சனி பெயர்ச்சி பலன் 2023: யாருக்கு வேலையில் புரமோசன்..தொழிலில் கொடி கட்டி பறக்கப்போவது யார்?
சென்னை: கும்ப ராசியில் பயணம் செய்யப்போகும் சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் சனியாக கர்ம சனியாக பயணம் செய்யப்போகிறார். சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும், பத்தாம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்த சனிபவான் இனி பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த பயணம் ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி தை 3ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழப்போகிறது. சனி பகவான் தனது வீடான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் இருந்து அவிட்ட நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு இடம் மாறுகிறார் . 2025ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். அவ்வப்போது வக்ர கதியில் பின்னோக்கியும் சென்று வருவார் சனிபகவான்.

சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தான அதிபதி, கர்ம ஸ்தான அதிபதி. தன்னுடைய வீட்டில் அவர் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உங்களுக்கு கடவுளின் ஆசி கிடைக்கப்போகிறது. ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனமும் அறிவாற்றலும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். அதே நேரத்தில் அதிக அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்காதீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணம் வெற்றியை தேடி தரப்போகிறது. புகழும் பண வரவும் தேடி வரும் காலமாகும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி திடீர் திருப்பங்களை தரப்போகிறது. மகிழ்ச்சிகரமான சம்பவங்களும் சுப நிகழ்ச்சிகளும் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்தாலும் பொறுப்புகளும் பணிச்சுமையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். வியாபாரிகளுக்கு செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும் போட்டிகளும் அதிகரிக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போட்டிகளை தாண்டி வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சொந்த பந்தங்கள் கூடி மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். பிள்ளைகளால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு புதிய பொறுப்புகளும் அந்தஸ்தும் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ரிஷப ராசியில் மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். சகோதர சகோதரிகளின் வீட்டு சுப விஷேசங்களில் பங்கு கொள்வீர்கள். இனி நீங்கள் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். ஆன்மீக காரியங்களில் அதிகம் ஈடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்களின் பழைய கடன்கள் அடைபடும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும் தடைபட்டிருந்த புரமோசனும் சம்பள உயர்வும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதுடன் சிவனுக்கும் நந்திக்கும் பால் அபிஷேகம் செய்ய சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications