பார்க்கிற ஒரு லாரியைப் பார்த்ததும் வசைகளைக்கொட்டி முழக்கியபடி அவர் ஓடினார். ஒரேஒரு கணம் பிசகினாலும் எந்த வண்டியிலாவது அவர் மோதியிருக்கக்கூடும். "நாங்க என்ன இங்கஆடுமேய்க்கறதுக்கா நிக்கறம்? பெரிய புடுங்கிமாதிரி போய்ட்டே இருக்கற?" என்று இரைச்சலிட்டபடி லாரியை வெற்றிகரமாக நிறுத்திவிட்டார்.அதை ஓட்டிக்கொண்டுவந்தவன் உள்ளே இருந்தபடி எதையோ சொன்னான். அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையிலேயே இல்லை காவலர்."மொதல்ல ஓரங்கட்டி நிறுத்துடா நீ. மத்ததயெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்." காவலர் உறுமலுக்கு அவன் கட்டுப்பட்டான்."எங்களயெல்லாம் என்னன்னுடா நெனச்சிட்டே? மத்தவனுங்களுக்கெல்லாம் கொட்டிகொட்டி குடுப்பீங்க. நாங்கன்னு சொன்னா ரொம்ப இளக்காரமாபோயிடுச்சில்ல உங்களுக்கு? மவனே, இன்னிக்கு திருவிழாதான் ஒனக்கு" தொடர்ந்து வசைகளாகப் பொழிந்தார். சட்டென எட்டி ஸ்டார்ட்டர் சாவியைப்பிடுங்கிக்கொண்டு இறங்கி சந்திப்பு மையத்துக்கு நல்ல பிள்ளைபோல மீண்டும் வாகனங்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கிவிட்டார்.

என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று நாங்கள் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தோம். கிட்டத்தட்ட பத்து பதினைந்து நிமிடங்கள் அந்த லாரியின் டிரைவர்தப்புசெய்துவிட்ட ஒரு மாணவனைப்போல கைகளை குறுக்கில் கட்டிக்கொண்டு காவலர் அருகிலேயே நின்று கெஞ்சிக்கொண்டிருந்தான். எதுவுமே தன் காதில்விழவில்லை என்பதைப்போல காரியத்திலேயே மும்முரமாக இருந்தார். இறுதியில் அவன் மன்றாடுதல்களைக் கேட்டு இரக்கமுற்றவரைப்போலசட்டென திரும்பினார் காவலர். "ஒங்களுக்கெல்லாம் ரொம்ப துளுரு உட்டுப்போச்சிடா. யாருன்னு நெனச்சிட்ட என்ன? ஒட்ட வெட்டிட்டுவன். மனசுலவச்சிக்கோ." நட்புமுரண் கலந்ததாக அவர் குரல் மாறியிருந்தது அப்போது. அவன் கையில் வைத்திருந்த தாள்களையெல்லாம் வாங்கி ஒருகணம்மேலோட்டமாக பிரித்துப் பார்த்தபடி வாகனத்தின் அருகேயே அழைத்துச் சென்றார். எதிர்பாராத ஒரு கணத்தில் டிரைவர் கால்சட்டைப் பையிலிருந்துஇரண்டாக மடித்துவைக்கப்பட்டிருந்த ரூபாய்த்தாளை எடுத்து காவலரின் உள்ளங்கையில் அழுத்தினான். காவலரின் கடுகடுப்பு மெல்லமெல்ல கரைந்து மறையும்நிலைக்குப் போனது. ஒரு வெற்றியாளரின் மிடுக்கு அவர் முகத்தில் மின்னலிட்டது. லாரி கிளம்பி மீண்டும் சாலையில் இறங்கிச் செல்ல வழியைஉருவாக்கிக்கொடுத்துவிட்டு திரும்பினார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக இப்படி பணம் கைமாறிய நிகழ்ச்சியைப் பார்த்தபோது நம்பமுடியாமல் தெருவோரமாக சிலைபோலநின்றுவிட்டோம். "என்னங்க இப்படி, என்னங்க இப்படி" என்று அமுதா மனம்தாளாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். பிறகு, இப்படிப்பட்டகாட்சிகளைப் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது. சாலைச் சந்திப்புகளில் மட்டுமல்ல, இரவுநடை முடிந்து திரும்பும்போதுஎதிர்பாராத விதமாக தெருவிலிருந்த ஒவ்வொரு மதுக்கடைக்கும் சென்று பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவரும் காவலர்களையும் பலமுறை பார்க்கநேர்ந்திருக்கிறது. எத்தனையோ மாலைகளில் காய்கறிச்சந்தையில் ஒவ்வொரு தள்ளுவண்டிக்கும் நெருக்கமாகச் சென்று நொடிநேரத்தில் கைமாறும்பணத்தோடு நகரும் காவலர்களையும் பார்க்கமுடிந்திருக்கிறது. வயிற்றுப்பாட்டுக்காக கோயில் முனைகளிலும் மரத்தடிகளிலும் சாக்கு விரித்துபழங்களைக் கூறுகட்டி விற்கும் மூதாட்டிகளை அதட்டி, லத்தித்தடியாலேயே சாக்குவிளிம்பைப் புரட்டி சில்லறைகளை எடுத்துக்கொண்டு சென்றகாவலர்களைக் கண்டு திகைப்பில் மூழ்கியிருக்கிறோம்.

தொடக்கத்தில்தான் இக்காட்சிகள் எங்களுக்கு ஆச்சரியத்தையும் வேதனையையும் அளிப்பதாக இருந்தது. மனப்புழுக்கத்தோடு வெகுநேரம் அவர்களின்நடத்தையைக் கண்டித்துப் பேசுவோம். பழக்கத்தின் காரணமாக மெல்லமெல்ல அது ஒரு சர்க்கஸ் காட்சியைப்போல தென்படத் தொடங்கிவிட்டது. ஓரமாகஒதுங்கிநின்று ஒரு விளையாட்டைப் பார்ப்பதைப்போல ஓரக்கண்களால் கவனிக்கத் தொடங்கிவிட்டோம். அப்பயிற்சியின் விளைவாக, எப்படிப்பட்டவாடிக்கையாளரின் அருகே காவலர் எவ்வளவு நேரம் நிற்பார், எவ்வளவு நேரம் பேசுவார், எப்போது பணம் கைமாறும் என்ற கணக்கு எங்களுக்குஅத்துபடியாகிவிட்டது. இதோ வாங்கப்போகிறார் பார் என்று நாங்கள் சொல்வதற்கும் அங்கே பணம் வழங்கப்படுவதற்குமான நேரம் சரியாகஅமைந்துவிடும். ரூபாய்த்தாளின் நிறத்தைப் பார்த்துப்பார்த்தும் மடக்கப்படும் ஆட்களின் வாட்டசாட்டத்தைப் பார்த்தும் எவ்வளவு கைமாறும் என்றுகூடஎங்களால் சில சமயங்களில் மிகச்சரியாகக் கணித்துச் சொல்லிவிட முடிந்தது.

எல்லாத் தருணங்களிலும் கவனிக்கத்தக்க முக்கியமான அம்சம் அவர்களுடைய உடல்மொழி. எந்தக் கொம்பனாக இருந்தாலும் எடுத்தஎடுப்பிலேயே ஒருமையில் பேசி, எதிராளியை கையாலாகாதவனாக மாற்றும் அவர்களுடைய தந்திரத்துக்கு இணையான ஒன்று இந்த உலகத்திலேயேஇல்லை. "பாத்தா பெரிய மனுசங்க மாதிரி இருக்கறீங்க. இது ஒன்வேன்னு போர்டு போட்டிருக்குதே பாக்கமாட்டிங்களா? இவ்வளவு பெரிசா கண்ணாடியசும்மா அழகுக்கா போட்டிட்டிருக்கிங்க?" அக்கறையும் அதட்டலும் இணைந்த குரலில் வாகனம் நிறுத்தப்பட்டுவிடும். "அவசரப்பட்டா எப்படிங்கசார்? ஒன்னொன்னா பாத்து ஐயா அனுப்பிட்டுதானே இருக்காங்க. போங்க போங்க சார். அப்படி ஓரமா நில்லுங்க." ஒவ்வொரு அசைவிலும் உதாசீனம்வழிந்தபடி இருக்கும். கால்கடுக்க நிற்கவைத்தபிறகு தற்செயலாக திரும்புவதைப்போல திரும்பி "அப்பறம்?" என்று தோள்கள் குலுக்கப்படும்.திருப்தியான அளவில் பணம் கைமாறியதும் மிடுக்கான ஒரு தலையசைப்போடு உறுமீனுக்காக பார்வையை ஓட்டும் கொக்குபோல வாகனங்களிடையேகால்கள் மறுபடியும் நகர்ந்துவிடும். துல்லியமான ஒரு நாடகஅசைவுக்கு நிகரான பிசிறில்லாத அந்த இயக்கத்தை ஒரேஒரு முறை பார்த்தாலும்என்றென்றும் மறக்கமுடியாத சித்திரமாகப் பதிந்துவிடும். இது ஒரு உத்தேசமான காவலர் சித்திரம்தானே தவிர ஒருபோதும் எல்லாரையும் இப்படிபொதுமைப்படுத்திப் பார்க்கக்கூடாது என்கிற குரல் மனத்தில் எழும்பியபடியேதான் இருக்கும். என் வாழ்விலேயே உழைப்பையே உயிராகக் கருதும்காவலர்களைக் கண்டிருக்கிறேன். கடமைக்காக உயிரையே விட்ட சில காவலர்களையும் எனக்குத் தெரியும். அப்படி ஒரு விளிம்பு. இப்படி ஒரு விளிம்பு. ஒருகூட்டம் எல்லா இடங்களிலும் இரண்டு தரப்புகளாகப் பிரிந்து நிற்பது ஆச்சரியமில்லை.

ஒருநாள் தற்செயலாக வெளியூரிலிருந்து வந்த கல்லூரிப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே அலைந்து இங்கே அலைந்து, பேச்சுகாவல்துறையினரைப்பற்றிய அலசலாக வளர்ந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு வாரத்துக்குமு ன்னர்தான் ஆற்றிலிருந்து உரிய உரிமம் எதுவுமின்றிமணல்திருடிக் கடத்திக்கொண்டு ஓடிய லாரியை மடக்கிப்பிடிக்கும் முயற்சியில் உயிரையே துறந்திருந்தார் ஒரு காவலர். அப்படிப்பட்ட ஒரேஒரு தியாகச் செய்திஆயிரமாயிரம் காவலர்களின் கேவலமான நடவடிக்கைகளையெல்லாம் மறந்து மன்னிக்கவைத்து விடும் வலிமையுள்ளது. முகம் சுளிக்கவைக்கிறகாவலர்களைப்போன்ற புள்ளிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கக்கூடும். அவர்கள் ஒருபோதும் முக்கியமானவர்கள் அல்லர். இந்த மண்ணையும்மதிப்பீடுகளையும் தோளில் ஏற்றிச் சுமந்துசெல்வதைப்போல கடமையாற்றுபவர்களே முக்கியமானவர்கள்.

திடுமென நினைவு வந்ததைப்போல பேராசிரியர் சமீபத்தில் தனக்கு அறிமுகமாகி நல்ல நண்பராக மாறிய ஒரு காவலரைப்பற்றிய செய்தியைச் சொன்னார்.மிகவும் சிரமப்பட்டு கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வந்தவர் அவர். ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய அம்மா அப்பாஇருவருமே படிப்பை நிறுத்தி மாடுகளை மேய்க்கப் போகச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இவருக்கோ மாடுமேய்ப்பதைவிட கல்வியில்கட்டற்ற ஆர்வம். ஓட்டிச் சென்ற மாடுகளை அப்படியே தோப்பில் மேயவைத்துவிட்டு அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு வந்து உட்கார்ந்து பாடங்கள்கேட்பாராம். பச்சையின் ஈர்ப்பில் மாடுகள் திசைதிரும்பி பல சமயங்களில் அக்கம்பக்க நிலங்களில் இறங்கி கரும்பையும் நெல்லையும்நாசமாக்கிவிடுமாம். பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிடும் மாடுகளை மீட்டுக்கொண்டு வருவது அவ்வளவு எளிதான செயலல்ல. கால்களில் விழுந்துகெஞ்சாத குறையாகக் கெஞ்சித்தான் மீட்டுவரவேண்டும். நாசத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது பஞ்சாயத்து கூடுவதைத் தவிர்க்கவியலாது.மகனுக்காக பஞ்சாயத்துக் கட்டையில் அப்பாவும் அம்மாவும் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். தாய் தந்தையரின் சிரமங்களைப் பார்த்து மனம்மாறிகல்வியை மறந்து மாடுகளை மேய்க்கச் செல்வதில் எவ்விதமான மறுப்புமின்றி ஒத்துழைக்கும் அளவுக்குச் சூழல் மாறிவிடுகிறது.

தற்செயலாக ஒருநாள் தோப்புப்பக்கம் வந்த ஆசிரியர் பாடங்களை மிகவும் மனம் ஊன்றிப் படிக்கும் ஒரு மாணவன் மாடுமேய்ப்பதைப் பார்த்து வருத்தத்தில்உறைந்திருக்கிறார். சிறுவனோடு கலந்துபேசி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்கிறார். "உன்னால பள்ளிக்கூடம் வரமுடியாம போனாபரவாயில்ல. உனக்கு நான் இங்க வந்து பாடம் சொல்லித்தரேன்டா" என்று அமைதிப்படுத்தியிருக்கிறார். அதேபோல ஒவ்வொரு நாளும் மாலை நான்குமணிக்குமேல் அவன் மாடுமேய்க்கிற தோப்புக்கே அவர் வந்து பாடம் எடுக்கிறார். ஒருநாள் பாடங்களை ஒருமணிநேரத்துக்குள் நடத்திமுடிக்கிறார்.கிட்டத்தட்ட ஆறுமாத காலம் இப்படி படிப்பு தொடர்கிறது. வருகைப் பதிவுகளையெல்லாம் ஆசிரியரே எப்படியோ சமாளித்துக்கொள்கிறார். தேர்வுச்சமயத்தில் மட்டும் பள்ளிக்குச் சென்று எழுதிவிட்டுத் திரும்பவும் ஏற்பாடு செய்கிறார். நல்ல மதிப்பெண்களுடன் சிறுவன் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிஅடைகிறான்.

அதற்கப்புறம்தான் பிரச்சனை. ஆறாம் வகுப்புக்கு உரிய பள்ளிக்கூடம் அந்த ஊரில் இல்லை. பக்கத்தூருக்குப் போகவேண்டிய நிலைமை. ஆசிரியர் பையனுடையபெற்றோர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மகனுடைய கல்வி ஆர்வத்தைப் புரிந்துகொண்டதும் அவர்களும் அவன் முன்னேறி எங்காவதுபிழைத்திருந்தால் போதும், மாடு மேய்க்கிற பிழைப்பு தம் தலைமுறையோடு முடிந்துபோகட்டும் என்று சொல்லி சிறுவனைத் தொழிலிலிருந்துவிடுவித்துவிடுகின்றனர். ஆசிரியர் சிறுவனை அழைத்துச் சென்று அடுத்த ஊரில் ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டு அங்கேயே அரசு மாணவர் விடுதியிலும்இடம்பிடித்துக் கொடுத்தபிறகுதான் ஓய்ந்திருக்கிறார். கந்தலைக் கட்டிக்கொண்டு அரைப்பட்டினி, கால்பட்டினியோடு கிடந்தாலும் பையன் கல்வியில்கருத்தாக இருந்திருக்கிறான். இப்படியே பட்டப்படிப்பு முடித்து துணை ஆய்வாளருக்கான தேர்வை எழுதித் தேறி வெற்றிபெற்று புதுவாழ்க்கையைத்தொடங்கியிருக்கிறார். மாணவர்- ஆசிரியர் உறவு இன்றும் அப்படியே இருப்பதாகவும் திருமணச் சமயத்தில் அவரை அழைத்து மிக உயர்ந்த விதத்தில்கெளரவித்திருக்கிறார். அவருக்குப் பட்ட நன்றிக் கடன் எவ்விதத்திலும் தீர்க்கமுடியாத ஒன்று என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டாராம் அந்தக் காவலர்.காவலரின் வாழ்க்கையைக் கேட்ட நாங்களும் மனநெகிழ்ச்சிக்கு ஆளானோம்.

அடுத்ததாகச் சொன்ன சம்பவம் அக்காவலர்மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கும்வகையில் இருந்தது. காவல்துறையின் சார்பில் நடத்தப்பட்ட கல்லூரிமாணவமாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் பேராசிரியர்தான் நடுவராக இருந்தார். தொடக்கத்தில் பெயர் பதிந்த சிலர் போட்டியன்று வரவில்லை.வந்திருந்த பதினாறு மாணவர்களும் ஏழு மாணவிகளும் மட்டும் போட்டியில் கலந்துகொண்டார்கள். முடிவை அறிவிக்கும்பொருட்டு மதிப்பெண்களைக்கூட்டி எழுதும் பணி நடந்துகொண்டிருந்தது. எல்லாருடைய மதிப்பெண்களையும் வரிசைப்படுத்தி முதல் பரிசுக்குரிய பெயரை எழுதிக் கையெழுத்து போடும்நேரத்துக்குச் சரியாக ஒரு பெண் வேர்க்கவிறுவிறுக்க வேகவேகமாக கூடத்துக்குள் வந்தாள். போட்டிக்கு வந்ததாகவும் வழியில் வாகனநெரிசலால்உருவான நெருக்கடிகளால் உரிய நேரத்துக்கு வர இயலாததற்காக வருத்தத்தைத் தெரிவித்தபடி எல்லாருடைய மன்னிப்பையும் கோரினாள். போட்டிமுடிந்ததாக நடுவர்கள் சொன்னார்கள். அதைக்கேட்டு அப்பெண்ணின் முகம் வாடிவிட்டது. கண்கள் ஒரே கணத்தில் தளும்பிவிட்டன. எல்லாவற்றையும்மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் அப்பெண்ணைப் பேச அனுமதிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக்கொண்டார். அவளுக்காக போட்டிமீண்டும் நடந்தது. அவள் பேசினாள். மதிப்பெண்கள் மீண்டும் திருத்தப்பட்டன. அவளுக்குப் பரிசு இல்லை. ஆனாலும் அவள் முகத்தில் வெற்றிபெற்றபெண்ணைக் காட்டிலும் மகிழ்ச்சி படர்ந்திருந்தது.

விடைபெறும்போது ஆய்வாளர் பேராசிரியரிடம் தன்னுடைய கோரிக்கைக்கான காரணத்துக்கு விளக்கமாகச் சொன்னதை எங்களுக்கு அதே குரலில்சொல்லிக்காட்டினார் பேராசிரியர்.

"ஐயா, சின்ன வயசுல, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி எங்க பள்ளிக்கூடத்துல நடத்தனாங்க. நானும் கலந்துகிட்டேன். என் பேர திடீர்னு கூப்புட்டதும் எதுவும்புரியாத அவசரத்துல ஒரேஒரு நொடி தடுமாறிட்டேன் சார். எதுவும் சட்டுனு ஞாபகத்துக்கு வரல. எச்சில கூட்டி விழுங்கனன். பக்கத்துல பாத்துட்டே இருந்தவாத்தியாரு சரிசரி போதும், நீ ஒப்பிக்கற லட்சணம் தெரிஞ்சிபோச்சி, போய் அடுத்த வருஷம் வான்னு கீழ எறக்கி உட்டுட்டாரு. அன்னிக்கு மனசுலஉழுந்த காயத்த இன்னும்கூட என்னால ஆத்திக்க முடியலை தெரியுங்களா? சின்னக் கொழைந்தங்க மனசு பூமாதிரி சார். எதுக்காகவும்காயப்படுத்திடக்கூடாது. ஏதோ காரணத்தால போட்டிக்கு வந்த பொண்ணுக்கு லேட்டாயிடுச்சி. தப்புதான். சட்டதிட்டம்லாம் நம்ம சந்தோஷத்துக்குத்தானசார் போட்டிருக்கம். கொழைந்தங்களுக்கு பரிசு முக்கியமில்ல சார். தான் நின்னு பேசறத நாலு பேரு கேக்கறாங்களேன்னு ஒரு பெருமை மனசுக்குள்ளதோணும் சார். அதுதான் அவுங்களுக்கு முக்கியம். பத்து நிமிஷத்த கணக்கு பாத்துட்டு போம்மான்னு அனுப்பிச்சிருந்தா பாவம் பிஞ்சுமனசு எப்படிவாடியிருக்கும்னு நெனச்சிப் பாருங்க. சின்ன வயசுல காயப்படுத்தறவங்களும் வாத்தியாருதான். காயத்திலேருந்து காப்பாத்தறவங்களும் வாத்தியாருதான் சார்.என் அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ நான் ரெண்டு விதமானவங்களயும் பாத்திருக்கேன். எனக்கு ஏற்பட்டது இன்னொருத்தவங்களுக்கும்ஏற்பட்டுவிடக்கூடாதுங்கறதுக்குத்தான் அப்படி சொன்னேன்."

அதைக் கேட்டதும் அந்தக் காவல் துணை ஆய்வாளர்மீது மிகஉயர்ந்த மதிப்பு ஏற்பட்டது. கண்ணால் நேருக்குநேர் பார்த்ததில்லை என்றாலும்முக்கியமான ஒருவரைப் பார்த்த நிறைவில் மனம் திளைத்தது. கண்டதற்கெல்லாம் கண்டவர்களிடமெல்லாம் கூச்சமேயின்றி கைநீட்டிப் பணம்பறிக்கும்கூட்டத்தைப் பார்த்துப்பார்த்துச் சலித்திருந்த கட்டத்தில் அந்தத் திளைப்பு முக்கியமானதாக இருந்தது.

paavannan@hotmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more