அனுமன் ஜெயந்தி கோலாகலம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00008 வடை மாலை அலங்காரம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்துக்கு எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டன.
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆஞ்சநேய கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய பூஜை நடைபெற்றது.
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அமாவாசை திதியில் பகவான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்கின்றன புராணங்கள். வாயுபுத்திரன் அனுமன், அஞ்சனா தேவிக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தார்.
தமிழகம் முழுவதும் மார்கழி மாதங்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இன்று அனுமன் ஜெயந்தி விழா அனைத்துக் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.

ஆஞ்சநேயருக்கு வழிபாடு
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்குச் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் செய்யப்பட்டன.

வடைமாலை அலங்காரம்
ஒரு லட்சத்துக்கு எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். 2 ஆயிரத்து 250 கிலோ உளுந்தம் பருப்பு மாவு, 600 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 135 கிலோ உப்பு ஆகியவற்றைக்கொண்டு 13 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட வடைகள் மாலைகளாகக் கோர்க்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது.

வடை பிரசாதம்
மாலை 4 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெறும். ஆஞ்சநேயருக்கு மாலையாக சார்த்தப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதே போல தமிழகம் முழுவதும் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆஞ்சநேயருக்கு வழிபாடு
கன்னியாகுமரிமாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்திபெற்ற தாணுமாலையன் சுவாமி கோவிலில் உள்ள புகழ்பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஒருலட்சத்து எட்டு ஜாங்கிரி
திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடமாலை மற்றும் 1 லட்சத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் பிறந்தநாள்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications