கடக ராசிக்கு பம்பர் பரிசு.. பிரச்சனைகள் தீரும், கடன் தீரும்.. திடீர் அதிர்ஷ்டத்தால் கொட்டும் பணம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினருக்கு கடந்த 5 வருடங்களாக சனிப்பெயர்ச்சியில் பல்வேறு கடும் பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். 8 ஆம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம். இப்போது ராகு வந்து அங்கு அமரப்போகிறார். திடீர் அதிர்ஷ்டம், திடீர் யோகம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 10 ஆம் இடத்துக்கு 11 ஆம் இடமாக வருவது அதாவது ஜீவனத்துக்கு லாபமாகவும், லாபத்துக்கு ஜீவனமாகவும் வருகிறது. எதிர்பாராத திடீர் யோகத்தை கிரகங்கள் கொடுக்கப் போகின்றன.
திடீர் யோகம்
குருவின் பார்வையில் ராகு வந்து அமருவதால் உங்களுக்கு கட்டாயமாக திடீர் யோகம் கிடைக்கும். குரு உங்களுக்கு 6, 9 வீட்டின் அதிபதி என்பதால் இதுவரை இருந்து வந்த கடன்களை எல்லாம் அடைக்கத் தொடங்குவீர்கள். கடக ராசிக்காரர்கள் சிரிக்கக் கூடிய அமைப்பு உண்டாகும். நிறைய பிரச்சனைகளை, சவால்களை தீர்ப்பீர்கள். அடகு வைத்த சொத்து பத்திரம், நகைகளை மீட்பீர்கள்.
வெற்றி மேல் வெற்றி
நீங்கள் தொலைத்தவை எல்லாம் மீண்டும் கிடைக்கும். உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். ராகு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யப் போகிறார். செவ்வாய் என்பது உங்களுக்கு பஞ்சமாதிபதியாகவும், தசம கேந்திரத்தின் அதிபதியாகவும் வருவதால் குழந்தைகள், இடங்கள், கனரக இயந்திரங்கள், ஜீவனம், தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வெற்றி பெறும் காலகட்டமாகவும் இருக்கும்.
அதிர்ஷ்டம்
இனி உங்களுக்கு பாசிட்டிவான காலகட்டமாக இருக்கும். கேது 2 ஆம் வீட்டிற்கு வருகிறார். 2 ஆம் இடம் என்பது தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம். இதற்கு முன்பு செய்த தவறுகளை இனி செய்யாமல் இருப்பது நல்லது. வாக்கு கொடுக்கும்போது அதனை செய்ய முடியுமா என்று யோசித்து செயல்படுவது நல்லது. அரசாங்க விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
லாபம் அதிகரிக்கும்
சுக்கிரன் நட்சத்திரத்தில் கேது பகவான் வந்து அமரும்போது நீண்டநாட்களுக்குப் பிறகு அமோகமான லாபம் வரும். தெரியாத விஷயங்களில் முதலீடு செய்து, அதில் லாபம் காணும் முயற்சியில் ஈடுபடுவதை, முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தெரிந்த விஷயங்களில் முதலீடு செய்வது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்கள், அங்கீகரிக்கப்படாத விஷயங்களுக்குள் தலையிடாமல் இருந்தால் வம்பு, வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மேலும் மேலும் அபிவிருத்தியைக் கொடுக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் நல்ல மேன்மையைப் பெறுவீர்கள். திடீர் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
வழிபாடு
திங்கள்கிழமைகளில் பிள்ளையார்பட்டி பிள்ளையார் அல்லது விநாயகர் கோயில்களில் வழிபாடு செய்வது நல்லது. கணபதி வழிபாடு, கணபதி ஹோமம், மூலமந்திர ஜெபங்கள் செய்வது நல்லது. சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது, அனுமன் சாலிசா பாராயணம் செய்வது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வது 2 ஆம் வீட்டில் இருக்கும் கேதுவின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும்












Click it and Unblock the Notifications