குடலை உருவுவது ஹீரோயிசமா? 13 வயசிலேயே கத்தி! இதுதான் எதார்த்த சினிமா? உண்மையை உடைத்த சிறை பட டைரக்டர்
சென்னை: எதார்த்த சினிமா என்ற பெயரில் கழுத்தை அறுப்பது, ரத்தம் தெறிப்பது போன்ற கொடூரமான காட்சிகளை வைத்து, வன்முறையை ஒரு பெருமையான விஷயமாக காட்டுகிறது.. வரும் காலங்களில் சினிமா இன்னும் அதிக வன்முறையுடன் வரக்கூடும், ஆனால் மக்கள் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதில் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் என்று டைரக்டர் சுரேஷ் ராஜகுமாரி கருத்து தெரிவித்துள்ளார்.
Jeeva Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சிறை படத்தின் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி, "எம்ஜிஆர் காலகட்டத்தில் சினிமா எவ்வாறு இருந்தது என்பதை பார்க்க வேண்டியிருக்கிறது.. நாடக துறையிலிருந்து சினிமா உருவான காலத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எளிய மனிதர்களுடன் எளிதாகத் தொடர்பு கொண்டிருந்தன.

அந்த நேரத்தில்தான் நாயக பிம்பம் ஏற்பட்டது.. இந்த நாயக பிம்பம் அரசியலுக்கும் கருத்தியல் ரீதியாக அன்று தேவைப்பட்டது... முக்கியமாக பராசக்தி போன்ற படங்கள் திராவிட இயக்கக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முக்கிய கருவியாக இருந்தன..
எதார்த்த சினிமா
எம்ஜிஆர் காலத்து ஹீரோயிசத்தின் வளர்ச்சியாக ரஜினி, கமல், அதன்பிறகு அஜித், விஜய் போன்றவர்களின் காலம் அமைந்தது. இதற்குப் பிறகு எதார்த்த சினிமா என்ற கட்டத்திற்குள் நுழைந்தோம்..
2010, 2015-க்குப் பிந்தைய காலத்தில் சோஷியல் மீடியா எளிதாகிவிட்டது.. ஸ்மார்ட்போன்களின் வருகையால் மக்கள் உலக சினிமாக்களை எளிதாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.. உலகளவில் வன்முறை, புதிய பாணி படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
ஆனால் வெறும் வன்முறையை சினிமாவில் காட்ட முடியாது.. அந்த வன்முறை சீன்களை, நிஜ வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திதான் பார்க்க வேண்டியுள்ளது.. உதாரணத்துக்கு ஒரு பகுதியில் 'ரவுடி' என்று அழைக்கப்படுபவர், அந்த ஊர் எளிய மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார், அவர்தான் அவர்களுக்காக கேள்வி கேட்பவராக இருப்பார்.. அவர் ஒரு தலைவராகவே பார்க்கப்படுகிறார். அவருக்கான அரசியல் அங்கே நகரும்..
இயக்குநர்கள் பக்குவப்பட வேண்டும்
நிஜ வாழ்க்கையில் யாராவது ஆயுதம் எடுத்ததால் சட்டப்படிதான் தீர்வு காண முடியும். ஆனால், சினிமாவில் தனிப்பட்ட பகைக்காக ஆயுதங்களை எடுத்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். டிவி சீரியல்கள், விளம்பரங்களிலும் வரும் ஆபாசங்கள் வருகின்றன.. அதுபோலவே வன்முறைகளும் ஒரு சமூக மனநிலையாகவே மாறிவிட்டன.
சினிமா என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது ஒரு தொழிலும் கூட லாபத்திற்காக சில விஷயங்கள் செய்யப்பட்டாலும், இயக்குநர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.. அதை தவிர்த்தால், இயக்குனர்கள் பக்குவப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..
பாலியல் உணர்வு என்பது இயற்கையானது, அது மனித இயல்பு.. அதை சினிமா மேலும் தூண்டிவிடுகிறது என்று சொல்லலாம்.. ஆனால் வன்முறை என்பது அப்படி கிடையாது.. சினிமாதான் மனிதர்களுக்குள் வன்முறையை கடத்துகிறது.. சம்பவம் செய்யும் ஹீரோக்களை பெருமையாக சினிமாவில் காட்டுவது, கத்தியை அசால்ட்டாக பயன்படுத்துவது போன்றவை எல்லாமே இன்றைய குழந்தைகளை பாதிக்கிறது.
போதை இளைஞர்கள் - ரீல்ஸ் செய்யும் சிறுவர்கள்
13, 14 வயது சிறுவர்கள் கத்தி எடுக்கிறார்கள்... அதாவது அடுத்தவனை தாக்குவதையும் ஹீரோயிசம் என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இளைஞர்கள் ரீல்ஸ் செய்வதற்காக அப்பாவிகளை மிரட்டுவதும், புகை பிடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற வன்முறைகளுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருட்களே முக்கிய காரணம்.. இயல்பான மனநிலையில் இருக்கும் ஒரு மனிதரால், சக மனிதரை அவ்வளவு கொடூரமாக தாக்க முடியாது.
சினிமா வன்முறையை கொண்டாடுகிறது.. சினிமாவில் ஒரு வன்முறைப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால், அதைத் தொடர்ந்து அதே பாணியில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன..
வன்முறைகள் அவசியமா
எதார்த்த சினிமா என்ற பெயரில் கழுத்தை அறுப்பது, ரத்தம் தெறிப்பது போன்ற கொடூரமான காட்சிகளை வைத்து, வன்முறையை ஒரு பெருமையான விஷயமாக காட்டுகிறது.. வரும் காலங்களில் சினிமா இன்னும் அதிக வன்முறையுடன் வரக்கூடும், ஆனால் மக்கள் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதில் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும். சினிமா உங்களுக்குப் பாடம் எடுக்காது, அது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே..
எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் மது அருந்தாமல் நடித்தார். அதையும் மீறி ஒரு காட்சியில் நடிக்க வேண்டியிருந்தால் 'தைரியமாக சொல்லி மனிதன் தானா' போன்ற பாடல்கள் மூலம் நற்போதனைகள் வழங்கினார்கள்.. அதனால்தான் நாயக வழிபாட்டு பிம்பமானார் எம்ஜிஆர்..
சீரழியும் சினிமா
ஆனால் இன்று சினிமாவில் எதார்த்தம் என்ற பெயரில், சமூகத்தில் நடப்பதை அப்படியே படத்தில் காட்டுவோம் என்று வியாபாரம் செய்வதுதான் ஒரு படைப்பாளியின் நோக்கமா? என்ற சந்தேகம் எழுகிறது.
சினிமாவை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்காமல், சமூகத்தில் தனிமனித விழிப்புணர்வும் அவசியம்.. சினிமா சீரழிக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தால் சமூகம் முன்னேறாது, எனவே மக்களும் பக்குவப்பட வேண்டும்.
உண்மைக்கு நெருக்கமான படங்கள்
சினிமா என்பது ஒரு மேஜிக் போன்றது; மக்கள் எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஆதரிக்கத் தயாராகவே இருக்கிறார்கள். உண்மைக்கு நெருக்கமான சினிமாக்களே அதிகம் இங்கு தேவைப்படுகின்றன.. படங்களில் கமர்ஷியல் அம்சங்கள் இல்லையென்றாலும், அது எதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக இருந்ததால் மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.
வன்முறை இல்லாமலேயே ஒரு நல்ல படத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முடியும்.. இதற்கு என்னுடைய சிறை படம் சிறந்த உதாரணம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications