For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதி மூலமும் நதிகளும்

By Staff
Google Oneindia Tamil News

கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005

- க.சீ. சிவகுமார்

அகர முதல எழுத்தெல்லாம் கூடி முயங்கப் பெறின் கிடைக்கக் கூடிய கோடானு கோடி சாத்தியங்களில் ஒன்றாக ஆதிமங்கலத்து விசேஷங்கள் நேர்ந்தது.

இத் தொடர் ஆதிமங்கலத்து விசேஷங்கள் என்ற ஒன்றைப் பற்றிக் கொண்டு எழுதப்படுவதாதலின் இந்த ஆதிமங்கலத்து விசேஷகளைப் பற்றி சிறு குறிப்பைத்தருகிறேன்.

ஜூனியர் விகடனில் 19 இதழ்கள் வெளிவந்த தொடர் அது. ஆதிமங்கலம் என்ற ஊருக்கு பஸ் முதல் கரண்ட், கள்ளுக்கடை, காமிரா ஊடாக செல்போன்வரை வருவதையும் அப்படி வரும்போது என்னென்ன நடந்தன என்பதையும் அது விவரிக்கிறது.

சுவாரசியமாக விவரிக்கிறது என்று எழுதவே ஆசைப்படுகிறேன். ஆனால் கதிகள் அந்நிலையில் இருப்பதில்லை.

அது முழுக்க முழுக்க நகைச்சுவைத் தொடரா? அல்லது அறிவியல் தொடரா? அல்லது சமூகப் படப்பிடிப்பா? அன்றி பூரணக் கற்பனையா? என்றுகேட்டால் எந்தக் கேள்விக்கும் ஆம் என்று அறுதியிட முடியாது. எல்லோரும் மார் தட்டுவது போல பேனாவை மேஜையில் தட்டி முழங்கவேண்டியதுதான்.

அது ஒரு வித்தியாசமான தொடர். தமிழில் முன்னும் பின்னும் அப்படி ஒரு தொடர் வந்ததில்லை.

தொடர் எழுதுகிறவர்களில் பெரும்பான்மைப் பேருக்கு வாய்க்காத ஒரு சிறு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதாவது அச்சாக்க நிலைக்கு முன்னதாகஆசிரியக் கைகள் எழுத்தில் மேற்கொள்கிற வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் கலைகளைக் கண்ணால் காணும் பேறு. அதிநிச்சயமாகவும் ஒருநற்பேறுதான்.

அதிலும் எங்கள் எம்.டி. எஸ். பாலசுப்ரமணியன், ஓரிரு ஆண்டுகள் நூற்பழக்கம் உள்ளவருக்கும் புரியும் விதமாக எழுத வேண்டும் என்ற கொள்கைஉடையவர். நான் இத்தொடரை எழுதுவதோ ஆனந்த விகடனில் கூட அல்ல, ஜூனியர் விகடனில்.

இந்த நிமிடத்தைய என் வயதை இரண்டாகப் பெருக்கிய வயதையும் அதை விடவும் தமிழின் மிகப் பாரம்பரியமான ஒரு பத்திரிக்கையதிபர்- ஆசிரியர் என்கிறவகையில் செழுமையான அறிவும் நுட்பமும் கொண்டு விளங்குகிறவர். அதற்கான எடுத்துக்காட்டுகளை பின் தொடரும் விவரிப்புகளில் நீங்கள் காண்பீர்கள்.ஆனால் சங்கதி அதுமட்டுமல்ல, நமக்கு உள்ளே கிடக்கிற செய்திகளும் வாழ்வுகளும் எந்தப் புள்ளியில் கலையாக மாறக்கூடும் என்ற மனவியல்சாத்தியத்தை இதில் முயற்சிக்க முயற்சிக்கிறேன்.

உள்முகப் படிப்பிலும் எட்டாததே கலையின் சூட்சுமம் என்பது வெள்ளிடை மலை. ஆனால், இப்படி இருந்த ஒண்ணுதான், பின்னாடி இப்படி வந்திருச்சு.. ஆமா...அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்று முனகலாம் இல்லையா. அந்தக் கண்டுபிடிப்பின் பூரிப்பை எழுத எத்தனிக்கிறேன்.

தொடரின் பல பகுதிகளை, புத்தகத்துக்கு முந்தைய ஃபார்ம் வடிவில் சேகரித்து வைத்திருக்கிறேன். ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்வதில் இப்படிஎவ்வளவோ செளகரியங்கள் இருக்கவே செய்கின்றன. நான் அனேகமாகச் சுமந்து திரியும் கறுப்புப் பையில் - நிகழ்காலத்தில்- எப்பவும் கூடவேஇருக்கிறது.

நான் எழுதுகிற கதைகளைச் சேர்த்துவைக்கும் இயல்பினன் அல்ல. ஆனால் சமீபத்தில் இப்படி சேர்த்து வைக்கும் திட்டமும் எண்ணமும் தோன்றியிருக்கிறது.இந்த சேர்த்து வைக்கும் திட்டம் என்பது கதைகளைச் சேர்த்து வைப்பது... புத்தகம் போடுவது என்பதோடு நின்றுவிடாது என்பதை நாம் அறிவோம்.ஏனெனில் அதன் பெயரின் வசீகரமும் நிர்ப்பந்தமும் அத்தகையது.

சேர்த்து வைக்கும் திட்டம்.

இந்தப் பத்தொன்பதில் ஊருக்குப் போய் வருதல் மற்றும் பணியிட அசட்டை காரணமாக ஓரிரண்டு தப்பிவிட்டன. ஒரு காரியத்தை முழுசாச் செய்ய மாட்டியேஎன்று மூளையின் இடப்பகுதி சொல்ல மூளையின் வலப்பகுதி, நீ இன்னம் கலைஞன் தாண்டா என்கிறது. இரட்டை மூளை மற்றும் இரட்டை நிலைக்குஇடையில்தான் வாழ வேண்டியிருக்கிறது, தவளை மாதிரி.

ஆனால் அது பரவாயில்லை. நேற்று ரமேஷ் வைத்யா சொன்னான், தண்ணீரில் மட்டுமே வசிக்கும் மீன்கள் பற்றி, எங்கே மீன் மாதிரி சத்தங்குடு...முடியாதுல்ல... மீன்கள் தங்கள் சத்தமில்லாத வாயசைப்பால் உலகத்துக்கு மெளுத்தைப் போதிக்கின்றன.

படித்துப் பார்த்தீர்களா ? எடிட்டிங்கின் ஒழுங்கு குலைகிற இடமும் போக்கும் இப்படித்தான். பேச வந்த ஆதிமங்கலம் எங்கே போச்சு? ஏன் அண்டமாநதியின்மீன்பற்றிப் பேச்சு வந்தது.

ஆகவே.. ஆதி மங்கலத்துக்குள் வாசகனைக் கட்டிப் போட வேண்டும். இதற்கான அதிகபட்ச பிரயத்தனத்தை தேர்ந்த எழுத்தாளர்கள் சுயமாகசாதிப்பார்கள். அவர்களுக்கு முழு உரிமை தர வெகுஜனப் பத்திரிக்கைகளில் இடமில்லை.

நாளொன்றுக்கு ஏழு தேர் செய்யும் தச்சனன் ஏழுநாள் கூடி ஒரு சக்கரம் செய்தாற்போல இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட எழுத்து அரைப்பக்கவிளம்பரம் வந்தால், தொபுக்கடீர் என குறைந்து விடும். அரைப்பக்கம் பெருசா? அம்பதாயிரம் பெருசா? எழுத்து என்பது என்ன... நெனப்பு தான சாமி.இன்னிக்கில்லாட்டி நாளைக்கு வந்திட்டுப் போகுது.

விசேஷ அனுபவத்தை ஒரு செளகரியத்துக்காக க்,ங், ச், ஞ் என்ற தலைப்புகளாகப் பிரித்துக் கொள்ளாம் என எண்ணுகிறேன். செளகரியம் எனக்கு குறிப்பிடுவதுஏனென்றால் செளகரியங்கள் என்பது கட்டற்ற சுதந்திரத்தையும் தரக் கூடியது. மந்த புத்தியையயும் தரக் கூடியது. கட்டற்ற சுதந்திரத்தில் திளைத்துநட்டாற்றில் தவிக்க வேண்டாம் என்றுதான் இந்த க், ங், ஏற்பாடு. இரண்டு காரணங்களுக்காக. என்ன இருந்தாலும் மெய்யெழுத்துகள் இல்லையா?

ஜூ.வியில் எழுதியது 19 அத்தியாயம் மெய்யெழுத்துகள். சபரிப்படி மாதிரி 18 என்றதும் ஆபத்பாந்தவன் போல வந்து நிற்கிறது ஆய்த எழுத்து. ஃ அப்படிப்போடு அருவாளை. ஆனால் ரகசியக் காரணத்தை உங்கள் கண்ணோடு சொல்லுகிறேன். இதை எழுதுகிற விநாடி க், ங், ச். ஞ்- ஞை வரிசையாக எழுதச்சொன்னால் எனக்கு எழுதத் தெரியாது. நாளைக்கு நான் எங்கேயாவது ஒண்ணாம்ப்பு வாய்ப்பாடு தேடிப் பிடிக்க வேண்டும். அதுவும் தமிழ்ப் பிள்ளைகளின்வாய்ப்பாடு வாங்கியாக வேண்டும். (இதை எழுதுகிறபோது புத்த புராணத்தில் வருகிற நாவிய கடுகு வேண்டும் ஒரு நாவுரி தானும் வேண்டும் இதை நீசாவறியா வீட்டில் சென்று வாங்கி வர வேண்டும்- என்ற பாடல் இசையாயத் தட்டுகிறது. )

அப்புறமும் மெய் சார்ந்த பிறிதொரு ரகசியம் இருந்தே இருக்கிறது. பேருந்து, டெலிபோன், தந்தி என்று பலவித உபகரணங்களும் வருகிற இத் தொடரில்அந்தந்தத் தலைப்பின் கீழ் அவையவை மட்டுமே வரும் என்று நீங்களும் எதிர்பார்ப்பீர்கள். நானும் மன்னிக்கவும் எனக்கும்.. என்ன சொல்வதுநதிப்போக்கில் போகட்டும் இந்த நாணலின் சிறு தோகை.

எல்லாவற்றையும் பேசி விட முடிவதில்லை. எல்லாரும் எல்லாமும் பேசினால் வாழ்நாளும் தாங்காது. நாமென்ன சாமான்யர்களா? பேச்சுகளுக்குஇடையேயுள்ள உட்கிடக்கைகள் அபாரமானவை. ஆகவே... நமது சொல்லாடலின் எளிய ஆன்மாவின் தந்திரப்படி க் வைத்து ஆரம்பிப்போம். மீதிகளைஅடுத்தடுத்து கம்ப்யூட்டர் திரையில் காண்க...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X