சனிப்பெயர்ச்சி: அஸ்வினி நட்சத்திரத்துக்கு அள்ளித் தரும் சனி பகவான்.. ஆனா இந்த விஷயத்தில் எச்சரிக்கை
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கான பலன்கள், பரகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவானைப் பொருத்தவரை முன்ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல பிரதிபலன்களை கொடுப்பார். சனிப்பெயர்ச்சி என்றால் அச்சப்படத் தேவையில்லை. கருணை உள்ளம் கொண்டவர் சனி பகவான். சனி பெயர்ச்சி வருகிற மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு.. அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, சில நன்மைகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது, கைம்பெண்களுக்கு உதவுவது, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பவர்கள், கடின உழைப்பாளிகளுக்கு, மனதார சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களைத் தருவார். பறவை பட்சிகளுக்கு தான தர்மம், ஏழைகளுக்கு தான தர்மம் செய்பவர்களுக்கு கருணை மழை பொழிவார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சி அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்களையும், பாதிப்புகளையும் தரப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசிக்குள்ளாக இருக்க கூடிய முழுமையான நட்சத்திரமாகும். அஸ்வினி 1, 2, 3, 4 ஆம் பாதத்துக்கானது. 12 ஆம் வீட்டுக்கு சனி வருவதால் விரைய சனியாகும். இந்த சனியின் மூலமாக உங்களுக்கு ஏழரை சனி துவங்குகிறது. ஏழரை சனி தொடங்கினாலும், பெரும் தொந்தரவு எதுவும் ஏற்படாது. வெளிநாட்டு முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
இந்த காலகட்டம் உங்களுக்கு சுப விரையத்துக்கான காலகட்டமாக இருக்கும். விரையங்கள் நிறைய நடைபெறும் அதனை கூடுமான வரை சுப விரையமாக மாற்றிக் கொள்வது உங்களின் கைகளில் தான் உள்ளது. பிள்ளைகளை படிக்க வைப்பது, தங்கம் வாங்கி வைப்பது, திருமணம் போன்ற சுப செலவுகள் செய்வது, வீடுகள் கட்டுவது போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் வாய்ப்புகள், நற்செய்திகள் வந்து சேரும்.
பொது சேவை மற்றும் ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கும். ஆலய திருப்பணி, பொதுச் சேவைகளை செய்வதற்கான அமைப்பு உள்ளது. சொந்த ஊரை விட்டு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பெரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாது. அளவுக்கதிகமாக தொழிலில் முதலீடு போட்டு, அதில் லாபத்தை சந்திக்க முடியாமல், முதலீடு தேக்கமடைந்து தொழிலில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரிய அளவில் முதலீடுகள் போட்டு அகல கால் வைக்காமல் இருப்பது நல்லது.
பெரிய முதலீடுகளைப் போடுவது உங்களுக்கு பெரிதான ஏற்றத்தைப் பெற்று கொடுக்காது. தொந்தரவுகளை ஏற்படுத்தும் அமைப்பு உள்ளது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் பெரிய அளவில் ஏற்றம் இருக்காது. குடும்பத்தை நடத்துவதற்கான வளர்ச்சி மட்டுமே கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உறவு நிலைகளில் சிறிய சிறிய மனக் கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வெளியூரில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கும். அஸ்வினி நட்சத்திரக்காரர்களைப் பொருத்தவரை சுப செலவுகள் செய்வது நல்லது. இல்லையெனில் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடனை வாங்கி செலவு செய்யாமல், கையில் இருக்கும் காசை வைத்து சுப செலவுகள் நல்லது.












Click it and Unblock the Notifications