விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி - தங்க கவசத்தில் ஜொலித்த கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டியில் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று உற்சவருக்கு விசேஷ பூஜைகளும் தீர்த்தவாரியும் நடைபெற்றன. பிரம்மாண்ட கொலுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் தினசரியும் உற்சவர் அலங்கார வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் விதிமுறைகளுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
10ஆம் திருநாளான நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருகில் சண்டிகேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, காலை 9.20 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கோவிலில் மதியம் மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் வழிபாடு நடைபெற்றது.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதால், நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கோயிலின் வெளியில் நின்று தீர்த்தவாரி நிகழ்ச்சியை கண்டு தரிசனம் செய்தனர். சுற்றுப்புற கிராம மக்கள் சுமார் 1000 ற்கும் மேற்பட்டோர் நேரடி தரிசனத்திற்காக வந்திருந்தனர். பக்தர்கள் பலரும் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்தனர். ஆலய நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தவிர வெளி நபர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. வெளியூரில் இருந்து வந்தவர்கள் கோவில் வாசல் முன்பு நின்று மூலவரை வணங்கி விட்டு சென்றனர். இரவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது.

முக்குறுணி விநாயகருக்கு படையல்
இதே போல உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு முக்குறுணி விநாயகர் சன்னதியில் கொழுக்கட்டை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நெய் வேத்தியம் நடைபெற்றது.
திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் அவரது அரண்மனையை கட்டுவதற்காக மண் எடுக்க தெப்பக்குளம் பகுதியில் தோண்டியபோது, பூமியன் அடியில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். விநாயகர் சதுர்த்தி அன்று, இந்த முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், மெகா கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் 18 படி பச்சரிசி, வெல்லம், தேங்காய், கடலை, எள், நெய் ஆகியவை கலந்து பெரிய கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த மெகா கொழுக்கட்டையை இருவர் சுமந்து வந்து விநாயகருக்கு படையல் செய்து வழிபட்டனர்.


Click it and Unblock the Notifications
