விருச்சிக ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. தொழிலில் உச்சகட்டம்.. திருமணத்தில் ரொம்ப எச்சரிக்கை
சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேதுவின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் சாதகமான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணத்துக்கு சனி என்ற மைனஸ் இல்லை. ஆனால், உங்கள் ஏழாம் வீட்டை சனி பகவான் பார்க்கிறார். அதனால், திருமணம், மறுமணம் விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணத்தை தள்ளிப் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜாதகத்தில் குருபுத்தி, சுக்கிர புத்தி நடந்து வரும் என்றால் நிச்சயமாக திருமணம் செய்யலாம். ஆனால் யாரோ ஒருவர் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஒத்துவராத திருமண வாழ்க்கை அமைப்பதற்கான வாய்ப்புளளது. ஏழாம் வீட்டில் சனியின் பார்வை இருப்பதால் ஒத்துவராத திருமண வாழ்க்கை அமையும் வாய்ப்புள்ளது. திருமணமே ஆகியிருந்தாலும் உங்களுக்கு நிறைய புரிதல் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மறுமணம் என்பது 11 ஆம் வீடு. அங்கும் சனி பகவான் 7ஆம் பார்வை இருப்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவி விட்டுக் கொடுத்து போகவில்லை எனில் பிரச்சனை தான்.
குழந்தை பாக்கியம்
5 ஆம் வீட்டில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். சனி பகவான் இருப்பதே குருவின் வீட்டில் இருப்பதால் குழந்தை பாக்கியத்தில் பெரிய பிரச்சனை ஏற்படாது. இயற்கை முறையிலேயே குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதுதொடர்பான சிகிச்சைக்கு செல்பவர்கள் மருத்துவர்களிடம் ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக் கொள்வது நல்லது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயம்
எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் விருச்சிக ராசியினர். ஆனால் இந்த காலகட்டத்தில் ஒரு விஷயம் தேவையா, பயமாக இருக்கிறதே, உள்ளுக்குள் ஏதோ தோன்றிக் கொண்டிருக்கும் நிலைமை உண்டாகும். இதுபோன்ற யோசனைகள் வந்தால் அதனை தள்ளிவைப்பது நல்லது. உடல்நிலையில் பிரச்சனைகள் வந்தால் மருத்துவர்களிடம் செல்லக்கூட பயப்படும் சூழல் உண்டாகும்.
என் பெயரை சொல்லு நான் பார்த்துக் கொள்கிறேன் என்பவரிடம் விலகி இருப்பது நல்லது. சிறிய விஷயம் செய்துவிட்டு அதற்கு பெரிய விஷயத்தை உங்களிடம் எதிர்பார்க்கும் சூழல் உருவாகும்.
தொழில்
தொழிலில் பெரிய பாதிப்புகள் இருக்காது. பத்தில் கேது இருப்பதால் வம்சாவளியாக வரக்கூடிய தொழில், நீண்டநாட்களாக செய்து வரும் தொழில் அபிவிருத்தியைக் கொடுக்கும். புதிதாக தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே தொடங்கினாலும் பெரிய லாபங்கள் வராது. முதலீடுகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
வேலை
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரிய பதவியில் தான் இருப்பார்கள். பிடிக்காத துறையில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்த துறைக்கு மாறுவதற்கான வாய்ப்புள்ளது. பேச்சில் இனிமையாகப் பேசுவது நல்லது. வார்த்தையில் கடுமை இருந்தால் வேலையே பறிபோகும் சூழல் உருவாகும். அதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வேலைகளுக்கு முயற்சிப்பவர்கள் அப்பாயிண்மென்ட் ஆர்டர் வந்தால் மட்டும் உங்களுடைய பழைய வேலையை விடுவது நல்லது.
வழக்குகள்
விருச்சிக ராசியினர் வம்பு, வழக்குகள், நீதிமன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகள் உங்களை சுத்தி இருப்பவர்கள். கூட இருப்பவர்களே குழி பறிப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிதாக நீங்களாக கேஸ் போடுவது, பிரச்சனைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.
சொத்துகள்
வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். விற்காத நிலங்களில் கூட புதிதாக ஏதாவதொரு கட்டுமானத்தை கட்டி வாடகைக்கு விடும் யோகம் உண்டாகும். மாற்று வழியினால் வருமானம் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆவணங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ரெஃபரன்ஸில் வந்தாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கடன்கள்
விருச்சிக ராசி, லக்கினக்காரர்களுக்கு கண்டிப்பாக கடன்கள் இருக்கும். 2 ஆம் வீட்டை குரு பார்ப்பதால் அதிக வட்டிக்கு வாங்கியுள்ள கடன்களை அடைத்து, மேனேஜ் செய்வீர்கள். புதிய கடன்களை வாங்கும்போது யோசனை செய்து வாங்கிக் கொள்வது நல்லது.
பரிகாரம்
5 ஆம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் குழந்தைகள், சுகம் என்பது பொருள். குழந்தைகள் உள்ள ஆசிரமங்களுக்குச் சென்று துவரம் பருப்பு, வெல்லம், புளி தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். சாம்பார் சாதம், சர்க்கரைப் பொங்கல் தானமாக கொடுப்பது நல்லது.
வழிபாடு
குரு 2 ஆம் வீட்டில் அமர்ந்து குரு ஸ்தானத்தை பார்ப்பதால் குன்றத்தில் இருக்கக்கூடிய முருகனை வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும். குறிப்பாக, திருச்செந்தூர் முருகனை வழிபடுவது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். குருமார்கள் வழிபாடும் அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications