80 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ஸ்கை டைனிங்.. அலறிய மக்கள்.. கோவையில் நள்ளிரவு திக் திக் போராட்டம்
கோவை: விளையாட்டு விபரீதமாவது என்ற பழமொழியை அதிகம் கேட்டிருப்போம். கோவையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ஸ்கை டைனிங் ஒன்று 80 அடி உயரத்தில் பழுதாகியுள்ளது. இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைகள், பெண்கள் என அதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிடுவதற்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகிறார்கள். நேற்று மாலை முதல் அங்கு ஏராளமான மக்கள் சென்றுள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் ஸ்கை டைனிங்-ல் 20 பேர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பழுதான ஸ்கை டைனிங்
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. சுமார் 80 அடி உயரத்தில் ஸ்கை டைனிங் அப்படியே பழுதாகி நின்றது. அதில் 3 குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 20 பேர் இருந்தனர். ஸ்கை டைனிங் ஸ்டக் ஆகி நின்றதால் அதில் இருந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். பயத்தில் அவர்கள் கதறியுள்ளனர்.
பழுது சரியாகாத காரணத்தால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஸ்கை டைனிங்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள். முதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டு பிறகு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடித்தான் மீட்டனர்.
திக் திக் மீட்பு பணி
சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தான் மக்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே அந்த பொருட்காட்சியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற புகார் உள்ளது. இந்த சம்பவத்தால் பொது மக்கள் பொருட்காட்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்களை மீட்ட தீயணைப்புத்துறையினர் கூறுகையில், "முதலில் ஸ்கை டைனிங் அருகே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினோம். அங்கு அதிநவீன லிப்ட் இயந்திரம் கொண்டு சென்றோம். காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. மக்கள் ஸ்கை டைனிங்கில் தொங்கியபடி அச்சத்தில் இருந்தார்கள். அவர்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று தைரியப்படுத்தினோம்.
பிறகு ஸ்கை டைனிங்குக்கு லிப்ட்டில் இருந்து சென்று, 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்களை மீட்டு பத்திரமாக கீழே கொண்டு வந்தோம். லிப்ட் 400 கிலோ எடை வரை தான் தாங்கும். அதனால் 5.. 5 பேராக அழைத்து அனைவரையும் மீட்டோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications