சேரன் என்னை ரொம்ப திட்டிட்டாரு! எவ்வளவோ போராடினேன்.. வெற்றிக்கொடி கட்டு சூட்டிங்கில் நடந்த சம்பவம்! மீனா உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வந்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா (Meena). 80களிலிருந்து இன்று வரை பல தலைமுறைகளின் ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் அவர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது தன் கரியரில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக வெற்றி கொடி கட்டு படத்தை பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் நடித்த நாட்களை நினைவுகூர்ந்த அவர் சொன்ன சம்பவம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.

மீனா பேட்டி
அந்தப் படத்துக்காக நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனபோது, என்னோட தலைமுடியை பார்த்ததும் சேரன் சார் ரொம்ப கோபப்பட்டாரு. அப்போ நான் இன்னொரு படத்தில் நடித்து கொண்டிருந்ததால் அதற்காக ஹேர் கலரிங் பண்ணி இருந்தேன். அதை பார்த்ததும் "என்ன மீனா இது... இப்படி வந்து நிற்கிறீங்க? எனக்கு இந்த ஹேர் ஸ்டைல் வேண்டவே வேண்டாம். என் வள்ளி இப்படியே இருக்க மாட்டாள்... இப்படியெல்லாம் இருக்க கூடாது. இது என்னால ஏத்துக்கவே முடியாது" என்று ரொம்ப கோபமாக பேசிட்டாரு.
சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்
அதுக்குப் பிறகு நான் "எல்லாரும் இப்போ ஹேர் கலர் பண்ணிக்கிறாங்க... நாம மட்டும் பண்ணக்கூடாதா?" என்று கேட்டேன். ஆனா அவர் உடனே முடியாது என்று சொல்லிட்டாரு. எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. என் அம்மாகிட்ட சொன்னதும் அவங்க "அவர் இவ்வளவு சொல்றாரே... உனக்கே தெரியும் இந்த மாதிரி ஹேர் ஸ்டைல் அந்த கேரக்டருக்கு செட் ஆகாது. ஏன் அடம்பிடிக்கிற?"ன்னு கேட்டாங்க. எனக்கு கோபம் இருந்தாலும் வேற வழியில்லாமல் அந்த கேரக்டருக்காக அப்படி நடிச்சேன்.
வள்ளியின் லுக்
அந்த நேரத்தில் புதுசா ஏதாவது ட்ரை பண்ணணும், எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்கக்கூடாது என்று தான் நான் நினைத்தேன். ஆனா அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போ புரிகிறது. நல்லவேளை நான் ஆசைப்பட்ட மாதிரி ஹேர் ஸ்டைல் வைத்து நடிக்க அவர் ஒத்துக்கொள்ளலை. அவர் அந்த நாளில் அவ்வளவு விடாப்பிடியாக இருந்ததால்தான் அந்த 'வள்ளி' கேரக்டர் இப்போ வரைக்கும் எல்லாருக்கும் இயல்பாக நினைவில் இருக்கிறது என்று அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
2000ஆம் ஆண்டு வெளியான வெற்றிக்கொடி கட்டு படம், சேரன் இயக்கத்தில் உருவான குடும்ப உணர்வுகள் நிறைந்த படமாகும். விவசாயம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவு, குடும்ப பாசம், காதல் - எல்லாம் கலந்து வந்த இந்த படம் அப்போது பெரிய வெற்றி பெற்றது. படத்தில் பார்த்திபன் - மீனா ஜோடி மிகவும் பேசப்பட்டது. கிராமத்து பெண் வள்ளியாக மீனா நடித்த விதம் இன்னும் ரசிகர்களின் மனதில் பசுமையாக உள்ளது.
விருது வாங்கிய படம்
இந்த படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதுடன், குடும்பக் கதையை இயல்பாகச் சொல்லிய படமாக பாராட்டப்பட்டது. சேரனின் இயக்கம் தனியாக பேசப்பட்டது.
இசையும் பாடல்களும் இந்த படத்தின் பெரிய பலமாக அமைந்தது. தேவா இசையில் வந்த பாடல்கள் அப்போது மிகப்பெரிய ஹிட்டாகின. "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலர்", "தென்னை மரத்துல தென்றல் அடிக்கும்" போன்ற பாடல்கள் இன்று வரை கிராமத்து விழாக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
பல க்ளாமர், நகரத்து கதாபாத்திரங்கள் நடித்து வந்த காலத்தில் முற்றிலும் இயல்பான கிராமத்து பெண்ணாக வந்து ரசிகர்களை கவர்ந்த கேரக்டர் தான் 'வள்ளி'. அதனால் தான் அந்த படம் மீனாவின் கரியரில் ஒரு மைல்கல்லாக சொல்லப்படுகிறது.
இப்போ திரும்பிப் பார்க்கும்போது, ஒரு கேரக்டரின் உண்மைத்தன்மைக்காக ஒரு இயக்குநர் எவ்வளவு கவனம் எடுத்தார் என்பதையும், அதற்கு ஒத்துழைத்ததால் தான் அந்த கேரக்டர் இவ்வளவு வருடங்களாக நினைவில் இருக்கிறது என்பதையும் புரிகிறது என்று மீனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஒரு நடிகை - ஒரு இயக்குநர் - ஒரு கேரக்டர்... இந்த மூன்றும் சரியாக சேர்ந்தால் தான் காலம் கடந்தும் பேசப்படும் படங்கள் உருவாகும் என்பதற்கே 'வெற்றி கொடி கட்டு' இன்னும் ஒரு பெரிய உதாரணம்.












Click it and Unblock the Notifications