• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன மேடம்......பயப்படறீங்களா?.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4)

|

- ராஜேஷ்குமார்

ஈஸ்வர் அபுபக்கர் பேசியதைக்கேட்டு திடுக்கிட்டுப் போனவராய் செல்போனில் குரலைத்தாழ்த்தினார்.

"அபு..... நீ என்ன சொல்றே ?"

" அந்த வளர்மதியோட கதையை முடிச்சுடலாம்ன்னு சொல்றேன் "

" உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.....? ஒரு போலீஸ் இன்ஃபார்மரான வளர்மதி என்மேல சந்தேகப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்ற மாதிரி வந்துட்டு போயிருக்கா.....இந்த நிலைமையில் அவளோட கதையை முடிச்சா போலீஸூக்கு என் மேல சந்தேகம் வராமே இருக்குமா.....? போலீஸ் டிப்பார்ட்மெண்டில் இருக்கிற ஒரு முக்கியமான அதிகாரிக்கு தெரியாமே வளர்மதி என்னை பார்க்க வந்திருக்க முடியாது. அது உனக்குப் புரியலையா ... ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 4

செல்போனின் மறுமுனையில் அபுபக்கர் சிரித்தார்.

" எனக்கு அது புரியாமே இருக்குமா ஈஸ்வர்..... ? வளர்மதியோட கதையை இன்னிக்கோ அல்லது நாளைக்கோ நான் முடிக்கப் போறது இல்லை. ஒரு ரெண்டு வார காலத்துக்கு அவளைக் க்ளோஸா வாட்ச் பண்ணனும். அவ தினமும் எங்கே போறா, யார் யாரையெல்லாம் பார்க்கிறான்னு உன்னிப்பாய் கவனிக்கனும். எல்லாத்துக்கும் மேலாய் அவள் தனியாய் பயணம் செய்யும் நேரங்களை கண்காணித்து அதுக்கு ஏத்த மாதிரி நம்மோட செயல்பாடுகள் இருக்கணும். அதே நேரத்துல உன்கிட்டேயிருந்து எனக்கு கீரின் சிக்னல் வராமல் நான் துரும்பைக்கூட அசைக்கமாட்டேன். நான் இப்போ வளர்மதியை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன். என்னோட கார்க்கு முன்னாடி நூறு மீட்டர் வித்தியாசத்துல அவ முன்னாடி போயிட்டிருக்கா. மிதமான ட்ராஃபிக். ஈஸியாய் அவளை என்னால் ஃபாலோ பண்ண முடியுது......... "

" அபு.... "

" சொல்லு...... "

" நீ அவளை ஃபாலோ பண்றதை நோட் பண்ணிடப் போறா........! "

" அவளுக்கு சந்தேகம் வர்ற மாதிரியா ஃபாலோ பண்ணுவேன் ? எனக்கு முன்னாடி ஒரு கண்டஸா கார் போயிட்டிருக்கு. அதுக்குப்பின்னாடி நான் மறைவா போயிட்டிருக்கேன். அவ ஸ்கூட்டரோட ரியர் வ்யூ கண்ணாடியில் என்னோட கார் தெரிய நியாயமில்லை. நீ போனை "கட்" பண்ணிடாதே....என்ன நடக்குதுன்னு நான் லைவா சொல்லிட்டு வர்றேன் "

" நான் கட் பண்ணல....நீ சொல்லிட்டே வா "

" இப்போ அவ ரேஸ்கோர்ஸ் ரோட்டை க்ராஸ் பண்ணி அவிநாசி ரோட்டுக்குள்ளே நுழைஞ்சு லட்சுமி மில் சிக்னல்ல நின்னுட்டு இருக்கா...ம்... சிக்னல் கிடைச்சாச்சு.....நேரா போறா... அது ஸ்கூட்டியா இல்லை ஏவுகணையான்னு தெரியலை...வேகமாப் போறா...பைக்கை காரை எல்லாம் அனாசயமாய் ஒவர்டேக் பண்றா ...... அவ சாதாரண பெண்ணில்லை. சம்திங் எக்ஸ்ட்ராடினரி....... "

" பார்த்தியா...... நீயே இப்போ பயப்படறே ? "

" இது பயம் இல்லை ஈஸ்வர். அவளை நினைச்சு ஆச்சர்யப்படறேன். அவ போகிற வேகத்துக்கு என்னால ஃபாலோ பண்ண முடியலை. இருநூறு மீட்டர் பின்தங்கிட்டேன் "

" பார்த்து.... ! அவ உன்னோட பார்வையிலிருந்து மறைஞ்சுடப் போறா......! "

" ஈ...ஸ்....வ....ர்"

" என்ன குரல் நடுங்குது ? "

" நீ சொன்ன மாதிரியே பார்வையிலிருந்து அவ மறைஞ்சுட்டா......! "

"அபு..... நீ என்ன சொல்றே.... ?"

" ட்ராஃபிக்ல இப்ப அவ இல்லை.... ஏதோ ஒரு "கட்" ரோட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டான்னு நினைக்கிறேன் "

"நல்லாப் பாரு... ஏதாவது ஒரு பெரிய வாகனத்துக்கு முன்னாடி அவ போயிட்டிருக்கலாம்"

" இல்ல ஈஸ்வர்.. இப்ப எனக்கு முன்னாடி வெகிள்ஸ் எதுவும் இல்லாமே ரோடு வெறுமையாய் இருக்கு..... ரோட்டோட லெஃப்ட் ஸைடில் ஒரு குறுக்கு சந்து தெரியுது.... அந்த சந்துக்குள்ளேதான் வளர்மதி போயிருக்கணும்... நான் இப்ப போனை "கட்" பண்றேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசறேன்.... "

அபுபக்கர் மறுமுனையில் செல்போனை அணைத்து விட ஈஸ்வர் வியர்த்துப் போயிருந்த முகத்தை டவலால் ஒற்றிக்கொண்டு சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி ரிமோட் கண்ட்ரோலால் ஏ.சியின் ஜில்லிப்பை உயர்த்திக்கொண்டார். எப்போதும் இல்லாத அளவுக்கு இதயத்தின் துடிப்பு அதிகமாயிருந்தது.

" கடந்த 5 வருட காலமாய் தடையில்லாமல் போய்க்கொண்டிருந்த பிசினஸில் இப்போது முதன்முதலாய் போலீஸ் இன்ஃபார்மர் என்கிற உருவில் ஒரு ஸ்பீட் பிரேக்கர் ! "

" போலீஸ் டிபார்ட்மெண்டில் இருக்கும் யார்க்கோ மூக்கு வியர்த்திருக்கிறது ! "

" சில லட்சங்களை செலவு பண்ணினால் போதும் ஆள் யார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் "

ஈஸ்வர் யோசிப்பில் விநாடிகளைக் கரைத்துக்கொண்டிருக்க சரியாய் பத்து நிமிஷம் கழித்து அபுபக்கரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 4

" ஈஸ்வர் "

" என்னாச்சு அபு.... வளர்மதியை கண்டுபிடிச்சுட்டியா.....? "

" இல்லை.... அவ போன சந்துக்குள்ளே என் கார் போக இடம் இல்லை. குறுகலான சந்து. காரை ரோட்டோரமாய் நிறுத்திட்டு சந்துக்குள்ளே நடந்து போய் அவளோட ஊதா நிற ஸ்கூட்டி எங்கேயாவது பார்க் பண்ணப்பட்டு இருக்கான்னு பார்த்தேன். அந்த ஸ்கூட்டி என்னோட கண்ணில் படலை "

" சந்தோட மறுபக்கம் எந்த ரோட்ல முடியுதுன்னு பார்த்தியா .....? "

" ம்... பார்த்தேன். அது ஆர்.ஜி.நகர் ஏரியா. எந்த பக்கம் திரும்பினாலும் அப்பார்ட்மெண்ட்ஸ். எந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளே போய் எப்படி தேடறது .....? "

" சரி.... விடு.. மறுபடியும் அவ நம்ம கண்ணுல படாமலா போயிடுவா "

" அவ யாரு எங்கேயிருக்கான்னு விசாரிச்சியா ஈஸ்வர் ? "

" ம்...விசாரிச்சேன். அவ ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கவுண்ட் ஆபீஸராய் ஒர்க் பண்றதாய் சொன்னா. ஆனா கம்பெனியோட பேரு என்னான்னு கேட்க மறந்துட்டேன். ஆனா இன்னொரு தகவல் சொன்னா "

" என்ன .....? "

" அரவணைப்பு என்கிற ஒரு ஆதரவற்ற பெண்களின் நல்வாழ்வு அமைப்புக்கு ஆலோசகராய் இருக்கிறதாய் சொன்னா. கல்யாணமாயிருக்கு. புருஷன்.......... ஐ.பி.எம் கம்பெனியில் வேலை பார்க்கிறதாகவும் சொன்னா"

" அவ வீட்டு அட்ரஸை கேட்டியா .....? "

டென்ஷன்ல கேட்க மறந்துட்டேன் அபு......"

" சரி....இப்ப உடனடியாய் ஒரு காரியம் பண்ணு "

" என்ன ? "

" அந்த ஆதரவற்றோர் பெண்களின் நல்வாழ்வு அமைப்பான அரவணைப்பு விடுதி எங்கே இருக்குன்னு கூகுள்ல போய்ப் பாரு. கண்டிப்பா விபரம் கிடைக்கும். போன் நெம்பரும் இருக்கும். அந்த நெம்பர்க்கு போன் பண்ணி வளர்மதியைப் பற்றி விசாரி.... நான் கார்ல ஒரு மணி நேரம் உட்கார்ந்து வெயிட் பண்ணி மறுபடியும் இந்த சந்திலிருந்து வெளியே வர்றாளான்னு பார்க்கிறேன் "

" சரி " என்று சொன்ன ஈஸ்வர் செல்போனை அணைத்துவிட்டு கூகுள் ஆப்ஷனை உயிர்ப்பித்து அரவணைப்பு பற்றிய விபரம் தேட அடுத்த சில நிமிடங்களில் சரவணம்பட்டியில் இருந்த அந்த அமைப்பை பற்றிய எல்லா விபரங்களும் கிடைத்தது. லேண்ட் லைன் டெலிபோன் எண்ணை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொண்டு அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

" அது அரவணைப்பு இல்லமா .....? "

" ஆமா " ஒரு பெண் பதில் சொன்னது.

" அங்கே வளர்மதி இருக்காங்களா .....? "

" வளர்மதி வாரத்துக்கு ஒரு தடவை அதுவும் ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம்தான் வருவாங்க.... ஆமா... நீங்க யாரு..... ? "

" நான் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி பண்ற ஒரு டோனர். எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வளர்மதி என்கிற பெண் அரவணைப்பு விடுதியில் வேலைப் பார்க்கிறதாகவும் அந்தப் பொண்ணு மூலமா டொனேஷன் தரலாம்ன்னு சொன்னார். அது உண்மையான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக போன் பண்ணினேன் "

" வளர்மதி இங்கே வேலைப் பார்க்கிற பொண்ணு இல்லீங்க.... இங்கே இருக்கிற பொண்ணுகளுக்கு கவுன்ஸிலிங் கொடுக்கிறதுக்காக வாரத்துக்கு ஒரு தடவை வந்துட்டுப் போவாங்க. அவ்வளவுதான். இந்த விடுதிக்கு நிர்வாகி நான்தான். நீங்க டொனேஷன் தர்றதாய் இருந்தா என்கிட்டேயே தரலாம். உங்களால வர முடியலைன்னா சொல்லுங்க. நானே நேர்ல வந்துடறேன் ஸார் "

" உங்க பேரு.....? "

" நித்யா "

" டொனேஷன் தர்றது விஷயமாய் நாளைக்குக் காலையில் போன் பண்றேன்மா "

ஈஸ்வர் பேச்சை முடித்துக்கொண்டு அதே நிமிஷம் அபுபக்கரை தொடர்பு கொண்டார்.

"அபு....... நான் அந்த அரவணைப்பு நிர்வாகிகிட்டே பேசிட்டேன். வளர்மதி அந்த விடுதிக்கு ஆலோசகராக இருப்பது உண்மைதான் "

" அப்படீன்னா வளர்மதி உண்மையிலே உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லத்தான் வந்திருப்பான்னு நினைக்கிறியா ? "

" ஆமா..... "

" போலீஸ் கமிஷனரோட பி.ஏ. சுதாகர்ராவ் என்னோட ஃப்ரண்ட் சிராஜூதீன்கிட்டே வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மர்ன்னு ஏன் பொய் சொல்லணும்.... ?

" இதோ பார் அபு..... கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்ன்னு சொல்லுவாங்க. இன்னிக்கு நடந்த விஷயமும் அப்படித்தான் "

" ஈஸ்வர் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? "

" என்ன.....? "

" போலீஸ் இன்ஃபார்மர்ஸ் தன்னைப்பற்றின எல்லா உண்மைகளையும் சொல்லிடுவாங்க. ஆனா தான் ஒரு போலீஸ் இன்ஃபார்மர் என்கிற உண்மையை மட்டும் கடைசிவரைக்கும் சொல்லமாட்டாங்க. அந்த வளர்மதியை நீ நம்பலாம். ஆனா நான் நம்பமாட்டேன் "

" இப்ப ..... நீ என்ன சொல்ல வர்றே ? "

" வளர்மதி எப்படியும் உன்னைத் தேடிகிட்டு இன்னொரு தடவை உன் வீட்டுக்கு வருவா.....அப்படி அவ வந்தா அதுவே அவளுக்கு கடைசி தடவையாய்

இருக்கணும் "

" அபு....! அவசரப்பட்டு நாம ஏதாவது பண்ணி சிக்கலில் மாட்டிக்குவோமோன்னு பயம்மா இருக்கு ! "

" ஏதாவது பண்ணாம இருந்தாத்தான் சிக்கல்ல மாட்டிக்குவோம். உனக்கு புரியற மாதிரி ஒரு விஷயம் சொல்லட்டுமா ? "

" என்ன ? "

" நாம கண்ணை திறந்துகிட்டே தூங்க வேண்டிய நேரம் இது"

*******

வளர்மதி தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்பீட் ரெக்கவர் ஹாஸ்பிடலுக்குள் நுழைத்து பார்க்கிங்கில் இடம் பார்த்து நிறுத்திவிட்டு உள்ளே போய் லிஃப்டில் பயணித்து முதல் மாடியில் இருக்கும் ரிசப்னிஷ்ட் கெளண்டரை நெருங்கி லேப்டாப்பில் கவனமாய் இருந்த அந்த பெண்ணிடம் கேட்டாள்.

" போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியைப் பார்க்க முடியுமா ? "

" நீங்க..... ? "

" என் பேர் வளர்மதி "

" உங்களை அவர்க்குத் தெரியுமா ..... ? "

" தெரியும் "

" ஒரு நிமிஷம் " என்று சொன்ன ரிசப்னிஷ்ட் இண்டர்காம் போனை எடுத்து பேசிவிட்டு வளர்மதியை ஏறிட்டாள்.

" நீங்க போய் பார்க்கலாம் "

வளர்மதி மறுபடியும் பக்கத்தில் இருந்த லிஃப்டில் உயர்ந்து ஐந்தாவது மாடியில் இருந்த, வி.ஐ.பி.பேஷண்ட்ஸ் அறைகளில் ஒன்றான ஏழாம் எண் அறைக்கு முன்பாய் போய் நின்றாள். கதவைத் தள்ளினாள். அது சத்தமில்லாமல் திறந்து கொள்ள உள்ளே தயக்கமாய் நுழைந்தாள்.

சற்றே பெரிதான சுத்தமான அந்த அறையின் நடுவே உயர்த்திப் போடப்பட்டிருந்த கட்டிலின் மேல் உல்லன் சால்வையைப் போர்த்துக்கொண்டு ஐம்பது வயதின் ஆரம்பத்தில் இருந்த திரிபுரசுந்தரி உட்கார்ந்திருந்தாள். போலீஸ் பயிற்சியின்போது உருவாகியிருந்த உடம்பு நோய்வாய்ப்பட்ட அந்த நிலையிலும் கம்பீரம் குறையாமல் தெரிந்தது.

" எப்படி இருக்கீங்க மேடம் ? " வளர்மதி கேட்டுக்கொண்டே பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

" அயாம் ஃபைன்... சாதாரண வைரல் ஃபீவர்தானே ? நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவேன்....அது சரி.... நீ போன காரியம் என்னாச்சு ? "

" அந்த ஈஸ்வரைப் பார்த்து பேசிட்டுதான் வர்றேன் மேடம். ஆள் சரியில்லை. பார்க்கிற பார்வையில் நிறைய பொய் தெரியுது. நான் ஈஸ்வர்கிட்டே பேசிட்டு இருக்கும்போதே அவர்க்கு ஒரு போன்கால் வந்தது. என் எதிரில் பேச விரும்பாமல் ரெண்டு அறை தள்ளிப் போய் பேசிட்டு வந்தார். அந்த நிமிஷத்திலிருந்து அவரோட முகம் சரியில்லை. வேர்த்து வழிந்தார். என்னைப் பார்த்த பார்வையில் ஒருவிதமான சந்தேகம் தெரிந்தது "

திரிபுரசுந்தரி முகம் மாறினாள். " ஒருவேளை நீ போலீஸ் இன்ஃபார்மர் என்கிற விஷயம் அந்த ஈஸ்வருக்கு தெரிஞ்சிருக்கலாம் "

" அப்படி தெரிய வாய்ப்பில்லை மேடம் "

" வேண்டாம் வளர்மதி.....இனிமேல் உனக்கு இந்த போலீஸ் இன்ஃபார்மர் வேலை வேண்டாம். உன்னோட கணவர் ஹரிக்கும், மாமியார் மாமனார்க்கும் தெரியாமே இப்படிப்பட்ட வேலை பார்க்கிறது சரியில்லை "

" என்ன மேடம்......பயப்படறீங்களா ? "

" கொஞ்சம் பயம் வருது.... ஏன்னா அந்த ஈஸ்வர் பற்றி கேள்விப்படற விஷயங்கள் விபரீதமாய் இருக்கு.... ! " என்று சொன்ன திரிபுரசுந்தரி தன் தலையணைக்குக் கீழே கையைக்கொண்டு போய் சிவப்பு நிற நாடா கட்டப்பட்ட ஃபைல் ஒன்றை எடுத்தாள்.

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X