திருச்செந்தூர் ஆவணித்திருவிழா..சிவப்பு,வெள்ளை,பச்சை சாத்தி அருள்பாலித்த சண்முகர்..பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் எட்டாம் திருநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தியும், 10 மணிக்கு பச்சை சாத்தியும் அருள்பாலித்த சண்முகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய அம்சமான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி அதிகாலையில் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா கடந்த வாரம் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறும் உற்சவர்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகின்றனர். ஏழாம் திருநாளன்று சண்முகம் சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார். எட்டாம் திருநாளன்று வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் எழுந்தருளுவது மரபு.

மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கும் சண்முகர்
திருச்செந்தூரில் முருகப் பெருமான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

சிவப்பு சாத்திய சண்முகர் தரிசனம்
சிவப்பு சாத்தி சப்பரத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். இது ஏழாம் திருநாளான நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. சண்முகர் சிவப்பு நிற பட்டாடை அணிந்து செவ்வரளி, ரோஜா நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரகாரத்தை வலம் வந்தார். சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தின் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வெள்ளை சாத்தி சண்முகர்
அதுபோல வெள்ளை சாத்தி சப்பர ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எட்டாம் திருநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக உலா வந்தார் சண்முகர்.

பச்சை சாத்தி சண்முகர் தரிசனம்
சுவாமி சண்முகருக்கும், வள்ளி-தெய்வானைக்கும் அபிஷேகம், அலங்காரமாகி பகல் 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார்.
இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.

பச்சை சாத்தி தரிசன பலன்கள்
பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண்முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு. சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேரோட்டம்
ஆவணி திருவிழாவின் 10ஆம் திருநாளான ஆகஸ்ட் 26ஆம்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணித்திருவிழாவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications