• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விபரீதங்கள் இங்கே விற்கப்படும்- (3)

|

- ராஜேஷ்குமார்

ஈஸ்வரின் ஒட்டுமொத்த உடம்பும் 4.5 ரிக்டர் அளவுக்கு அதிர்ச்சியில் ஆட்டம் கண்டது.

"அபு..... ! நீ என்ன சொல்றே ? என்னைப் பார்க்க வந்திருக்கிற அந்த வளர்மதி என்கிற பெண் ஒரு போலீஸ் இன்ஃபார்மரா....... ? "

" ஆமா "

" உனக்கு எப்படி தெரியும் ? "

" ஈஸ்வர்.. .நீ ஒரு ஏ.ஸி. ரூமுக்குள்ளே உட்கார்ந்துகிட்டு லேப்டாப்பைப் பார்த்துகிட்டே பிசினஸ் பண்றவன். நான் வெளியுலகத்தைப் பார்த்துகிட்டே பிசினஸ் பண்றவன். க்யூ பிராஞ்ச்ல சிராஜூதீன்னு ஒரு போலீஸ் ஆபீஸர் எனக்கு ஃப்ரண்டாய் இருக்கிற விஷயம் உனக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்

"தெரியும்.....ஒரு தடவை ஏதோ ஒரு மேரேஜ் ரிசப்ஷன்ல நீ அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சிருக்கே. நல்ல உயரம். வழுக்கைத்தலை."

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 3

"அவரேதான்....! இந்த வளர்மதி என்கிற பெண்ணை ஒரு நாள் கமிஷனர் ஆபீஸில் ஏதேச்சையாய் பார்த்தேன். அந்த சமயத்துல சிராஜூதீனும் என்கூட இருந்தார். அவர்தான் வளர்மதியை பார்த்துட்டு இந்தப் பொண்ணு ஒரு போலீஸ் இன்ஃபார்மர். கமிஷனர்கிட்டே மட்டும்தான் பேசும். வாரத்துக்கு ஒரு தடவை வரும். சிட்டிக்குள்ளே எதுமாதிரியான சட்ட விரோத செயல்கள் நடந்தாலும் கமிஷனரோட தனிப்பட்ட கவனத்துக்கு கொண்டு வர்றது இந்த வளர்மதிதான்னு சொன்னார் "

"சிராஜூதீனுக்கு இந்த விஷயம் எப்படி தெரியும். யார் சொன்னாங்க ? "

" கமிஷனரோட பி.ஏ. ஒருத்தர் இந்த விஷயத்தை சிராஜூதீனுக்கு சொல்லியிருக்கார். அந்த பி.ஏ.வோட பேரு சுதாகர்ராவ். அவர் இப்ப டியூட்டியில் இல்லை. ஆறு மாசத்துக்கு முன்னாடி ரிடையர்ட் ஆயிட்டார். சுதாகர்ராவ் ஒரு விஷயம் சொன்னா அது நூறு சதவீத நம்பகத்தன்மையோடுதான் இருக்கும் "

"அபு....... நீ சொல்ற விஷயம்......மனசுக்கு ரொம்பவும் அதிர்ச்சியாய் இருக்கு. நாம் எது மாதிரியான பிசினஸை பண்ணிட்டு இருக்கோம்ன்னு வளர்மதி ஸ்மெல் பண்ணியிருப்பாளா ? "

"அப்படி ஸ்மெல் பண்ணியிருந்தா உன்னைத் தேடி வளர்மதி வந்து இருக்கமாட்டா.... நேரிடையா போலீஸோடு வந்து இருப்பா..... "

" சரி... இப்ப எதுக்காக வந்திருப்பான்னு நினைக்கிறே ? "

" 20 லட்ச ரூபாயே செலவில் 9 பெண்களுக்கு நீ கல்யாணம் பண்ணி வெச்சது போலீஸூக்கு நெருடலாய் இருந்திருக்கணும்..... "

" இதுல என்ன நெருடல் ? "

" என்ன ஈஸ்வர்..... நெருடல் என்னான்னு உனக்கு நிஜமாவே தெரியாதா..... இல்லே தெரிஞ்சு வெச்சுகிட்டே .......தெரியாத மாதிரி கேட்கிறியா ? "

"புரியுது அபு.... எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு குழப்பமாய் இருக்கு..."

" நான் சொல்றபடி கேளு "

" சொல்லு "

" டென்ஷனை கொஞ்சம் கூட காட்டிக்காமே அவகிட்டே பேசு. வேர்த்து வழியாதே. உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றதுக்காக வந்த வளர்மதிக்கு ஸ்வீட், காரம், காப்பி கொடு. அவ கேட்கிற கேள்விகளுக்கு யோசிச்சு பதில் சொல்லு. தேவையான இடங்கள்ல மட்டும் பொய் பேசு. அந்த பொய்யும் உண்மை மாதிரி தெரியணும் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 3

" அபு "

" என்ன ? "

" வளர்மதி இங்கே இருக்கிறது உனக்கு எப்படி தெரியும். யார் சொன்னாங்க ? "

" யாரும் சொல்லலை.... நான் பார்த்தேன் "

" பார்த்தியா எப்படி ? "

" உன்னை நேர்ல பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு போலாம்ன்னு பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்தேன். தெருமுனையில் என்னோட கார் நுழையும் போதே ஸ்கூட்டியில் வந்த வளர்மதியை நான் பார்த்துட்டேன். அவளைப் பார்த்த உடனேயே நான் உஷாராகி காரை ரோட்டோரமாய் ஒரு மரத்துக்குக் கீழே பார்க் பண்ணிட்டேன். ஒரு போலீஸ் இன்ஃபார்மரான வளர்மதி உன்னைப் பார்க்க எதுக்காக வரணும்ன்னு யோசிச்சேன். எதுவும் பிடிபடலை. சரி உள்ளே போன வளர்மதி வெளியே வரட்டும்ன்னு கார்லயே உர்கார்ந்து வெயிட் பண்ணிட்டிருந்தேன். உள்ளே போனவ வெளியே வர்ற மாதிரி தெரியலை. என் மனசுக்குள்ளே லேசா ஒரு பயம் எட்டிப் பார்த்தது. ஒரு போலீஸ் இன்ஃபார்மரான வளர்மதிகிட்டே நீ எதையும் உளறிவிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் நான் உனக்கு போன் பண்ணி அவளுக்கு தெரியாமே ரூமைவிட்டு வெளியே வந்து பேசச் சொன்னேன் "

" நல்லவேளை போன் பண்ணினே ? "

" சரி போனை கட் பண்ணிட்டு அவகிட்டே போய் பேசு.... பேச்சில எந்த வித்தியாசமும் தெரிய வேண்டாம். அவ வீட்டை விட்டு வெளியே வந்ததும் நான் அவளை ஃபாலோ பண்ணி எங்கே போய் யாரைப் பார்க்கிறான்னு தெரிஞ்சுகிட்டு அப்புறமாய் உன்னை வந்து பார்க்கிறேன் "

" அபு...... கொஞ்சம் பயமாயிருக்கு "

" என்ன ஈஸ்வர்.....ஒரு போலீஸ் இன்ஃபார்மர் அதுவும் ஒரு பொண்ணு வந்ததுக்கே இப்படி ஆடிப் போயிட்டே? சட்டத்துக்குப்பிடிக்காத ஒரு வேலையை பண்ண ஆரம்பிச்சுட்டா உடம்புக்குள்ளே இருக்கிற பயத்தை எல்லாம் வழிச்சு வீசிடணும்...... நம்மை கண்டுபிடிக்கிற அளவுக்கு போலீஸ் புத்திசாலிகளாய் மாறிட்டா நாம அவங்ககிட்டே மாட்டிக்காத அளவுக்கு புத்திசாலிகளாய் மாறணும். இனிமேல் நீயும் சரி, நானும் சரி, எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நிமிஷங்கள். அந்த வளர்மதியைப் போய்ப்பாரு. ரூமை விட்டு வெளியே வந்துடப் போறா "

அபுபக்கர் மறுமுனையில் செல்போனின் இணைப்பைத் துண்டித்துவிட ஈஸ்வர் வியர்த்துப் போயிருந்த முகத்தையும் கழுத்தையும் கர்ச்சீப்பால் ஒற்றிக்கொண்டு சிட்அவுட்டினின்றும் வெளிப்பட்டு வளர்மதி இருந்த அறைக்குள் நுழைந்தார்.

வளர்மதி "கசந்த தேன்துளிகள்" புத்தகத்தைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்தாள்.

"என்னம்மா டாக்டர் ராபர்ட் ஸ்டீபனோட ஆர்டிகளை படிச்சியா .... ? " ஈஸ்வர் இயல்பான குரலில் கேட்டுக்கொண்டே அவளுக்கு எதிரே போய் உட்கார்ந்தார்.

" ஸார்.... இந்த புத்தகம் உண்மையிலேயே வாழ்வியல் தத்துவங்களை எடுத்துச் சொல்கிற அற்புதமான புத்தகம். நீங்க செல்போன் பேசிட்டு வர்றதுக்குள்ளே தி கிரேட் சயிண்டிஸ்ட் ஹெண்டார்ஸன்னின் லாஸ்ட் மினிட் கட்டுரையையும் படிச்சுட்டேன் "

ஈஸ்வர் வரவழைத்துக் கொண்ட சிரிப்போடு சொன்னார். என்னோட மனமாற்றத்துக்கு காரணம் என்னான்னு இப்ப உனக்கு புரியதாம்மா .... ? "

" நல்லாவே புரியுது ஸார்..... அந்த ஒன்பது பெண்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சது ஒரு புண்ணியமான காரியம். இதுமாதிரியான நல்ல காரியங்களை நீங்க தொடர்ந்து பண்ணிட்டே இருக்கணும் ஸார்" சொல்லிக்கொண்டே எழுந்தாள் வளர்மதி.

" என்னம்மா புறப்பட்டுட்டியா .... ? "

" ஆமா ஸார்..... "

" ஒரு பத்து நிமிஷம் உட்காரம்மா..... என்னோட பிறந்தநாளுக்கு வந்திருக்கே. ஸ்வீட், காரம், காப்பி சாப்ட்டுட்டு போலாம் "

" வேண்டாம் ஸார்..... நான் கிளம்பறேன் "

" என்னம்மா இது.... நீ பாட்டுக்கு வந்தே எனக்கு வாழ்த்து சொன்னே.... இப்போ கிளம்பிப் போயிட்டே இருக்கே.... உன்னைப்பத்தி எதுவுமே சொல்லலையேம்மா .... ? "

" ஸார்.... என் பேரு வளர்மதி. ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கவுண்டட் ஆபீஸராய் ஒர்க் பண்றேன். அது தவிர "அரவணைப்பு" என்கிற ஒரு ஆதரவற்ற பெண்களின் நலவாழ்வு அமைப்பு ஆலோசகராகவும் இருக்கேன். உங்களை மாதிரியான குட் க்வாலிடி பர்சன்ஸ் ஆதரவற்ற பெண்களுக்கு உதவி செய்யும்போது அவங்களைத் தேடிப் போய் பாராட்டறது என்னோட பழக்கம்..... அதுவும் வித்தியாசமான முறையில் பாராட்டறது எனக்கு பிடித்தமான விஷயம். அதான் ஃபெஸ்டீவ் துப்பாக்கியோடு வந்து ஒரு த்ரில்லான சந்தோஷத்தை உங்களுக்கும் கொடுத்து நானும் என்ஜாய் பண்ணினேன் "

ஈஸ்வர் கலக்கத்தை மறைத்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தார்.

" எனக்கும் வாழ்க்கையில் இந்த "த்ரில்" பிடிக்கும். பை....த.....பை....... உனக்கு கல்யாணமாயிடுச்சாம்மா .... ? "

" ஆயிடுச்சு ஸார் "

" அவர் என்ன பண்றார் "

" ஐ.பி.எம். கம்பெனியில் சாஃப்ட்வேர் என்ஜினியராய் ஒர்க் பண்றார் "

" கல்யாணம் கூட சமீபத்துலதான் நடந்திருக்கும்ன்னு நினைக்கிறேன் "

" ஆமா ஸார்.... மூணு வருஷமாச்சு "

" நீ ஆலோசகராக இருக்கிற "அரவணைப்பு" பெண்கள் நல நலவாழ்வு அமைப்புக்கு ஏதாவது உதவி வேணும்ன்னா சொல்லும்மா. பண்ணிடலாம் "

" தேவைப்படும்போது நானே நேர்ல் வர்றேன் ஸார்" சொல்லிக் கொண்டே வளர்மதி எழுந்தாள்.

" அடிக்கடி வந்துட்டு போம்மா "

" தேங்க்யூ ஸார் "

வளர்மதி வெளியேறி பங்களாவின் கம்பெளண்ட் கேட்டை கடந்து தன்னுடைய ஸ்கூட்டியை நெருங்கும்வரை மாடி ஜன்னல் வழியாய் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வர் தன்னுடைய செல்போனை எடுத்து அபுபக்கரைத் தொடர்பு கொண்டார்.

" அபு..... ! "

" நான் பார்த்துட்டேன். அவ எங்கே போறான்னு ஃபாலோ பண்ணிடறேன்"

"ஜாக்கிரதை... நீ அவளை ஃபாலோ பண்றதை ஸ்மெல் பண்ணிடப் போறா. அவளை சாதாரணப் பெண்ணாய் என்னால நினைக்க முடியலை "

" நீ அவளை நினைச்சு பயப்படறேன்னு நினைக்கிறேன் "

" கொஞ்சம் ..... "

" நாம பண்ற பிசினஸூக்கு இந்த கொஞ்ச பயமும் இருக்கக்கூடாது.... பயம் கரையான் மாதிரி "

"என்ன பண்ணலாம்ங்கிறே ? "

" இந்த வாரத்துல ஒரு கெட்ட நாள் பார்த்து அவளை முடிச்சுடலாம். ஒரு பாம்பு வீட்டுக்குள்ளே நுழையறதும், ஒரு போலீஸ் இன்ஃபார்மர் வீட்டுக்குள்ளே நுழையறதும் என்னைப் பொறுத்தவரையில் ரெண்டும் ஒண்ணுதான் ..... ! "

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X