ராகு கேது பெயர்ச்சி எப்போது?.. திருநாகேஸ்வரம் கோயில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கும்பகோணம்: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் ராகு கேது பெயர்ச்சியும் ஒன்று. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு - கேது பெயர்ச்சி ஏப்ரல் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக திருநாகேஸ்வரம் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாகும். கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் நிலை மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன.

உலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி கடந்த மாதம் முடிந்துள்ளது. ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி மற்றும் குருவைப் போல ராகு கேதுவும் வலிமையான கிரகம் தான். ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும். அதன்படி இந்த வருடம் ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
ராகு கேது பெயர்ச்சி எப்போது
திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மே 18 ஆம் தேதியும், வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. பொதுவாக கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்க முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
பொதுவாக மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகர்ந்தாலும் ராகு கேது மட்டும் பின்னோக்கி நகரும். ஏப்ரல் 26 ஆம் தேதி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் மாலை 4.20 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.
திருநாகேஸ்வரம்
ராகு கேதுவுக்கு உரிய முக்கிய ஸ்தலமாக கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒன்பது கிரகங்களின் தலங்களில் இந்த கோயில் ராகு பகவானுக்கு உரிய பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
பரிகார ராசிகள்
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பகவானுக்கான பரிகாரத்தலமாக விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் மங்கள ராகுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ராகு பகவானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த ராகு பெயர்ச்சியில் 9 கிரகங்கள் பரிகார ராசிகளாக உள்ளன. அதன்படி, ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
ராகு கேது தோஷத்தின் பாதிப்புகள்
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி போல ராகு கேது பெயர்ச்சியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் திருமணம் தடைபடும். குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். தோல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும். இந்த தோஷத்திற்குரிய பரிகாரத் தலங்களில் வழிபாடு செய்வதன் மூலமாக அதில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications