பிப்ரவரி மாத பலன்: வேலையில் அதிர்ஷ்டம்.. வார்த்தையில் கண்டம்.. மேஷம் ராசியினரே உஷார்
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியின் இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சிகளும் உள்ளன. எனவே இந்த மாதத்தில் மேஷ ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவர் 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார். குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீன ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளனர். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.

மேஷ ராசிக்கு பிப்ரவரி மாதம் வளமானதாக இருக்கும். தன ஸ்தானம் நன்றாக இருந்தால் பண வரவு நன்றாக இருக்கும். உங்களின் தன ஸ்தானத்தில் தனத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய குரு பகவான் இருக்கிறார். இது திருப்தியான பண வரவை கொடுக்கும். உங்களின் ராசிக்கு 12வது இடத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். அவர் பண வரவுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்துவார்.
பழைய சொத்துகளை எதிர்பார்த்தபடி நல்ல விலைக்கு விற்பனை செய்வீர்கள். புதன் உங்களின் பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். அதனால் புதிதாக வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பளம் உயர்வு சிறப்பாக இருக்கும். அரசுத்தறைகளில் புதிய வேலை வாய்ப்பும், ஏற்கனவே அரசுப்பணிகளில் உள்ள மேஷ ராசி நண்பர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.
எந்த காரியத்திலும் தைரியத்துடன் இறங்கி வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் நிர்வாக திறமைக்கு பாராட்டு குவியும். உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு வெளி மாநிலம், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். உங்களின் சேமிப்பு உயரும். திருமணம் முயற்சிகள் கூடி வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இந்த மாதம் உங்கள் ராசிக்கு பல வகைகளிலும் அதிர்ஷ்டங்கள் கொட்டும். உத்யோகம் மற்றும் தொழிலில் நிச்சயமாக முன்னேற்றம் உண்டு. உத்யோகம் மற்றும் தொழிலில் சக ஊழியர்கள் சார்ந்த விஷயத்தில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். தொழிலில் சிலருக்கு தங்களிடம் பணியாற்றுபவர்களில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
உங்களின் ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். செவ்வாய் மிதுனத்தில் அமர்ந்திருப்பதால் உங்களிடம் இருந்து கடினமான வார்த்தைகள் வெளிப்படும். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனத்தில் பயணிக்கும்போது கவனம் தேவை.
தந்தை - மகன் மற்றும் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். குடும்ப சமாச்சாரங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இந்த மாதத்தில் பயணங்கள் அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. வயிறு, சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கவனமாக இருக்க வேண்டும். உணவு பழக்கவழக்கத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications