சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பகவானால் யாருக்கு சந்தோஷம்.. யாருக்கு சங்கடம்.. தோஷம் நீங்க பரிகாரம்
சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் ஒருவரின் ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார். திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் டிசம்பர் மாதத்தில்தான் சனி பெயர்ச்சி பரிகார விழா நடைபெறும். சனிபகவான் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறது. சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்: லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானும் ஜென்ம குருவாக அமர்ந்து உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராகு கேதுவும் ஜென்ம ராகுவாகவும் களத்திர கேதுவாகவும் பயணம் செய்கின்றனர். இப்போது சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும்.

ரிஷபம்: சனி பகவான் ரிஷபம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனியின் பார்வை ராசிக்கு 12ஆம் வீட்டில் விழுவதால் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டு யோகம் செல்வதற்கு நேரம் கூடி வந்துள்ளது.
நான்காம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சனி பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க. காதலிப்பவர்கள் பேச்சில் கவனமாக இருங்க. பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. இனி விடிவு காலம், புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். அனைத்திலும் ஏற்றம் தரும் காலம் வரப்போகிறது. நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள் சனிபகவான் அள்ளிக்கொடுப்பார்.
மிதுனம்: அஷ்டமத்து சனி காலம் முடிந்து விட்டது மிதுன ராசிக்காரர்களுக்க பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். காரணம் குரு பகவானும் 11ஆம் வீட்டில் அமர்ந்து லாபத்தை தருகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். தூரதேச பிரயாணம் கிடைக்கும். உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டினை சனி பார்வையிடுவதால் சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும்.
கன்னி: உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். மாணவர்கள் நிறைய மதிப்பெண்களை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு இது செழிப்பான காலம். நிஜமாகவே இது ராஜயோக காலமாகும்.
விருச்சிகம்: சனி பகவான் அதிகம் சோதிப்பது விருச்சிக ராசிக்காரர்களைத்தான். ஏழரை சனி முடிந்தது என்று சந்தோஷப்பட்ட நேரத்தில் ஜென்ம கேது வந்து தலைமேல் அமர்ந்தது. அது முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் அர்த்தாஷ்டம சனி வந்து ஆட்டிப்படைக்கிறது. வேலை இழப்பு, நோய் பாதிப்பு என எத்தனையோ சோதனைகள் சங்கடங்களை சந்தித்து வருகிறீர்கள். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று விரக்தி நிலைக்கே சென்றிருப்பீர்கள். கவலை வேண்டாம் காலம் இருக்கிறது. சனி பகவான் கொடுக்கும் சோதனைகள் உங்களை புடம் போட்ட தங்கமாக மாற்றும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த ஏழரை சனி காலம் முடிவுக்கு வருகிறது. டிசம்பர் மாதம் முதல் முழுமையான ராஜயோகம் தேடி வரப்போகிறது. இது நாள் வரை கஷ்டங்களை அனுபவித்தவர்கள் இனி நல்லவைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.
ஏழரை சனி: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனியாகவும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும் பயணம் செய்கிறது. ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எத்தனையோ சங்கடங்கள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை நாளில் சனிஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். எள் தயிர் கலந்த சாதத்தை சனிக்கிழமை நாளில் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது நல்லது. நீல நிற சங்குபூக்களும் வன்னி மர இலை, வில்வ இலை மாலை கட்டி சனிபகவானை வணங்கலாம்.












Click it and Unblock the Notifications