சனிப்பெயர்ச்சி: சிம்மத்துக்கு அஷ்டம சனியில் அடிச்சது லாட்டரி.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போறீங்க
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் கண்டகச் சனியில் இருந்த அஷ்டமசனி தொடங்கவுள்ளது. ஜூன் மாதம் வரை அஷ்டமசனியின் தாக்கம் இருக்கும். ஜூன் 14 ஆம் தேதி முதல் அதிக நன்மையான யோகத்தை பெறப் போகிறீர்கள். பாதகாதிபதி அஷ்டமத்தில் இருப்பது அதிர்ஷ்டமான பலன்களை அள்ளித் தரும். 6, 7 க்கு உரியவர்கள் 8 இல் இருப்பது திடீர் அதிர்ஷ்டம், யோகம், திருமணம் உண்டாகும்.
காதல் அமைப்புகளில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். இதுவரை வெளியில் செல்லாத காதலர்கள் பயணம் மேற்கொள்வதற்கான அருமையான வாய்ப்புகள் உருவாகும். மன நிறைவோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் எந்தவொரு ஆதரவும் இருக்காது. ஆனால், துணை அல்லது துணைவியாரின் ஆதரவு உண்டாகும். மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி சேர்ப்பீர்கள்.
அசையும், அசையா பொருள் சேர்க்கையின் அனுகூலங்கள் உண்டு. பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு மிகுந்த அனுகூலம் உண்டாகும். காதலனுக்கு காதலியால், காதலிக்கு காதலனால் முன்னேற்றம் உண்டாகும்.
சிம்ம ராசிக்காரர்களின் பெற்றோர்களுக்கு யோகம், ஏற்றம் உண்டாகும். ஜென்மத்தில் கேது வருவதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். திருக்கொல்லிக்காடு கொங்கு சனீஸ்வரர் கோயிலில் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அரை கிலோ நல்லெண்ணெய், பசு நெய், குங்குமம், விபூதியை படைத்து வழிபடுவது நல்லது. அந்த விபூதி, குங்குமத்தை படைத்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
அற்புதத்தை இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்படுத்தும். வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் இளைஞர்கள் விபத்து ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. வண்டி வாகனம், ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். நிம்மதியான தூக்கம் அவசியம். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், அனுகூலத்தையும் கொடுக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கும்.












Click it and Unblock the Notifications