Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன சொன்னீங்க... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (6)

Subscribe to Oneindia Tamil

- ராஜேஷ்குமார்

வளர்மதி மனசுக்குள் ஆடிப் போனாள். முகம் வியர்த்து இருதய துடிப்பு உச்சத்துக்கு போனாலும், செல்போனின் மறுமுனையில் இருந்த ஹரியிடம் செயற்கையாய் கோபப்பட்டாள். பதட்டப்படாமல் கேட்டாள்.

" என்ன சொன்னீங்க...... நான் பொய் சொல்றேனா ? "

" ஆமா ..... நீ இப்போ ஆபீஸ்ல இல்லைன்னு எனக்குத் தெரியும். அது பொய் இல்லையா ? "

" சரி, நான் இப்போ எங்கே இருப்பேன்னு நினைக்கிறீங்க ? "

" நீ எங்கே இருப்பேன்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா என்ன ? அந்த ஆதரவற்றோர் பெண்கள் இல்லமான அரவணைப்பில்தானே இருக்கே......? "

கணவன் ஹரி இப்படி கேட்டதும் வளர்மதியின் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வை சட்டென்று உலர்ந்து போக, மனசுக்குள் ஒரு ஆறுதல் எட்டிப் பார்த்தது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 6

" நல்லவேளை..... நான் கமிஷனரைப் பார்க்க வந்தது அவர்க்குத் தெரியவில்லை "

மறுமுனையில் ஹரி கேட்டான். குரலில் கேலி பரவித் தெரிந்தது.

" என்ன ...... மேடத்துகிட்டயிருந்து பேச்சையே காணோம். நான் சொன்னது உண்மைதானே ? "

" உண்மைதான் ..... ஸாரிங்க "

" இதோ பார் வளர்.....! நீ இப்படி ஸாரி சொல்றது எத்தனையாவது தடவைன்னு உனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. இந்த சமூகத்து மேல உனக்கு இருக்கற அக்கறை எனக்கும் இருக்கு. ஆனா நீ காட்ற அளவுக்கு தீவிரம் கிடையாது. மத்தவங்களுக்கு உதவி பண்ண வேண்டியதுதான். அதுக்கும் ஒரு எல்லையிருக்கு. ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க அரசாங்கமே அரவணைப்பு என்கிற பேர்ல ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கும்போது நீ எதுக்காக போய் அதுல மூக்கை
நுழைக்கணும் ...... ? "

" அது வந்துங்க ..... ! "

" வேண்டாம் வளர்..... நீ எதையும் சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ண முயற்சி செய்யாதே. என்னோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுமாதிரியான விஷயங்களெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். அவங்க உன் மேல வெச்சிக்கிற பாசத்தையும் பிரியத்தையும் நீயாகவே கெடுத்துக்காதே... உன்னோட ஆபீஸ்ல கூட உன்மேல வருத்தப்பட்டாங்க.....நீ அடிக்கடி பர்மிஷன் போட்டுட்டு வெளியே போறியாம். இன்னிக்குக்கூட என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடலுக்குப் போகணும்ன்னு பொய் சொல்லியிருக்கே ...... ? "

" அ....அ......அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ? "

" நான் பதினைஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி உன்னோட செல்போனை காண்டாக்ட் பண்ணி "நெட் பேங்கிங்" லாகின் பாஸ்வேர்ட் விஷயமாய் ஒரு சந்தேகம் கேட்க நினைச்சேன். ஆனா உன்னோட போனிலிருந்து "நாட் ரீச்சபிள்" ங்கிற ரெக்கார்டட் வாய்ஸ் மட்டும் தொடர்ச்சியாய் கேட்டுட்டு இருந்தது. உன்னோட போன்ல ஏதோ பிராப்ளம்ன்னு நினைச்சு உன் ஆபீஸோட லேண்ட் லைன் டெலிபோனை காண்டாக்ட் பண்ணினேன். மொதல்ல ஆபீஸ் ரிசப்னிஷ்ட் பேசினா. அப்புறம் உன்னோட செக்சன் ஹெட்லைன் வந்து நீ பர்மிஷன்ல போயிருக்கிறதாய் சொன்னார். என்னோட அத்தைக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகணும்ன்னு நீ சொன்னதாக குறிப்பிட்டார். நானும் புரிஞ்சுகிட்டு உன்னைக் காட்டிக் கொடுக்க விரும்பாமே ஆமான்னு சொல்லி வெச்சுட்டேன்... வேற வழி ? "

" ஸாரிங்க...... "

" இப்ப நீ சொன்ன இந்த ஸாரிதான் கடைசி ஸாரியாய் இருக்கணும். என்னோட அம்மா, அப்பாவுக்கு உன்னோட சமூக சேவை விஷயமெல்லாம் தெரிஞ்சா வீட்ல நிலைமை எப்படி இருக்கும்ன்னு என்னால நினைச்சுகூட பார்க்க முடியலை. புரிஞ்சு நடந்துக்கோ வளர் "

" ம் "

" சரி .... இப்ப நீ அரவணைப்பு இல்லத்திலிருந்து கிளம்பிட்டியா ? "

" இதோ ...... கிளம்பிட்டே இருக்கேன் "

இண்டர்நெட் பேங்கின் மூலம் நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டிலிருந்து ஒரு அமெளண்டை ஹவுஸ் ஒனர்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணனும். சரியான பாஸ்வேர்டைப் போட்டாலும் "எரர்"ன்னு வருது. நீ பாஸ்வேர்ட் ஏதாவது சேஞ்ச் பண்ணியா ? "

" இல்லையே... அப்படி பண்றதாய் இருந்தா உங்ககிட்டே சொல்லிட்டுதானே
பண்ணுவேன் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 6

" அப்புறம்.... பாஸ்வேர்ட்ல என்ன பிரச்சனைன்னு தெரியலை "

" ஒருவேளை சர்வர்ல ஏதாவது டிஸ்டர்பன்ஸ் இருக்கலாம். ஒரு மணி நேரம் கழிச்சு ரீ ட்ரை பண்ணிப் பாருங்க "

" அப்படித்தான் செய்யணும். சரி லைனை கட் பண்றேன். நீ ஆபீஸ் போய் சேர்ற வழியைப்பாரு "

" என்னங்க .... என்மேல கோபம் இல்லையே? "

" எந்த கோபமும் இல்லை.... உனக்கு இந்த சமூக சேவை, பிறரோட பிரச்சனைகளை தீர்த்து வெக்க ஆர்வம் காட்டறது இதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்றேன். என்னோட அம்மா, அப்பாவுக்கு சுத்தமா பிடிக்காது. நீ சமூக சேவை என்கிற பேர்ல ஒருத்தர்க்கு செய்யற உதவி இன்னொருத்தர்க்கு உபத்திரவமாய் இருக்கும். அந்த நபரால உனக்கு ஏதாவது பிரச்சினை வரலாம். உனக்கொரு பிரச்சினை வந்தா அது எனக்கு வந்த பிரச்சினை மாதிரி. எனக்கு பிரச்சினை வந்தா அது நம்ம வீட்டுக்கே வந்த மாதிரி. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியுதா வளர் ?"

" நல்லாவே புரியுதுங்க "

" என்ன புரியுது ? "

" நம்ம வீட்ல இப்ப இருக்கிற சந்தோஷம் காணாமே போயிடும்ன்னு சொல்றீங்க ? "

" அதேதான் " ஹரி சொல்லிவிட்டு மறுமுனையில் செல்போனின் இணைப்பைத் துண்டிக்க வளர்மதியும் தன்னுடைய செல்போனை மெளனமாக்கினாள். அதைக் கைப்பையில் போட்டுக் கொண்டு எதிரில் உட்கார்ந்திருந்த போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியைப் பார்த்தாள். அவளுடைய உதடுகளில் ஒரு புன்னகை அரும்பியிருந்தது.

" வளர்மதி ! உன்னோட ஹஸ்பெண்ட் பேசினது என்னோட காதிலேயும் அரையும் குறையுமா விழுந்தது. அவர் என்ன சொல்ல வர்றார்ங்கிறதையும் நான் புரிஞ்சுகிட்டேன். பெண்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அரவணைப்பு விஷயமே வேண்டாம்ன்னு சொல்ற உன்னோட ஹஸ்பெண்ட்டுக்கும், மாமியார் மாமனார்க்கும் நீ ஒரு போலீஸ் இன்ஃபார்மர் என்கிற விஷயம் தெரிஞ்சா வீட்டோட நிலைமை எப்படியிருக்கும்ன்னு கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு "

" பண்ணிப் பார்த்துட்டேன் மேடம்...... ! "

" இனிமே உனக்கு இந்த போலீஸ் இன்ஃபார்மர் வேலை வேண்டாம். விலகிடு. என்னோட ஆபீஸூக்கு வர்றதையும், போன்ல பேசறதையும் அவாய்ட் பண்ணிடு "

" ஸாரி மேடம் "

" எதுக்கு ஸாரி ? "

" நான் என்னை மாத்திக்கப் போறதில்லை "

" யூ ....மீன் ? "

" இந்த போலீஸ் இன்ஃபார்மர் வேலை கண்டினியூ பண்ண போறேன். அந்த ஈஸ்வர்கிட்டே ஏதோ ஒரு தப்பான விஷயம் இருக்குன்னு தெரிஞ்ச பின்னாடி அதைக் கண்டுபிடிக்காமே விலகிப்போகறதுதான் தப்பு மேடம் "

" உன்னோட ஹஸ்பெண்ட் இவ்வளவு சொல்லியும் நீ உன்னை மாத்திக்கலைன்னா குடும்பத்துல பெரிய பிரச்சினை வருமே வளர்மதி..... ! "

" பிரச்சினை வரட்டும் மேடம். அதை ஃபேஸ் பண்ணி சரிபடுத்திக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க கொடுத்த ஒரு வேலையை பாதியில் விட்டுட்டுப் போக நான் தயாராய் இல்லை...."

" வளர்மதி ! இது விளையாட்டில்லை "

" நானும் அதைத்தான் சொல்றேன் மேடம். இது விளையாட்டில்லை.... விபரீதம்.... ஈஸ்வர் நடத்தி வைக்கிற இலவச திருமணங்களுக்குப் பின்னாடி எதுமாதிரியான விபரீதம் இருக்குன்னு கண்டுபிடிச்சு நான் சொல்றேன் மேடம் ! "

" வளர்மதி ! "

" ஸாரி மேடம்...... ஒரு அநியாயம் நடந்துட்டிருக்குன்னு தெரிஞ்ச பின்னாடியும் என்னால அமைதியாய் இருக்க முடியாது. எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க மேடம். ஒரு நல்ல தகவலோடு உங்களை வந்து பார்க்கிறேன். நான் வர்றேன். தப்பாய் நினைச்சுக்காதீங்க மேடம் "

எழுந்து கொண்டாள் வளர்மதி.

இரவு பதினோரு மணி ஈஸ்வரின் தோப்பு பங்களா

ஈஸ்வரும், அபுபக்கரும் இரண்டாவது மாடியறையின் ஏ.ஸி.காற்றை சுவாசித்தபடி எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு பேர்களின் இடது கையிலும் தங்கத்தை உருக்கியது போன்ற வெளிநாட்டு விஸ்கி கண்ணாடி குவளைகளில் மின்ன வலது கையில் மிளகுத்தூளில் வறுபட்ட சிக்கன் துண்டு தெரிந்தது.

" அபு ! இந்த பிராண்ட் விஸ்கி எப்படி......? ஒரு ஸ்மால் பெக்தான் உள்ளே போயிருக்கு.... ஆனா ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகி போற மாதிரி ஃபீலிங் "

அபுபக்கர் அனலாய் பெருமூச்சுவிட்டார்.

" ஈஸ்வர் ! உனக்கு பயமாவேயில்லையா ? "

" எதுக்கு பயம் ? "

" போலீஸூக்கு இன்ஃபார்மராய் இருக்கிற ஒரு பொண்ணு உன்னோட பர்த்டேக்கு வாழ்த்து சொல்ற மாதிரி வந்து வீட்டையும் உன்னையும் ஸ்மெல் பண்ணிட்டு போயிருக்கா உனக்கு அது ஒரு நெருடலாய் மனசுக்குப்படவே இல்லையா ? "

ஈஸ்வர் விஸ்கி கசியும் வாயோடு சிரித்தார்.

" இதோ பார் அபு... சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த அந்த வளர்மதி ஸ்கூட்டி ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரை வெச்சு அவ வீட்டு அட்ரஸை கண்டுபிடிச்சு அந்த வீட்ல யார் யார் இருக்காங்க. அது எப்படிப்பட்ட குடும்பம் என்கிற எல்லா விபரங்களை உன்கிட்டே சொல்லிட்டேன். அந்தப் பொண்ணு வளர்மதிக்கு சோஷியல் சர்வீஸ் பண்றதுல ரொம்பவும் விருப்பம். அரவணைப்பு இல்லத்துக்கு போன் போட்டு அதையும் செக் பண்ணிகிட்டேன். வளர்மதி ஒரு குடும்பப் பெண். அம்மா, அப்பா, மாமியார், மாமனார், புருஷன் என்கிற நெருக்கமான உறவுகளுக்கு இடையே வாழ்கிற ஒரு பெண் போலீஸூக்கு இன்ஃபார்மராய் இருக்க வாய்ப்பில்லை "

ஈஸ்வர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே டீபாயின் மூலையில் இடம் பிடித்து இருந்த அவருடைய செல்போன் வைபரேஷனில் அதிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். முகம் மாறினார். அபுபக்கர் அதை கவனித்து விட்டு கேட்டார்.

" என்ன ஈஸ்வர் ..... போன்ல யாரு ? "

" போலீஸ் ஷேடோ ஸ்குவாடிலிருந்து நம்ம ஆள் தினகர் கூப்பிடறார் "

" எடுத்து என்னான்னு கேளு "

ஈஸ்வர் செல்போனை நடுக்கமாய் இடது காதுக்குக் கொடுத்தார்.

" என்ன தினகர்..... இந்த ராத்திரியில் போன். ஏதாவது முக்கியமான விஷயமா..... ? "

" முக்கியமான விஷயமாய் இருந்திருந்தா கூட இந்த நேரத்துக்கு உங்களை தொந்தரவுபடுத்தி இருக்கமாட்டேன் ஸார். இது தலைபோகிற விஷயம். அதுதான் உடனே போன் பண்ணிட்டேன் "

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+