2020 புத்தாண்டில் நவகிரகங்களும் இடப்பெயர்ச்சி - 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டில் ஆண்டுக்கோள்களான சனி, குரு, ராகு- கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. சூரியன் மாதம் ஒருமுறையும் கூடவே சுக்கிரன், புதனும் நகர்கின்றன, செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்கிறது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது வழக்கம். 2017ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 2020 ஆம் ஆண்டில் ஒன்பது கிரகங்களின் பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன முக்கியமாக சனி, ராகு கேது, குரு ஆகிய கிரகங்களின் நகர்வை வைத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன. இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் தசாபுத்தியின்படி நன்மை தீமைகள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி பலன்களை படித்து விட்டு நமக்கு நல்லது நடக்காமல் தீமையாக நடக்கிறதே என்று சிலர் சொல்வார்கள். ஜோதிடமே பொய் என்று கூட பேசுவார்கள். ஆனால் அவரவர் கர்ம வினை, முன்ஜென்ம பயன், தசாபுத்தியின் படியும் நன்மை தீமைகள் நடைபெறும். கோச்சார பலன்கள் ஐம்பது சதவிகிதம் நடைபெறும் என்பதை உணரவேண்டும்.

இதுநாள்வரை சனியால் சங்கடப்பட்டவர்கள், குருவால் குதூகலம் அடைந்தவர்கள், ராகு கேதுவினால் ரணப்பட்டவர்கள் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை அடையலாம் என்று படித்து பாதகம் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

கிரகங்கள் இடப்பெயர்ச்சி

கிரகங்கள் இடப்பெயர்ச்சி

2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார். நவம்பர் 20ஆம் தேதியன்று நேர்கதியில் மகரம் ராசிக்கு செல்கிறார்.

மேஷம்

மேஷம்

செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் 2020ஆம் புத்தாண்டு பாக்யங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் குரு கேது சனி சஞ்சரிக்கின்றனர். ஆண்டு தொடக்கத்தில் சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். பத்தாம் அதிபதி பத்தில் அமரப்போகிறார். இதனால் தொழில் வேலை வாய்ப்பு லாபகரமாக அமையும். நீங்க நினைத்தது எல்லாம் நிறைவேறக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. குருபகவான் சஞ்சாரம் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிலும் பத்தாம் வீட்டிலும் அமைந்துள்ளது. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களின் தன்னம்பிக்கை கூடும். நீங்கள் பட்ட கடன்கள் அடைபடும். திருமணம் கைகூடி வரும் அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். முதல் ஒன்பது மாதங்கள் மூன்றாம் வீட்டில் உள்ள ராகு செப்டம்பர் 2020 முதல் இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். அதே போல ஒன்பதாம் வீட்டில் குரு உடன் இணைந்துள்ள கேது செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அஷ்டம ஸ்தானத்திற்கு நகர்கிறார். உங்களுக்கு ஏற்பட்டிருந்த சங்கடங்கள் எல்லாம் தீரும். திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழனி மலைமேல் இருக்கும் முருகனை தரிசனம் செய்யுங்கள். பாக்கியங்கள் தேடி வரும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்க பட்ட பாடுகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள். காரணம் கிரகங்களின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது. அஷ்டம சனி இடப்பெயர்ச்சியாகி பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார். அதிர்ஷ்டம் கைகூடி வரப்போகிறது. தடைபட்டு வந்த காரியங்கள் தடங்கள் இன்றி நிறைவேறும். குருபகவான் 8 ல் அமர்வதால் கவலை வேண்டாம் அவரும் அதிசாரமாகவும் வருட இறுதியிலும் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் பொருளாதார வளர்ச்சி அதி அற்புதமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த நெருக்கடிகள் விலகும். கடன்கள் குறையும். சினிமா ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையும். காரணம் 2ஆம் வீட்டில் உள்ள ராகு மீது குருவின் பார்வை விழுவதால் வெற்றிகள் தேடி வரும். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ராகு இடப்பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு வருகிறார். ஏழாம் வீட்டிற்கு கேது நகர்கிறார். நன்மைகள் அதிகம் நடைபெறும் ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது. முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் சென்று செந்தூர் முருகனை தரிசனம் செய்து வாருங்கள் அற்புதங்கள் நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

எட்டில் சனி எட்டுக்கு அதிபனாக அமர்கிறார். சனி நல்லதே செய்வார். எதையும் தடைகள் செய்தாலும் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் தடைகள் நீங்கும். இந்த ஆண்டில் பிற்பகுதியில் குருவின் சஞ்சாரமும் எட்டாம் வீட்டிற்கு நகர்ந்து சனியோடு இணைகிறார். வேலை அற்புதமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும். வேலைக்காக வெளியூர் பயணம் ஏற்படும். குடும்பத்தை விட்டு சின்ன பிரிவு ஏற்படும். திருமணம் கை கூடி வரும் நல்ல துணையிடம் கொண்டு போய் சேர்க்கும். குழந்தை பாக்கியம் வரும். பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் குரு பார்வை. அதே நேரம் பணத்தை சேமிக்க முடியாது. ஒன்பது மாதத்தில் ராகு கேது பெயர்ச்சியும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ராகு விரைய ஸ்தானத்தில் நகர்கிறார். கேது ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். சுப விரைய செலவுகள் அதிகம் நடக்கும். சொத்து நகைகள் வாங்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக எதையும் யோசித்து பொறுமையாக நிதானமாக முடிவெடுக்கவும். எட்டில் சனி இருக்கும் போது பயணத்தில் கவனம், சொந்த காரங்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் திரும்ப வரவே வராது. மறந்து விட வேண்டியதுதான். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகம் வரும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்கவும். கிரகங்களினால் ஏற்படும் சங்கடங்கள் தீர மாதந்தோறும் சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்குங்கள் நல்லது நடக்கும்.

கடகம்

கடகம்

கடகம் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். வேலையில் கடின உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல நேரம்தான் தொழிலில் நல்லது நடக்கும். ஏழுக்கு அதிபன் சனி ஏழாம் வீட்டில் நிற்பதால் திருமணத்திற்கு உங்களுக்கு வரன் தேடி வரலாம். அதே நேரம் சில தடைகள் ஏற்படும். தடைகளை தாண்டி நினைத்தது நிறைவேறும். குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு போட்டிகளில் வெல்ல ஆர்வம் பிறக்கும். உடல் நலத்தில கவனமாக இருங்க. மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகமாக இருப்பீர்கள். உடம்பும், மனதும் ஆரோக்கியமாக இருங்க. மருத்துவ செலவுகள் வரும். வயிறு பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. சனி பார்வையும் உங்க உடல் நிலையை பாதிக்கும். கடன் பிரச்சினை வரலாம் காரணம் ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் நிறைய கடன் வாங்காதீங்க. அப்புறம் அடைக்கவே முடியாது. 2020ஆம் ஆண்டு கடகம் ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் எனவே சவாலை சமாளிக்க திருச்செந்தூரின் கடலோரத்தில் எழுந்தருளும் சுப்ரமணியரை வணங்குங்கள் தடைகளைத் தாண்டி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு சனி அமர்கிறார். அது பெரிய வளர்ச்சியையோ ஆதாயத்தையோ கொடுக்க மாட்டார். அதே நேரத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் நன்மையில் முடியும். 2020ஆம் ஆண்டு விபரீத ராஜயோகம்தான். வெற்றிகள் தேடி வரும். ஐந்தாம் வீட்டில் குரு அற்புதமாக அமர்க்கிறார். மனதையும் உடம்பையும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். பிரச்சினைகளை எளிதாக தீர்ப்பீர்கள். குரு அதிசாரமாக ஆறாம் வீட்டிற்கு போகும் மூன்று மாதம் கவனம் தேவை. வேலையில் எதிர்ப்புகளும் சவால்களும் இருந்தாலும் சமாளிப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடங்க முயற்சி செய்வீர்கள். கடன்கள் தீரும். வருடம் முழுக்க கோள்களின் சஞ்சாரத்தினால் வெற்றிகள் கைகூடி வரும். வேலையிலோ, இடத்திலோ விரும்பியபடி நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் கைகூடி வரும். மாணவர்களின் கல்வி அற்புதமாக அமையும். உயர்கல்வி யோகம் தேடி வரும். வெளிநாடு யோகம் வரும். 11ஆம் இடத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதும் கூடுதல் நன்மை. ராகு கேதுவின் பெயர்ச்சியும் உங்களின் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் உள்ளது. பூர்வ ஜென்ம புண்ணிய பலனால் 2020ஆம் ஆண்டு சுபமான ஆண்டாக அமையும்.

கன்னி

கன்னி

2020ஆம் ஆண்டில் சனி ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காரணம் உங்க பத்தாம் வீட்டிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. வருமானம் அதிகரிக்கும். நாலில் குரு கேது ஐந்தில் சனி, பத்தில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. இடமாற்றம் ஏற்படும். கடல் கடந்து செல்வீர்கள். அர்த்தாஷ்டம சனியால் பாதிப்புகள் ஏற்பட்டு ஓய்ந்து போய் இருப்பவர்களுக்கு உற்சாகம் அதிகமாகும் சுறுசுறுப்பு கூடும். குருவினால் உங்களுக்கு எனர்ஜி அதிகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகம் ஏற்படும். மறதிகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.
குருவின் பார்வையால் திருமண முயற்சிகள் கைகூடி வரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். கடன் பிரச்சினை தீரும். மொத்தத்தில் பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. சமயபுரம் மாரியம்மனை சரணடையுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே 2020ஆம் ஆண்டு உங்களுக்கு நிதானமான ஆண்டாக இருக்கிறது. அர்த்தாஷ்டம சனி பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சனி பகவான் உங்க ராசியில் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். வளர்ச்சி அதிகமாகும். மாற்றமும் முன்னேற்றமும் நடைபெறும். குரு மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு புகழ் கூடும். புதிய பிசினஸ் தொடங்கலாம். வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு கனவு நிறைவேறும். கேது உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். ராகு உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு போகிறார். வெளிநாடு பயணங்கள் கை கூடி வரும். குரு பார்வையால் உங்க உடன் பிறந்தவர்களின் திருமணத்திற்கு உதவி செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தொழில் முதலீடுகளில் அதிக முதலீடு செய்து ரிஸ்க் எடுத்து மாட்டிக்காதீங்க. இந்த ஆண்டு நீங்க வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர். சனிக்கிழமையில் காவிரியில் குளித்து ரங்கநாதரை தரிசனம் செய்ய வெற்றிகள் தேடி வரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

ஏழரை சனி ஜென்ம குருவினால் படாத பாடு பட்ட உங்களுக்கு 2020ஆம் ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பெரிய அதிர்ஷ்டங்கள் தேடி வரும். இரண்டாம் வீட்டில் குரு அமர்ந்துள்ளதால் முன்னேற்றங்கள் கிடைக்கும். பணவரவு அதிகமாகும். கடன் பிரச்சினை தீரும். வளர்ச்சிகள் அதிகம் ஏற்படும். மூன்றாம் இடத்து சனியால் முயற்சிகள் பலிக்கும். வருட பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். திருமணம் கை கூடி வரும். காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக நடக்கும். தொழிலில் நஷ்டப்பட்டு வந்த நீங்க புத்தாண்டில் உங்களுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும். செப்டம்பர் மாதம் கேது உங்க ஜென்ம ராசிக்கு வருகிறார். ஏழாம் வீட்டிற்கு ராகு வருகிறார். குடும்பத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைகிறது. படித்து பட்டம் பெறுவீர்கள். அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைகிறது.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரங்களே உங்க ராசியில் இருந்த சனி இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்க பேச்சில் கவனமாக இருங்க. ஜென்ம குரு இருப்பதால் உங்களுக்கு இருந்த கெடு பலன்கள் குறையும். பலவீனங்களை முறியடித்து பலத்தை அதிகரியுங்கள். தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தோல்விகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டிருப்பீர்கள். திருமணம் நடைபெறும் காலம். வருமானம் இந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும். ஏழரை சனி முடியவில்லை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பாத சனி படுத்தி எடுக்கும். கால்வலியை ஏற்படுத்தும் என்பதால் ஏழைகள் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். செருப்பு தானம் செய்யுங்கள். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமை தோறும் தரிசனம் பண்ணுங்க நல்லது நடக்கும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. உங்களுக்கு ஏழரை சனி ஜென்ம சனியாக நீடிக்கிறது. உங்க ராசிநாதன் உங்க வீட்டில் அமர்கிறார். கடின உழைப்பு வெற்றியை தரும். உங்க உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். பிசினஸ் அற்புதமாக இருக்கும் தொழில் தொடங்கலாம். பிசினஸ் லாபம் கூடும். குரு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்குவீங்க. சொத்துக்கள் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. என்னதான் சம்பாதித்து சொத்து சேர்த்தாலும் நமக்கு ஏதோ குறை இருக்கிறதே என்ற கவலை இருக்கத்தான் செய்யும். எனவே 2020ஆம் ஆண்டில் உங்களுக்கு பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெற சிதம்பரம் நடராஜ பெருமானை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே. சனி 12ஆம் வீட்டிற்கு வருகிறார். விரையத்தில் சனி இருக்கும் காலம் நிதானம் தேவை. ஐந்தில் ராகு இருக்கிறார் எதையும் ஆற அமர யோசித்து எதையும் பண்ணுங்க. இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனி தொடங்குது. சோதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள். புதிய வேலைகளுக்கு மாற வேண்டாம். எந்த ரிஸ்க்கும் எடுக்காதீங்க. உள்ளதை கொண்டு திருப்தியுடன் வாழுங்கள். குரு பகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வது அற்புதம். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அற்புதமாக உள்ளது. தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பெரிய முதலீடு எதையும் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. தொழில் மூலம் கிடைக்கும் லாப பணத்தை சேமித்து வைப்பது நல்லது சுப விரைய செலவுக்கு பயன்படுத்துங்கள். வண்டி வாகனத்தில் கவனமாக இருங்க நிதானமாக போனால் அடிபடுவதில் இருந்து தப்பிக்கலாம். இந்த ஆண்டு நீங்க ஏழுமலையானை வணங்குங்கள் யோகங்கள் நிறைய கிடைக்கும்.

மீனம்

மீனம்

லாப சனி, பத்தில் குரு நல்ல யோகத்தை தருகிறது. தொழிலில் நல்ல லாபம் வரும் வெளிநாடு யோகம் கை கூடி வரும். திருமணம் கை கூடி வரும். காதலிப்பவர்களுக்கு காதல் திருமணம் கை கூடி வரும். 2020ஆம் ஆண்டு சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களின் பலத்தால் மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடைபெறும். லாபத்தில் சனி இருக்க தடைகள் இல்லாமல் நினைத்தது நிறைவேறும். பணவருமானம் அதிகமாகும். சேமிப்பு கூடும். வங்கி சேமிப்பு உயரும். தன்னம்பிக்கை கூடும். புதிய தொழில் தொடங்கலாம். நோய்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். ஆன்மீக பயணம் நிறைய நடக்கும். வெளிநாடு இன்ப சுற்றுலாவிற்கு செல்வீர்கள். சுகமாக சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். 2020ஆம் ஆண்டில் நிறைய நல்லது நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+