பன்முகம் கொண்ட புன்னியாமீன்-2வது பாகம்

கேள்வி: இதுவரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். இவற்றுள் அதிகமான நூல்கள் பாட நூல்கள் எனப்படுகின்றனவே?
பதில்: உண்மைதான். நான் எழுதிய நூல்களுள் 72 நூல்கள் போக மீதமானவை பாடவழிகாட்டி நூல்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கான மூல காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கிய நூல்களை வெளியிட்டு சந்தைப்படுத்துவது மிகவும் கடினமானவொரு காரியம். இந்தியாவில் வெளியிடப்படக்கூடிய நூல்களில் ஒரு தொகுதியை நூலகங்களோ, அரசோ கொள்வனவு செய்வதைப் போல இலங்கையில் எத்தகைய ஏற்பாடுகளுமில்லை. இதனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை காணப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிட்டு நான் பல இலட்சங்கள் நஷ்டமடைந்துள்ளேன். இந்நிலையில் நான் ஒரு கல்லூரி ஆசிரியராகவும் அதேபோல தனியார் கல்லூரிகளில் முன்னணி அரசறிவியல் போதகராகவும் இருந்ததினால் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளுடன் எனக்கு நேரடியான தொடர்புகள் ஏற்பட்டன. இதனைப் பயன்படுத்தியே ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடவழிகாட்டி நூல்களை குறிப்பாக அரசறிவியல், வரலாறு, சமூகக்கல்வி போன்ற பாடங்களில் எழுதி வெளியிட்டேன்.
பல்கலைக்கழக பி.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி அரசறிவியல் நூல்களையும் எழுதி வெளியிட்டேன். மேலும், என்னுடைய மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் பாடத்திட்டத்திற்கமைய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். என்னால் எழுதப்பட்ட பாடநூல்களுக்கு அதிகக் கேள்வி இருந்தது. இந்நூல்களால் கிடைத்த இலாபத்தை வைத்து இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்தேன். எனவே, பாடநூல்கள் மூலமாக ஒரு வருமானம் கிடைக்காதவிடத்து என்னால் இலக்கிய நூல்களை இவ்வளவு தூரத்திற்கு எழுதி வெளியிட முடியாது போயிருக்கும்.
கேள்வி: 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகின்றீர்கள். இதைப் பற்றி சற்று கூற முடியுமா?
பதில்: 19ம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக வேண்டியும், தமிழ்மொழியினூடாக சமய, கலாசார, தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி வந்துள்ளனர். ஆனால், இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள் எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும் உயர்மட்ட ஆய்வுகளில் கூட, இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம் இவர்கள் பற்றிய தரவுகள், விபரங்கள், குறிப்புகள் இன்மையே.
இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட, தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன், அவற்றைத் தொடரவில்லை. எனவேதான், இலங்கையிலிருந்து வெளிவந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் பத்திரிகை அனுசரணையுடன் இம்முயற்சியை நான் 2002ம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தேன்.
இன்றுவரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களை வெளியிட முடிந்தது. அத்துடன், http://noolaham.org/wiki இணையத்தளத்திலும் இவற்றை பதிவாக்க முடிந்துள்ளது. மேலும், என் சக்திக்கு எட்டியவாறு தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இவர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி வருகின்றேன். இன்னும் இம்முயற்சி தொடர்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான 'ஞாயிறு தினக்குர"லில் “இவர்கள் நம்மவர்கள்" எனும் தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.
கேள்வி: இம்முயற்சிக்கென இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் அல்லது வேறு யாதாவது நிறுவனங்கள் மூலமாக உதவிகள் கிடைக்கின்றனவா?
பதில்:- இல்லை. முழுமையாக இது என்னுடைய தனி முயற்சியே. உண்மையில் இத்தகைய முயற்சிகளை இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன மேற்கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி இவ்விடத்தில் நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டுவதில் பல செலவினங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபரங்களைத் திரட்டிய பின் அவற்றை நூலுருப்படுத்துவதிலும் என்னுடைய சொந்த முதலீட்டையே நான் மேற்கொள்கின்றேன். இது போன்ற ஆவணப் பதிவுகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருமானத்தைப் பெறுவதென்பது இயலாத காரியம். மேலும், இந்த விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் என் சொந்த பணத்தையே நான் செலவிடுகின்றேன்.
கூட்டுமொத்தமாக இதுவரை 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 14 தொகுதிகளிலும் பல இலட்சம் ரூபாய்களை நான் இழந்துள்ளேன். இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன இலங்கை எழுத்தாளர்களின் நூல்களில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான நூல்களை கொள்வனவு செய்து உதவுகின்றன. என்னுடைய இந்த ஆவணத் திரட்டு நூலை கொள்வனவு செய்து உதவும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றிற்கு பலமுறை விண்ணப்பம் செய்த போதிலும்கூட, அவர்களிடமிருந்து ஒரு பதில் கூட கிடைக்காமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளிவந்த 14 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை மாத்திரம் சில ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்தது)
இலங்கையில் அரசு திணைக்களங்களுடனான இத்தகைய உதவிகளை கோரும்போது அரசியல் செல்வாக்குகள், அரசியல்வாதிகளின் செல்வாக்குகள், பிரதேசவாத செல்வாக்குகள் முதன்மைப் படுத்தப்படுவதினால் சேவையின் பெறுமானத்தை உணர்ந்து செயல்படாத அவர்களிடம் மண்டியிட நான் விரும்புவதில்லை. எவ்வாறாயினும் என் சக்திக்கெட்டியவாறு நான் மேற்கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பயன்தரும் முயற்சி என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இதன் பெறுமானம் என்றோ ஒரு காலத்தில் உணரப்படும்.
கேள்வி: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுக்கள் தகவல்களைப் பெறும் முறை பற்றியும், வகைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் முறை பற்றியும் சற்று கூறுங்கள்.
பதில்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுக்கான தகவல்களை நேரடியாகவும், ஆதாரபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் மரணித்தவர்களாயின் அவர்களின் உறவினர்களிடமிருந்தும் பெறுகின்றேன். இதற்காக வேண்டி தொடர்புகளுக்காக இலங்கையில் ஞாயிறுதினக்குரல் ஆசிரியர் திருவாளர் இராஜபாரதி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் நூலகவியலாளர் என். செல்வராஜா, த. ஜெயபாலன் போன்றோரும்; ஜெர்மனியில் திருவாளர்கள் அருந்தவராசா, சிவராசா, ஜீவகன், புவனேந்திரன் போன்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். புலம்பெயர் ஊடகங்களான உதயன், லண்டன் குரல், காலைக்கதிர், அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி., தீபம் தொலைக்காட்சி, ஜெர்மனியில் மண், அவுஸ்திரேலியாவில் உதயம், இலங்கையில் ஞானம் போன்றன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன. இதன் மூலமாகவே எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களுடனான தொடர்பினை நான் ஏற்படுத்திக் கொண்டு விபரங்களைப் பெறுகின்றேன்.. மேலும், சில தேடல்களின் மூலமாக பழைய எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைப் பெறுகின்றேன்.
இந்த இயந்திர யுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மத்தியில் குறிப்பாக நேரம் போதாமையினால் தேடல் முயற்சிகளினூடாக விபரங்களைத் திரட்டுவதில் பின்னடைவு நிலைதான் காணப்படுகின்றது. விபரத்திரட்டில் எவ்வித வகைப்படுத்தலையும் நான் மேற்கொள்ளவில்லை.
எனக்குக் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமைக் கொடுத்து எழுதுகின்றேன். குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களையே நான் திரட்டுகின்றேன். அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எனது அடிப்படை.
கேள்வி: இந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் மூலம் உங்கள் இலக்கு என்ன?
பதில்: சற்று சிந்திக்க வேண்டிய கேள்வி. 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலிருந்து 21ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம்வரை இலங்கையில் தமிழ்மொழி மூல வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் இனங்காண முடிகின்றது. ஆனால், இவர்கள் அனைவரினதும் விபரங்களைத் திரட்ட முடியும் என்பது நிச்சயமாக என் வாழ்நாளில் முடியாததே. ஏனெனில், ஒரு தனி மனிதனாக நின்று தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் மத்தியில் இதுவரை 350 பேருடைய விபரங்களை ஆதாரபூர்வமாக திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.
தங்கள் கேள்விக்கு என்னுடைய இலக்கைக் குறிப்பிடுவதாயின், தேகாரோக்கிய நிலையில் நான் உயிருடன் உள்ள வரை இயலுமான வரை விபரங்களைத் திரட்டுவதே இம்முயற்சியில் என்னுடைய அடுத்த இலக்கு 500 பேர். பின்பு 1000……. ஆசையும், ஆர்வமும், முயற்சியும் உண்டு. என் தேகாரோக்கியத்தைப் பொறுத்து இந்த இலக்கையடையலாம். அடையாமலும் விடலாம்.
இருப்பினும் ஒரு ஆசை. சுமார் எட்டாண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளையும் முகம்கொடுத்து என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சியை நான் இல்லாத காலங்களில் யாராவது தொடர வேண்டும். அது தனிப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு அரச அன்றேல் சுயேச்சை நிறுவனமாகவும் இருக்கலாம். இதுவரை என்னால் மேற்கொள்ளப்பட்ட சகல ஆய்வுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அவை தொடர்ச்சியான ஆய்வுக்கு வழிவகுக்கும்.
கேள்வி: தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற வாழ்த்துக்கள். சில எழுத்தாளர்களின் விபரங்களை 'தட்ஸ்தமிழ்' இணையத்தளத்திலும் எழுதுவதாக அறிகின்றோம்.. இதை பற்றி கூற முடியுமா?
பதில்: எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை நான் ஞாயிறு தினக்குரலில் முதன்மையாக செய்து வருகின்றேன். தற்போது ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகிவரும் இத்தொடரில் ஒரு குறித்த ஒழுங்கின் அடிப்படையில் செய்து வருகின்றேன். குறிப்பாக எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பிறப்பிடம், வாழ்விடம், பிறந்த தேதி, பெற்றோர், கற்ற பாடசாலைகள், தொழில், எழுத்து, ஊடகம், கலைத்துறையில் ஈடுபாடு, சாதனைகள், பெற்ற விருதுகள், இத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் போன்ற விபரங்கள் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிற்கிணங்க தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விசேட காரணமொன்றின் நிமித்தம் ஒரு துறையை முதன்மைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை 'தட்ஸ்தமிழ்' இணையத்தளத்தில் பிரசுரித்து வருகின்றேன். 'தட்ஸ்தமிழ்' இணையத்தளம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு இணையத்தளமாகும். சர்வதேசரீதியில் இந்த இணையத்தளத்துக்கு வாசகர்கள் உள்ளனர். எனவே, இந்த இணையத்தளத்தில் எமது படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதென்பது சர்வதேச ரீதியிலான ஓர் அறிமுகப்படுத்தலாகவே உள்ளது. இருப்பினும் இத்தகையோரின் அறிமுகம் பிரசுரமானாலும் இவர்கள் நம்மவர்கள் நூற்றொடரிலே இக்குறிப்புகளும் பதிவாக்கப்படும்.
எதிர்காலத்தில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டில் இடம்பெற்றுள்ள அனைவரையும் சர்வதேச மட்டத்திலான அறிமுகத்தில் சேர்க்க விரிவான திட்டமொன்றை வகுத்து வருகின்றேன். இது பற்றிய விரிவான தகவல்களை பின்பு அறிவிப்பேன்.
இவ்விடத்தில் 'தட்ஸ்தமிழ்' இணையத்துக்கும், நண்பர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வழங்க விரும்பினால் உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்
P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA
SRI LANKA.
தொலை பேசி : 0094 -812 -493 892
தொலை நகல் : 0094 -812 -493 746
மின் அஞ்சல் : pmpuniyameen @ yahoo.com
நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை)
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications