மண்டல பூஜையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி - நெய் அபிஷேகம் இல்லை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல பூஜைக்கும் தை மாதம் மகர விளக்கு தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நெய் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெய் அபிஷேகம் கிடையாது என தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை 1ஆம் தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலும் இப்போதே தயாராகி வருகின்றது.

சபரிமலையில் கார்த்திகை மாத பூஜை, மார்கழி மாத மண்டல பூஜை, தை முதல் நாள் நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றம் மகரஜோதி தரிசனத்திற்காகவும், கார்த்திகை 1ஆம் தேதி தொடங்கி 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு
மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினசரி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும்.
இந்த ஆண்டு ஐயப்பனுக்கு பக்தர்கள் செய்யும் நெய் அபிஷேகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அமைச்சர்களுடன் ஆன்லைன் மூலம் கலந்தாலோசித்து பக்தர்கள் தரிசனம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
கொரோனா தொற்று பாதித்த பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்காக நிலக்கல் உள்பட பல்வேறு இடங்களில் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். பக்தர்கள் தரிசனம் முடிந்த உடன் மலை இறங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். கூட்டம் கூடாத வகையில் சிறிய வகையில் அன்னதானம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகர விளக்கையொட்டி நடத்தப்படும் தங்க அங்கி, திருவாபரண ஊர்வலங்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி நடத்தப்படும். 10 வயதிற்கு குறைவான பக்தர்களும், 65 வயதிற்கு கூடுதலான பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை யாத்திரை செல்பவர்கள் தேங்காய்க்குள் நெய்யை ஊற்றி அதை இருமுடியாக கட்டி எடுத்துக்கொண்டு செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் அம்சம்தான். இதனை அனைவரும் உணரும் வகையிலேயே முக்கண் கொண்ட சிவ அம்சமான தேங்காயில் விஷ்ணுவின் அம்சமான பசு நெய் ஊற்றி எடுத்துச்செல்கின்றனர். தேங்காய்க்குள் நெய் ஊற்றி எடுத்துச்சென்றால் கெடாமல் இருக்கும் அதனை மொத்தமாக ஊற்றி குருசாமி கொண்டு போய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த ஆண்டு நெய் அபிஷேகம் கிடையாது பம்பையில் குளிக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications