துலாம் ராசிக்கு பங்குனியில் தொட்டது துலங்கும்.. ஆனால் பண விஷயத்தில் ஜாக்கிரதை
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக 5 ஆம் வீட்டில் உட்கார்ந்து உங்களையும், உங்கள் உறவினர்களையும் பாடாய் படுத்திய சூரியன் இப்போது 6 ஆம் வீட்டில் நுழைந்திருக்கிறார். இந்த மாதம் முழுக்க உங்களுக்கு எல்லா வகைகளிலும் வெற்றி உண்டு. கண்டும் காணாமல் இருந்தவர்கள் கோபத்தில் இருந்தவர்கள் கூட வலிய வந்து பேசுவார்கள். எல்லாவிதமான சந்தோஷ செய்திகளும் வந்து சேரும்.
பிள்ளைகளின் கோபங்கள் குறைய ஆரம்பிக்கும். அடுத்தடுத்து அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கும். இனிமேல் ஆரோக்கியமாக மாறுவார்கள். படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உயர்கல்வி குறித்த படிப்பு குறித்த குழப்பங்கள் எல்லாம் நீங்கும். பெற்றோருடன் இருந்து வந்த மனக் கசப்புகள், மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும்.
உங்களுடைய ராசிக்கு 5 ஆவது வீட்டில் செவ்வாய் இருப்பதால் பூர்வீக சொத்து விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாகப் பிரிவினை விஷயங்கள் குறித்துப் பேசும்போது கோபப்பட்டு பேசாமல் இருப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு யோகாதிபதியாக இருக்கக்கூடிய புதன் சற்று பலவீனமாக இருப்பதால் தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த தங்க நகைகளை கவனமாக கையாளுவது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி, லாபத்தைக் காண்பீர்கள். பங்குதாரர்களாலும் உங்களுக்கு யோகம் உண்டு.. உத்தியோகத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் சரியாகி பணிச் சுமை குறையும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
சகோதர வகையில் அனைத்து உதவிகளும் வந்து சேரும். இந்த மாதம் முழுக்க அனைத்து விதமான சந்தோஷங்களையும், நற்பலன்களையும் பெற சபரிமலை சாஸ்தாவான ஐயப்ப சுவாமியை வணங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வாய் பேச முடியாதவர்களுக்கு உதவுவது நன்மை பயக்கும். வெள்ளரிக்காய், இளநீர் தானமாக கொடுப்பது அதிர்ஷ்ட பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications