Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2017: குரு பகவான் பரிகார தலங்கள்

குரு பகவான் நாளை கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். தமிழகத்தில் உள்ள முக்கிய குரு பரிகார தலங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு சனிக்கிழமை கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். உங்களுக்கு அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வரலாம்.

வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

பாடி திருவலிதாயம்

பாடி திருவலிதாயம்

சென்னை அருகில் பாடியில் (திருவலிதாயம்) உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு.

தென் திட்டை ராஜகுரு

தென் திட்டை ராஜகுரு

திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

லட்சார்ச்சனை

லட்சார்ச்சனை

குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குருவித்துறை குரு

குருவித்துறை குரு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுரகுருவான சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்கிராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர். தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்கிராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்கிராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர். கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்கிராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக்காணாத குருபகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் ஆலயம்

ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் ஆலயம்

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

ஆழ்வார்திருநகரி

ஆழ்வார்திருநகரி

108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

கிழக்கு நோக்கிய குரு பட்டமங்கலம்

கிழக்கு நோக்கிய குரு பட்டமங்கலம்

கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர். இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம்.

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி

கோயில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை, திருவொற்றியூரில் வடக்கு பார்த்த கோலத்தில் தரிசிக்கலாம். பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர். இவருக்கு இங்கு உற்சவர் வடிவமும் உள்ளது. இச்சிலையின் கீழ் ஒரு யானை வடிவமும் உள்ளது. குரு பெயர்ச்சிக்கு இங்கு விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் நடக்கும்.

அகரம் கோவிந்தவாடி

அகரம் கோவிந்தவாடி

காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத் தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

தக்கோலம்

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+