உங்கள் படுக்கை அறையில் இருக்கும் தேவையற்ற பொருட்கள்..உடனே தூக்கி வீசுங்கள்..வாஸ்து டிப்ஸ்
சென்னை: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என்று சொல்வார்கள்.. சிலருக்கு தூக்கம் வரவே வராது விடிய விடிய ராக்கோழி போல விழித்துக்கொண்டிருப்பார்கள். நிம்மதியாக உறங்கினால்தான் பகல் நேரங்களில் உற்சாகமாக வேலை செய்ய முடியும். நம்முடைய படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள்தான் நமது தூக்கத்தை பாதிக்கும் காரணிகளாக இருக்கும். வாஸ்து சாஸ்திரப்படி நமது படுக்கை அறையில் எந்த பொருட்களை வைத்திருக்கலாம் என்ன பொருட்களை வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம்.
படுக்கை அறையில் நாம் கண்ட கண்ட பொருட்களை போட்டு வைத்திருக்கக் கூடாது. அது நமது நேர்மறை ஆற்றலை பாதிக்கும். நாம் ஓய்வெடுக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கக் கூடிய எந்த பொருளும் இருக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிலர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை வைத்திருப்பார்கள் சிலரோ செல்போனை தலைக்கு அடியில் வைத்து உறங்குவார்கள்.

சிலரோ பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளை படுக்கை அறையில் வைத்து உறங்குவார்கள். நாம் எப்போதுமே செல்லப்பிராணிகளை நமது படுக்கை அறையில் அனுமதிக்கக்கூடாது. அது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும். அதோடு நோய் தொற்றினையும் ஏற்படுத்தும். நிம்மதியான தூக்கம் பறிபோகும் ஆபத்து உள்ளது.
இரவு நேரத்தில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் தலையணைக்கு பக்கத்தில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு உறங்குவார்கள். இதன் மூலம் மனதளவில் பாதிப்பு ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தண்ணீரின் காரக கிரகம் சந்திரன். மனதிற்கு காரகமும் சந்திரன்தான் எனவே தலையணைக்கு அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்து உறங்குவதை தவிர்ப்பது நல்லது.
படுக்கை அறையில் பால் கப், டீ கப் போன்றவைகளை வைத்திருக்கக் கூடாது. சிலர் இரவு நேரங்களில் பாலை குடித்து விட்டு அந்த டம்பளரை அப்படியே வைத்து விடுவார்கள் எனவே நாம் பால் குடித்த டம்ளர்களை கழுவி வைப்பது நல்லது. அது உறக்கத்தை பாதிப்பதோடு செல்வம் வரும் வழியையும் தடுக்குமாம்.
தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்து உறங்குவதால் கதிர்வீச்சின் மூலம் உடல் நலத்தை பாதிக்கும். எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். லேப்டாப், டேப்லெட்களை தலையணைக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கக் கூடாது. இதனால் மூளை பாதிப்பு ஏற்படுவதோடு உறக்கம் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் உண்டாகும்.
சிலர் துணிகளை எல்லாம் படுக்கை அறையில் குப்பையாக கொட்டி வைத்திருப்பார்கள். படுக்கை அறையில் கயிறு கட்டி அதன் மேல் துணிகளை காய வைத்திருப்பார்கள். இது தவறானது. ஈர துணிகளோ,அழுக்குத்துணிகளோ சனியின் ஆதிக்கத்தை படுக்கை அறையில் அதிகரிக்கும். அதே போல குப்பைகளையும் படுக்கை அறையில் குவித்து வைத்திருக்கக் கூடாது இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் கெட்ட கனவுகள் வரும்.
படுக்கும் போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணைக்கு அருகில் புத்தகத்தை வைத்துக்கொண்டே உறங்கி விடுவார்கள். இதுவும் தவறானது. புத்தகத்தை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கினால் அது நம்முடைய முன்னேற்றத்தை பாதிக்கும் எனவே புத்தகங்களை அதற்குரிய ஷெல்ப்களில் வைத்து விட்டுதான் உறங்க வேண்டும்.
ஒரு சிலர் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலி, கையில் போட்டிருக்கும் தங்க வளையல், காதில் உள்ள தோடுகளை கழற்றி வைத்து விட்டு உறங்குவார்கள். அதுவும் தலையணைக்கு கிழே இந்த தங்க நகைகளை கழற்சி வைத்து விட்டு உறங்குவார்கள். வாஸ்து சாஸ்திரப்படி நாம் தலைக்கு அடியில் தங்கத்தை வைத்து உறங்கக் கூடாது. அப்படி வைத்து உறங்கினால் சுப காரியங்களில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையேயும் விரிசல் ஏற்படும். சிலரோ தலையணைக்கு அருகிலோ தலையணைக்கு கீழோ பணத்தை வைத்துக்கொண்டு உறங்கக் கூடாது இதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
இரவு நேரங்களில் நாம் உறங்கும் போது தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உறக்கக் பிரச்சினை உள்ளவர்கள் தலையணைக்கு அடியில் வெள்ளைப்பூண்டினை வைத்து உறங்கலாம். இதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெள்ளைப்பூண்டானது இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுவதாக பண்டை காலத்தில் இருந்தே நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே படுக்கை அறையில் தேவையற்ற பொருட்களை எடுத்து விட்டாலே நிம்மதியான உறக்கம் வரும்.












Click it and Unblock the Notifications