நடிகை அம்பிகா- ராதாவின் தாயார் சரசம்மா நாயர் மறைவு! கேரளாவை கலக்கிய இரும்பு பெண்! கலங்கும் குடும்பம்
சென்னை: தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகின் 'இரட்டைப் புறாக்கள்' என்று அழைக்கப்படும் பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா ஆகியோரின் அம்மா சரசம்மா நாயர் (87 வயது) காலமானார். கலைத்துறையிலும், அரசியலிலும் ஆழமான பங்கு வகித்த இந்த கலைக்குடும்பத்தின் தூணாக இருந்த அவரது மறைவு, திரையுலகினரையும், அரசியல் பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரசம்மா நாயர் பின்னணி
நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர், கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் வெறும் பிரபலங்களின் தாயாக மட்டுமில்லாமல், தனிப்பட்ட ஆளுமை கொண்ட ஒரு அரசியல் துறை பெண்ணாக இருந்திருக்கிறார்.
அரசியல் ஈடுபாடு
சரசம்மா நாயர் அரசியலில் அளவுகடந்த ஆர்வத்தோடு இருந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதில் தீவிரமாக இருந்தார். அவர் நீண்ட காலம் கேரள மஹிளா காங்கிரஸின் தலைவராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ஆம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் தொடர்ந்ததன் மூலம், அவரது ஆழமான அரசியல் ஈடுபாட்டை புரிந்துகொள்ள முடிகிறது.
தான் அரசியலில் இருந்தாலும், தனது மகள்கள் கலைத்துறையில் சாதிக்கத் தடையில்லாமல் உதவியது இவரது சிறப்பு. சமீபகாலமாக இவருடைய மூத்த மகள் அம்பிகாவும் கூட பல பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரிதன்யாவின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார்.
அதுபோல தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவும் அவர்களுடைய போராட்டத்தில் கலந்து கொண்டார். தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளையும் அம்பிகா செய்து வருகிறார். அதனால் அவரும் அவருடைய அம்மாவை பின்தொடர்கிறார் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
கலைக்குடும்பத்தின் அடையாளம்
சரசம்மா நாயருக்கு பிறந்த அம்பிகா மற்றும் ராதா இருவரும் 80 மற்றும் 90-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே சமயத்தில் கொடிக்கட்டிப் பறந்தவர்கள். அம்பிகா, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, சிறந்த நடிப்புக்காக பெயர்பெற்றவர்.
குடும்ப பாங்கான தோற்றம் மற்றும் துணிச்சலான கதாபாத்திரங்கள் என பல்வேறு தரப்பட்ட வேடங்களில் நடித்து, ரசிகர்களின் மனதை வென்றவர் அம்பிகா. அவர் விவாகரத்துக்கு பிறகு தற்போது சின்னத்திரை சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
ராதாவின் பயணம்
அதேபோல ராதா, தமிழில் 'அலைகள் ஓய்வதில்லை' (1981) போன்ற படங்களின் மூலம் அறிமுகமாகி, பல வெற்றி படங்களில் நடித்தவர். தன்னுடைய அக்கா அம்பிகாவுடனும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இயக்குனர் பாரதிராஜாவின் பார்வையில் கண்டுபிடிக்கப்பட்ட இவர், தன்னுடைய துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
ராதாவுக்கு விஜய் நாயர் என்பவருடன் திருமணம் முடிந்து, இரண்டு மகள்கள் (கார்த்திகா நாயர், துளசி நாயர் - இருவரும் நடிகைகள் தான்) மற்றும் ஒரு மகன் (விக்னேஷ் நாயர்) உள்ளனர். குடும்பத்தை கவனிப்பதற்காக கலைத்துறையில் இருந்து விலகியிருந்தவர், தற்போது மீண்டும் நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக்களில் பங்கேற்று வருகிறார்.
இறுதி சடங்கு
சரசம்மா நாயர் அவர்களது இறுதி சடங்கு, அவரது சொந்த ஊரான திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லாராவில் நடைபெறும் என்று அவரது குடும்பத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும், சரசம்மா நாயரின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இரண்டு தலைமுறை கலைஞர்களைத் திரையுலகிற்குத் தந்த ஒரு சிறந்த தாயையும், அதே சமயம் சமூகத்தில் முக்கிய பங்கு வகித்த ஒரு அரசியல் ஆளுமையையும் திரையுலகம் இழந்திருப்பது பெரிய துயரமே.












Click it and Unblock the Notifications