நான் லைலாவை சைட் அடிச்சேன்.. மேடையில் பேசிய அமீர்.. உடனே கன்னக்குழி அழகி கொடுத்த பதில்
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் காதல் படங்களுக்கென தனி இடம் பிடித்திருக்கும் மௌனம் பேசியதே திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட நடிகை லைலா நேரில் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார். அவருடன் இணைந்து இயக்குநர் அமீரும் திரையரங்கில் படம் பார்த்தது, அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது.
படம் முடிந்து வெளியே வந்ததும், தியேட்டர் வளாகத்தில் ஒரு சிறிய மேடை ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு லைலாவை அமீர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே இடத்தில் சந்தித்த தருணம் ரசிகர்களிடையே உணர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது பேசிய அமீர், "இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிப்பு லைலாவோட நடிப்புதான். அவங்க அந்த கதாபாத்திரத்தை மிக இயல்பாக கொண்டு வந்திருக்காங்க. இப்பவும் அந்த காட்சிகளைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு" என்று மனம் திறந்து பேசினார்.
மேலும், இருவரும் முன்னதாக நந்தா படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். அந்த காலத்தில் தான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட சின்ன சின்ன நினைவுகளையும் சிரிப்புடன் பகிர்ந்தார். நான் லைலாவை அப்போ நிறைய சைட் அடிச்சு இருக்கிறேன் அமீர் சொல்ல, அதை கேட்டு லைலா ஒரு கணம் ஆச்சரியப்பட்டார். ஆனால் அந்த ஆச்சரியம் உடனே ஒரு அழகான புன்னகையாக மாறியது.
பின்னர் அவர் மைக்கை வாங்கி பேசும்போது, "இந்த படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லு. அமீர் சார் மாதிரி ஒரு இயக்குநரிடம் இருந்து இப்படிப்பட்ட பாராட்டை பெறுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. ஐ லவ் யூ டூ சார்" என்று சொல்ல அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போய் இருந்தனர்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் "இது சினிமாவை தாண்டி ஒரு மனிதருக்குள்ள மனசு வெளிப்படும் தருணம்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக லைலாவுக்கும் அமீருக்கும் இடையே இருந்த அந்த இயல்பான பேச்சு, பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்ததாக பலர் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இந்த நேரத்தில் இப்படி எல்லாம் பேசணுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மௌனம் பேசியதே காதல்
மௌனம் பேசியதே படம் வெளியான போது இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த காலத்தில் அதிகமான பிரம்மாண்ட காட்சிகள் இல்லாமல், சாதாரண மனிதர்களின் காதல், அவர்களுக்குள் இருக்கும் மௌன உணர்வுகள் ஆகியவற்றை அழகாகக் காட்டிய படம் இது. கதாபாத்திரங்களின் உணர்வுகளை வார்த்தைகளுக்கு பதிலாக பார்வை, இசை மற்றும் மௌனம் மூலமாக வெளிப்படுத்திய விதம் தான் இந்த படத்தின் பெரிய பலமாக அமைந்தது.
பாடல்கள், பின்னணி இசை, காட்சிகளின் மென்மையான இயக்கம் ஆகியவை சேர்ந்து இந்த படத்தை ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிற்க வைத்தது. குறிப்பாக லைலா, திரிஷாவின் நடிப்பு, அந்த கதாபாத்திரத்தின் எளிமையையும் உணர்ச்சியையும் அழகாக வெளிப்படுத்தியதாக அப்போது விமர்சகர்களும் பாராட்டினர்.
இப்போது இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியிருப்பதால், பழைய ரசிகர்கள் தங்களின் இளமை நாட்களை நினைவுகூர்கிறார்கள். அதே நேரத்தில், புதிய தலைமுறை ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications