ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்
துலாம் ராசியில் சூரியன் இருக்கும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சுக்ர பலம் கிடைக்கும். அஷ்ட லட்சுமி யோகமும் கூடி வரும்.
சென்னை: சுக்கிரன் ஆசியும் பார்வையும் கிடைத்தால் ஒருவர் ராஜா போல சகல சந்தோஷங்களையும் அனுபவிப்பார். சுக்கிரன் வீடான துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமான ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு அரசாளும் யோகமும் அதிர்ஷ்டமும் தேடி வரும். அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் கிடைக்கும். ஐப்பசியில் குழந்தை பிறந்தால் ஆபத்து வருமோ என்று அஞ்சத்தேவையில்லை.
நவகிரகங்களில் சுக்கிரன் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார்தான். களத்திரகாரகன், கலைகளின் நாயகன், சுக காரகன் கவிதரும் கிரகம் என்றெல்லாம் போற்றப்படுகிறார் சுக்கிரன். சுக்கிரன் சரியான இடத்தில் அமர்ந்து அவருடைய தசை நடைபெற்றால் அளப்பறிய ஆற்றலும் செல்வமும் கிடைக்கும்.
பொதுவாக ஐப்பசியில் குழந்தைகள் பிறந்தால் அது வறுமையில் வாடும் என்றும் அரசு வேலைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்றெல்லாம் யோசிப்பார்கள். அது தவறான கருத்து. சூரியன் நீச்சமாக சஞ்சரிக்கும் ஐப்பசியில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் பேரரசனாக பலம் வாய்ந்த அரசனாக திகழ்ந்தவர். அவர் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.

அலங்கார பிரியர்கள்
சுக்ரபலம் கூடிய துலாம் மாதத்தில் சூரியன் சஞ்சரிக்கும் அமைப்புள்ள மாதம் தான் ஐப்பசி மாதம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அஷ்ட லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமானவர்களாக இருப்பீர்கள். அலங்கார பிரியர்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்கள்.

தராசு
ஐப்பசி மாதம் துலாம் மாதம் தராசுதான் அடையாளம். தராசு சரிசமமாக எடை போடும். அதே போல குணாதிசயம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள். நீதியையும்,நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

ருசிப்பிரியர்கள்
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் போஜனப்பிரியர்கள். ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். உணவு உட்கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். விதவிதமான உணவுகளை தேடி தேடி சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். வித்தியாசமான சீதோஷ்ண நிலைகளில் வசிக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயதிலேயே உருவாகும்.

கோபமும் குணமும்
இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு நிரந்தர பகைவர்கள் இருக்க மாட்டார்கள். நட்புக்காக எதையும் செய்வார்கள். இவருடன் சிநேகம் வைத்துக்கொண்டவர்கள் எந்த காலத்திலும் பிரிய நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் கோபமும் அதிகம் வரும் குணசாலிகளாகவும் இருப்பார்கள்.

நீதிமான்கள்
நீதிபதி, வக்கீல்கள் போன்றவர்கள் துலாம் ராசியில், துலாம் லக்னத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் காவிரியில் நீராட வேண்டும். துலா ஸ்நானம் சிறப்பானது. முற்பிறவி பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. நோய்களையும் நீக்கும். மாதத்தின் கடைசி மூன்று நாட்களும், கார்த்திகை 1ஆம் தேதியும் நீராடலாம்.


Click it and Unblock the Notifications
