Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் இன்று முதல் சிவன் ஆட்சி - வளையல் விற்று லீலை செய்த சிவனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலம்

மதுரையில் ஆவணி மூலத்திருவிழாவின் 7வது நாள் வளையல் விற்ற லீலை நடைபெற்றது. இரவில் சுந்தரேஸ்வரரின் கையில் செங்கோல் அளித்து பட்டாபிஷேகம் நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் முக்கிய அம்சமான சொக்கநாதர் பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பாண்டிய நாட்டில் சுந்தரேஸ்வரரின் ஆட்சி இன்று முதல் தொடங்குகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமி நடத்தும் திருவிளையாடல்கள் தினம் தினம் அரங்கேறி வருகின்றன.

7ஆம் நாளான நேற்று காலையில் வளையல் விற்ற லீலை நடைபெற்றது. முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும், கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்தனர்.

பிச்சை பெற்ற இறைவன்

பிச்சை பெற்ற இறைவன்

இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டார். பிட்சாடனார் அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார்.

மதுரையில் திருவிளையாடல்

மதுரையில் திருவிளையாடல்

பிட்சாடனராகத் திரிந்த ஈசனின் அழகில் மனதைப் பறி கொடுத்த ரிஷிபத்தினிகள் தாபத்தால் வளையல்கள் கழலும் அளவிற்கு தங்களை வருத்திக்கொண்டு உடல் மெலிந்தனர். நடந்ததை அறிந்த ரிஷிகள் 'ஈசனிடம் காமமுற்ற நீங்கள் அனைவரும் மதுரையம்பதியில் பிறந்து ஈசன் கையினால் வளையல் போடப்படும்போது சாப விமோசனம் பெறுங்கள்' என்று சபித்தனர்.

வளையல் விற்ற படலம்

வளையல் விற்ற படலம்

சாபம் பெற்ற ரிஷி பத்தினிகள் மதுரையில் வணிகர் குலத்தில் பிறந்து வளர்ந்தனர். சொக்கநாதர் வளையல் வியாபாரியாக மாறி வளையலை அணிவித்தோடு அவ்வாறு வந்தது தான்தான் எனவும் உணர்த்தி அவர்களை ஆட்கொண்டார். இத்திருவிளையாடல் வளையல் விற்ற படலம் எனப் புகழப்படுகிறது. ஆணவத்தோடு இருந்தால் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மதுரையில் சொக்கநாதர் ஆட்சி

மதுரையில் சொக்கநாதர் ஆட்சி

ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்ற தக்கார் கருமுத்து தி. கண்ணன் சுவாமி சன்னதி 2ஆம் பிரகாரத்தை வலம் வந்து பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் ஒப்படைத்தார். ஆவணி முதல் சித்திரை மாதம் வரை எட்டு மாதத்துக்கு சுந்தரேசுவரரின் ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம். இன்று முதல் மதுரையில் சொக்கநாதர் ஆட்சி ஆரம்பிக்கிறது.

இறைவனின் திருவிளையாடல்கள்

இறைவனின் திருவிளையாடல்கள்

8ஆம் நாளான இன்று நரியை பரியாக்கிய திருவிளையாடல், குதிரை கயிறு மாறிய திருவிளையாடல், 9ஆம் நாள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 10ஆம் நாள் விறகு விற்ற லீலை நடைபெறவுள்ளது. கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இறைவனின் ஆணை

இறைவனின் ஆணை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு சான்றாக தன்னை நம்பிய மாணிக்கவாசகருக்காக நரிகளை பரிகளாக்கி, பரிகளை நரிகளாக மாற்றியுள்ளார் இறைவன். தன்னுடைய பக்தன் தண்டனை அனுபவிக்கிறார் என்பதற்காக வைகை ஆற்றை பெருகச் செய்திருக்கிறார். இதெல்லாம் மதுரை மண்ணில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்களாகும். மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரார். வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல்வராகத் பிறந்தவர். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.

சிவனிடம் தஞ்சம்

சிவனிடம் தஞ்சம்

சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாதவூரர் வழியில் திருப்பெருந் துறையில் தங்கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத்தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார்கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவைத் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார். குதிரை வாங்க வந்த வாதவூர ரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல் களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறை ந்தார். வாதவூரரரை இறைவன் 'மாணிக்கவாசக' என அன்புடன் அழைத்தார். ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர்அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார்.

கடும் தண்டனை

கடும் தண்டனை

செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு அழைத்தார். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பில்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரைகள் வரும் என்றார். இறைவனார் குதிரைகளை அழைத்து வருவதாகக் கூறிய வாக்குறுதியை எண்ணி மாணிக்கவாசகர் குதிரைகளின் வரவிற்காக மதுரையில் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் பொய் உரைப்பதாகக் கருதி அவரை தண்டித்து அரசாங்கப் பணத்தை அவரிடம் இருந்து பெறுமாறு தண்டல்காரர்களுக்கு உத்தரவிட்டான். மாணிக்கவாசகருக்கு கடுமையான தண்டனைகள் கிடைத்தன.

நரிகள் காட்டுக்கு ஓடின

நரிகள் காட்டுக்கு ஓடின

அனைத்து தண்டனைகளையும் பொறுத்துக் கொண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம் "தங்களுடைய திருவாக்கினை பொய்யாக்கமல் விரைவில் குதிரைகளுடன் மதுரைக்கு வாருங்கள்" என மனமுருகி வழிபட்டார். ஆடி முடித்து ஆவணி மாதம் பிறந்து விட்டது. இறைவனார் மாணிக்கவாசகருக்கு உதவ திருவுள்ளம் கொண்டார். இறைவனின் ஆணையை ஏற்று நந்திதேவரும் பூதகணங்களும் நரிகளை குதிரைகளாக மாற்றி அதன்மீது அமர்ந்து மதுரையை நோக்கி விரைந்தனர். குதிரைக் கொட்டிலுக்குள் ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் குதிரைவீரர்கள் இருப்பதைக் கண்ட பாண்டியநாட்டு வீரர்கள் அரிமர்த்தனனிடம் விபரத்தைக் கூறினர். இறைவனார் குதிரையின் கயிற்றினை பிடித்து பாண்டியனின் கையில் கொடுத்து விட்டு "குதிரைகளை ஒப்படைத்ததாகி விட்டது. இனி குதிரைப் பற்றிக் கேட்கக் கூடாது. இதுவே குதிரை பரிமாற்றத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் என்று கூறினார்.

கடுமையான தண்டனை

கடுமையான தண்டனை

சூரியன் மறைந்ததால் பகல் முடிந்து இரவின் அடையாளமாக சந்திரன் தோன்றியது. நடுஇரவில் இறைவனின் திருவருளால் குதிரைகளாக மாறிய நரிகள் எல்லாம் பழைய வடிவத்தை அடைந்தன. ஊளையிட்ட வண்ணம் காட்டை நோக்கி ஓடின. நடந்தவைகளை கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதினான். மாணிக்கவாசகருக்கு சரியான தண்டனை அளித்து, அரசப்பணத்தை மீட்டெடுங்கள் என்று கட்டளையிட்டான். தண்டல்காரர்கள் அவருடைய கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வைகை ஆற்று மண்ணில் படுக்கச் செய்தனர். மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார்.

வைகையில் வெள்ளம்

வைகையில் வெள்ளம்

இறைவா, இது என்ன சோதனை?. என்னைக் காப்பாற்றுங்கள் என்று உருகி வழிபட்டார் மாணிக்கவாசகர். பக்தனின் குரல் கேட்டு உருகிய இறைவனார் வைகையில் தண்ணீர் பெருகச் செய்தார். மழை ஏதும் பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் வருவதைக் கண்டதும் தண்டல்காரர்கள் திகைத்தனர். மாணிக்கவாசகர் இருந்த இடத்தில் மட்டும் வெள்ளம் வராமல் தண்ணீராக மட்டும் வையை ஓடியது. நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இறைவனாரின் திருவிளையாடலை எண்ணியபடி இருந்தார். நேரம் ஆகஆக வையையின் வெள்ளம் கரையை உடைக்கத் தொடங்கியது. இதன்பிறகே இறைவன் வைகை கரையை அடைக்க வந்தி பாட்டி கொடுத்த பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை அரங்கேறுகிறது.

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன்

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9ஆம் நாளான நாளை ஆகஸ்ட் 19ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம் நடைபெறும். இதையொட்டி காலை 8 மணிக்கு சுவாமி நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். பிட்டுக்கு மண் சுமந்த லீலை பிற்பகல் 1.05 மணி முதல் 1.29 மணிக்குள் நடைபெறும். அப்போது பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை கூறியுள்ளார். நாளை மாலை 4 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+