Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாசி மகம் விழா காணும் கும்பகோணம் நகரின் சைவ,வைணவ திருத்தலங்கள் - ஆலய தரிசனம்

மாசி மக உற்சவம் அன்று கும்பகோணத்தில் உள்ள 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழகத்தில் பழமையான நகரம் கும்பகோணம். குடந்தை நகரம் என்றும் சொல்வார்கள். கும்பகோணம் என்றதும் பாரபட்சம் இல்லாமல், அனைத்து இந்துக்களுக்கும் கண் முன் நிற்பது, உலகப்புகழ்பெற்ற மகாமகம் தீர்த்தக்குளமும், திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்திருக்கும் கோயில்களும் தான். தடுக்கி விழுந்தால் ஒரு கோயில் என்ற வகையில் வீதிக்கு நான்கு கோயில்கள் உண்டு. மாசி மக உற்சவம் அன்று கும்பகோணத்தில் உள்ள 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள்.

சைவ வைணவ பேதம் இல்லாமல், ஒவ்வொரு கோயிலும் குறைந்த பட்சம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதும், சைவ சமயக் குரவர்களால் தேவாரப் பாடல் பெற்றது, வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்று போட்டி போட்டுக்கொண்டு வானுயர்ந்து நின்று நம்மை ஆச்சர்யப்படுத்தும். இவ்வளவு பெருமைக்கும் காரணமானவர்கள் அப்போது அரசர்களாக இருந்து அறம் வளர்த்தவர்கள் தான். குறிப்பாக சோழர்களின் ஆட்சிக்காலம் சைவ, வைணவ மதங்களின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களையும் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது ஆகும். நிதானமாக ஒரு நாளைக்கு நான்கு கோயில்கள் என்று வைத்துக்கொண்டாலே ஒரு மாதமாகும். காரணம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கோயிலில் திருவிழா, விசேஷம் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். தற்போது, கும்பகோணத்தில் உள்ள முக்கியமான சைவ, வைணவ கோயில்களில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த சமயத்தில் அங்குள்ள முக்கியமான சிவன், பெருமாள் கோயில்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 கும்பகோணம் சிவ ஆலயங்கள்

கும்பகோணம் சிவ ஆலயங்கள்

கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் அறுபதுக்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஆதி கும்பேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், அமிர்தகலேஸ்வரர் கோயில், கோட்டீஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில் ஆகியவை சைவ பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்களாகும்.

 கும்பகோணம் விஷ்ணு ஆலயங்கள்

கும்பகோணம் விஷ்ணு ஆலயங்கள்

அதேபோல் பெருமாள் கோயில்களில், சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், இராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராகப்பெருமாள் கோயில், இராமசுவாமி கோயில், நாச்சியார் கோயில் ஆகியவை வைணவ பக்தர்கள் தரிசிக்கவேண்டிய முக்கியமான கோயில்களாகும். தற்போது மாசிமகத் திருவிழா ஆரம்பமாகி இருப்பதால், சைவ, வைணவ பக்தர்கள் கும்பகோணத்திற்கு படையெடுப்பது உண்டு. அப்போது மேலே குறிப்பிட்டுள்ள கோயில்களுக்கு சென்று தரிசித்து இறைவனின் அருளைப் பெறலாம். நாம் இப்போது இக்கோயில்களின் சிறப்புகளைப் பார்க்கலாம்

 ஆதிகும்பேஸ்வரர் கோயில்

ஆதிகும்பேஸ்வரர் கோயில்

கும்பகோணம் நகரின் மையப்பகுதியில், மகாமகம் தீர்த்தமாடும் குளத்தின் அருகில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையானது இக்கோயில். பிரளய காலத்துடன் தொடர்புடையது, இத்தல இறைவனின் பெயர் கும்பேஸ்வரர், அம்மனின் பெயர் மங்களநாயகி. அப்பர், சம்பந்தரால் தேவரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற கோயிலாகும்.

 அபிமுகேஸ்வரர் கோயில்

அபிமுகேஸ்வரர் கோயில்

கும்பகோணம் மகாமகக் குளத்திற்கு அருகில் உள்ள கோயில். இத்தல இறைவனின் பெயர் அபிமுகேஸ்வரர், அம்மனின் பெயர் அமிர்தவள்ளி. அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என்று பொருள். இறைவனின் மற்றொரு பெயர் நாளிகேசர் என்பதாகும். பிரளய காலத்தில், சிவபெருமான் வேடன் உருவம் தாங்கி வந்து, பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கலசத்தை அம்பெய்து சிதைத்த போது, அக்கலசத்தின் மேல் இருந்த தேங்காய் ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடத்தில் ஒரு தென்னை மரமும், அதன் அடிப்புறத்தில் ஒரு சிவலிங்கமும் தோன்றின. தேங்காய்க்கு நாளிகேரம் என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் உள்ள பைரவர், மகாமகக் கோயில்களான பன்னிரெண்டு கோயில்களில் உள்ள பைரவரைக் காட்டிலும் பெரியவர் ஆவார்.

 அமிர்தகலேஸ்வரர் கோயில்

அமிர்தகலேஸ்வரர் கோயில்

கும்பகோணம் நகரில் இருந்து மூன்று கி.மீ தொலைவில், வலங்கைமான் செல்லும் வழியில் அமைந்துள்ளது இக்கோயில். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான, சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற, சோழ நாட்டில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 68ஆவது கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் பெயர் அமிர்தகலேஸ்வரர், அம்மனின் பெயர் அமிர்தவல்லிநாயகி. முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி கோட்டை இருந்ததால், கோட்டைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சோழர் கால சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் மிகச் சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த கோயில்.

 நாகேஸ்வரர் கோயில்

நாகேஸ்வரர் கோயில்

கும்பகோணம் நகரில் நாகேஸ்வரன் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது இக்கோயில். தேவராப் பாடல் பெற்ற சிவாலயங்களில் 90ஆவது கோயில். இத்தல இறைவனின் பெயர் நாகேஸ்வரர், அம்மனின் பெயர் பிரஹந்தநாயகி. நாகராஜன் வந்து பூஜித்து அருள் பெற்ற தலமாதலால் நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயில் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கி, திருமணம் மற்றும் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

 ஏகாம்பரேஸ்வரர் கோயில்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இக்கோயில். இத்தல மூலவரின் பெயர் ஏகாம்பரேஸ்வரர், அம்மனின் பெயர் காளிகாபரமேஸ்வரி. இங்கு அம்மனின் சந்நிதிக்கு முன்பாக சிங்கத்திற்கு பதில் நந்தி வாகனம் அமைந்துள்ளது சிறப்பாகும்.

 காளஹஸ்தீஸ்வரர் கோயில்

காளஹஸ்தீஸ்வரர் கோயில்

கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இத்தல இறைவனின் பெயர் காளஹஸ்தீஸ்வரர், அம்மனின் பெயர் ஞானாம்பிகை. ராகு கேது பரிகாரத் தலமாகவும் விளங்குவதால், இக்கோயிலின் இறைவனை தரிசித்தால் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும். இக்கோயிலில் உள்ள ஆராய்ச்சி மணியை அடித்தால் 'ஓம்' என்ற ஓசை கேட்கும்.

 சோமேஸ்வரர் கோயில்

சோமேஸ்வரர் கோயில்

சமயக்குரவர்களால் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் 91ஆவது தலமாகும். கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ளது. இத்தல இறைவனின் பெயர் சோமேஸ்வரர், அம்மனின் பெயர் தேனார் மொழியாள். இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாகக் அருள்பாலிக்கிறார்.

 காசிவிஸ்வநாதர் கோயில்

காசிவிஸ்வநாதர் கோயில்

கும்பகோணம் மகாமகக்குளக்கரையில் வடக்கில் அமைந்துள்ளது. இத்தல இறைவனின் பெயர் காசிவிஸ்வநாதர், அம்மனின் பெயர் விசாலாட்சி. நவகன்னிகைகள் தங்களின் பாவம் தீர்க்க வழிபட்ட தலம். ஸ்ரீராமபிரான் இத்தல இறைவனை தரிசித்து ருத்திராட்ச மாலை பெற்றார் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

 கௌதமேஸ்வரர் கோயில்

கௌதமேஸ்வரர் கோயில்

கும்பகோணம் மகாமகக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சிவபெருமானால் உடைக்கப்பட்ட அமு கலசத்தில் இருந்த நூல் லிங்கமாக மாறிய தலம். இக்கோயிலின் இறைவன் கௌதமேசர், அம்மனின் பெயர் சௌந்தரநாயகி. கௌதம முனிவருக்கு அருள் புரிந்ததால் இப்பெயர் ஏற்பட்டதாக தலபுராணம் சொல்கிறது.

 பாணபுரீஸ்வரர் கோயில்

பாணபுரீஸ்வரர் கோயில்

கும்பகோணம் நகரில் பாணத்துறை என்ற பகுதியில் அமைந்துள்ளது இக்கோயில். சுமார் 1600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட, காவிரிக்கரையில் திருமஞ்சனம் பெற்ற சிறப்பும், மகாமக தீர்த்தவாரி வைபவத்தில் எழுந்தருளும் பேரும் பெற்றது பாணபுரீஸ்வரர் இத்தலம். மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தல இறைவனின் பெயர் பாணபுரீஸ்வரர், அம்மனின் பெயர் சோமகலாம்பாள். வங்க தேசத்தின் மன்னன் சூரசேனன் தன் மனைவி காந்திமதியின் தீராத நோயை போக்க இங்கு வந்து தங்கி திருப்பணி செய்து மகப்பேறு பெற்றான்.

 கம்பட்ட விஸ்வநாதர் கோயில்

கம்பட்ட விஸ்வநாதர் கோயில்

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். சோழர்கள் ஆட்சியில் நாணயம் செய்த இடம் கம்பட்டம் என்ற இந்த இடம். இதன் காரணமாகவே இக்கோயிலின் மூலவர் கம்பட்ட விஸ்வநாதர் என்றும் அம்மன் நிதியம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 கோட்டீஸ்வரர் கோயில்

கோட்டீஸ்வரர் கோயில்

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், சமயக்குரவரில் மூத்தவரான அப்பர் பெருமானால் பாடல் பெற்ற சோழ நாட்டின் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள 44ஆவது கோயில். இக்கோயிலின் மூலவர் பெயர் கோடீஸ்வரர், கைலாசநாதர், அம்மனின் பெயர் பந்தாடு நாயகி. அம்மன் சிலையில் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள் செய்பவள் என்பதால் சிலை இவ்வாறு அமையப்பெற்றுள்ளது.

 சார்ங்கபாணி கோயில்

சார்ங்கபாணி கோயில்

வைணவ தலங்களில் முதன்மையான சார்ங்கபாணி கோயில் கும்பகோணம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படும் இத்தலம் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உருவான கோயிலாக போற்றப்படும் சிறப்பு கொண்டது. இத்தல மூலவரின் பெயர் சார்ங்கபாணி, தாயார் பெயர் கோமளவல்லி மற்றும் ஸ்ரீமஹாலட்சுமி. இக்கோயிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் சித்திரைத் தேர் விழா சிறப்பானதாகும்.

 சக்கரபாணி கோயில்

சக்கரபாணி கோயில்

கும்பகோணம் நகரில் உள்ள வைணவ கோயில்களில் இரண்டாவது மிகப்பெரிய கோயிலாகும். காவிரியின் தென்கரையில், பெரியகடைத் தெருவின் அருகில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர் சக்கர வடிவ தாமரைப் பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில் அமர்ந்து அருள்பாலிப்பதால், சக்கரபாணி என்று அழைக்கப்படுகிறார். தாயார் விஜயவல்லியும் நின்ற நிலையில் அருள்புரிகிறார். இத்தலத்தில் உள்ள தீர்த்தம் சக்கர படித்துறை. ஸ்ரீசக்கரம் தோன்றியதால், இங்கு நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு ஒப்பாகும்.

 இராஜகோபாலசுவாமி கோயில்

இராஜகோபாலசுவாமி கோயில்

கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் அமைந்துள்ளது இக்கோயில். மகாமகம் அன்று குளத்தில் தீர்த்தமாடும் வைணவக் கோயில்களில் இக்கோயிலின் பெருமாளும் ஒருவர் ஆவார். இராஜேந்திர சோழனின் மகன் இராஜாதிராஜ சோழனால் கட்டப்பட்டதால் இராஜாதிராஜ விண்ணகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் வாசுதேவப்பெருமாள். மூலவரும் உற்சவரும் இராஜகோபாலசுவாமியே. தாயார் பெயர் செங்கமலத்தாயார்(படிதாண்டாப் பத்தினி).

 ஆதிவராகப்பெருமாள் கோயில்

ஆதிவராகப்பெருமாள் கோயில்

கும்பகோணம் நகரில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இவ்வாலயம். இத்தல மூலவரின் பெயர் ஆதிவராகப்பெருமாள். தாயார் பெயர் பூமிதேவி என்ற அம்புஜவல்லி. இங்குள்ள தீர்த்தம் வராக தீர்த்தம். உலகில் முதலில் தோன்றிய இடம் வராகபுரி என்னும் கும்பகோணம் என்ற இக்கோயிலின் தல புராணம் சொல்கிறது.

 ராமசுவாமி கோயில்

ராமசுவாமி கோயில்

கும்பகோணம் பெரியகடை வீதியில் தென்கோடியில் அமைந்த தலம் இது. நாயக்க மன்னரிடம் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர் இக்கோயிலைக் கட்டியதாக தல வரலாறு கூறுகிறது. உண்மையில் இது சிற்பக்கூடம் போல் காட்சியளிக்கும். சிற்பங்கள் அனைத்தும் திருமாலின் அவதாரங்களை சித்தரிக்கும் வகையில் உள்ளன. மூலவர் பட்டாபிஷேக ராமபிரான், சீதாப்பிராட்டியார், இலட்சுமணர், பரதன், சத்ருகனன், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+