குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: விபரீத ராஜயோகம்.. மாற்றம் முன்னேற்றம்.. குபேர யோகம் யாருக்கு?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரோதி தனுசு ராசி: மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18ஆம் நாள் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் களத்திர ஸ்தான குருவாக பயணம் செய்யப்போகிறார் குரு பகவான். குரோதி ஆண்டில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் வீடு,10ஆம் வீடு 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது.

குரு பெயர்ச்சி 2024: குருபகவான் குரோதி ஆண்டில் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவகத்தில் பயணம் செய்யப்போகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரெல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே.
குரு பார்வை: பொன்னவன் குருவின் பொன்னான பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
12 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும் .தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது.சுபவிரயமாக மாற்ற வீடு மனை வாங்கும் வாய்ப்பும் வரும். இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் மளமளவென நடைபெறும்.வருமானத்தை எல்லாம் நல்ல விசயத்திற்கு செலவு செய்வீர்கள். ராசிக்கு 2 ஆம் இடத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பணம் பலவழிகளில் இருந்தும் வரும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.
தைரிய சனி: உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் அதிபதியான சனிபகவான் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று ஆண்டு முழுவதும் பயணம் செய்வதால் இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். ஏழரை சனி காலம் முடிவுக்கு வந்து விட்டது.
கும்ப சனியால் குதூகலம்: சனிபகவான் கும்பம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். ஆண்டின் இறுதியில் சனி பகவான் நான்காம் வீடான மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி ராகு உடன் பயணம் செய்கிறார். அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் ஆவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
ராகு கேது பயணம்: குரோதி ஆண்டு முழுவதும் நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து பயணம் செய்வது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் திடீர் மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.












Click it and Unblock the Notifications