2025 தை மாத ராசி பலன்: வீடு, மனை வாங்கப்போகும் மகர ராசி.. ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்
தை மாத ராசி பலன்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதத்தில் ராஜயோகம் உருவாகவுள்ளது. அந்த வகையில், மகர ராசிக்காரர்கள் தை மாதத்தில் பெறப் போகும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan)
மகர ராசிக்காரர்களுக்கு எட்டாம் பாவ அதிபதி அஷ்டாமதிபதியாக இருக்கக்கூடிய, காலபூஷனுக்கு ஐந்தாம் பாவ அதிபதியாக இருக்கக்கூடிய சூரிய பகவான் உங்கள் ராசியில் வந்து அமருகிறார். எப்போதுமே சூரியன் பக்கத்தில் வருகிறபோது கண்டிப்பாக உங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆத்ம விருத்தி, ஆன்ம விருத்தி உங்களுக்கு கிடைக்கும். (Thai month rasi palan for Capricorn)

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் உங்களுடைய ராசியில் வந்து சூரியன் அமருவதால், நிச்சயமாக உங்களுடைய உத்வேகம், தைரியம், வீரியம், போராடி வெற்றி பெறக்கூடிய தன்மை ஆகியவை மேம்படும். கடின உழைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய உழைப்புக்கான விருது, பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
நீங்கள் எடுத்துக் கொண்ட காரியங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தர்க்க வாதங்கள், தடைகள் எதுவும் இல்லாமல், எதிரிகள் இல்லாமல், சட்ட வழக்குகள் இல்லாமல் வாழ்வதற்கான வாய்ப்பு உண்டாகும். மகரத்தை குரு பார்ப்பதால் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீரும். மனம் தெளிவடையும். படிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி செல்வோருக்கு, வெளிநாடுகளில் படிப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும், நல்ல முன்னேற்றத்தை தரும்.
தடைகளில் இருந்து விடுபடக் கூடிய வாய்ப்பை பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்வோர் வேலை போய்விடுமோ என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு தை மாதத்தில் நல்ல விடை கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9 ஆம் பாவ அதிபதியும் ராசிக்குள் இருப்பதாலும், பத்துக்குரியவர் உச்சம் பெற்றிருக்கிறார். தர்ம, கர்ம ராஜயோகம் ஏற்படும்.
வருமானத்தில் அதிக பெருக்கம் ஏற்படும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். டெக்ஸ்டைல், தங்க வியாபாரம், நகை தொழில், அலங்காரத் துறையில் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானமும், நல்ல முன்னேற்றமும் உண்டாகும். புதிய கிளைகளைத் தொடங்கும் அளவிற்கு வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும்.
9 இல் கேது வீற்றிருக்கிறார். கேதுவை குரு பார்த்துக் கொண்டிருப்பதால் சரியாக சென்று கொண்டிருக்கிறோமோ என்று பார்க்க உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் யாரென்று தெரியாதவர்கள், மாற்று மக்கள் உங்களைத் தேடி வந்து உதவுவார்கள். தேவைப்படும் உதவிகள் உங்களுக்கு வந்து சேரும்.
ஒரு பக்கம் ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும், ராசி நாதன் இரண்டாம் வீட்டில் வீற்றிருப்பதால் உங்களுக்கு பெரிய துன்பத்தை கொடுக்காது. குழந்தைகளுக்கு ஜீரண கோளாறு, வயிற்றுக் கோளாறு, சளித் தொல்லைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 5 ஆம் பாவ அதிபதி உச்சம் பெற்று ராகுவோடு சம்பந்தம் பெற்றுள்ளதால் வீட்டில் திருமண வாய்ப்புகள் உருவாகும்.
சில பேருக்கு பயணங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். சினிமா துறை, அரசுத் துறை, சுயதொழில் செய்வோருக்கு இந்த காலகட்டத்தில் ஒருபடி முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நடக்கும். ராசிக்கு 6ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். புதிய வேலைவாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பண உயர்வு, சம்பள உயர்வு, பூமி லாபம் ஆகியவை கிடைக்கும். ரியல் எஸ்டேட், கன்ஸ்டிரக்சன், ஏஜென்சி, புரோக்கரேஜ் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.
ஏற்கனவே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். புதிய முன்னேற்றம், புதிய லாபம், வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. குரு பகவான் ராசியைப் பார்ப்பதால் கேட்டது கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். லாப நோக்கத்தோடு செய்யும் காரியங்கள் விருத்தியைக் கொடுக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள், தர்க்க வாதங்கள் உங்களை விட்டு விலகும்.
அம்மன் ஆலயங்களுக்கு சென்று வருவது நல்லது. இயற்கையை வழிபடுவது போல சுற்றுலா சென்று வருவது மன அமைதியைத் தரும். இந்த மன அமைதியே உங்களுக்கு வெற்றி வாய்ப்பை உண்டாக்கி தரும்.












Click it and Unblock the Notifications